பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய ஒருங்கிணைந்த பயண அட்டை முறை விரைவில் அறிமுகம்: போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயிலில் ஒரே டிக்கெட்டில்   பயணம் செய்ய ஒருங்கிணைந்த பயண அட்டை முறை விரைவில் செயல்படுத்தப்படும் என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தனி நபர் வாகன பயன்ப்பாட்டை அதிகரிப்பதால் போக்குவரத்து நெரிசலை குறைக்க பொதுப்போக்குவரத்தை பயன்படுத்த அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. சென்னையில் பெரும்பாலான பகுதிகளுக்கு மாநகர பேருந்துகள் இருப்பதாலும்,  பயணக்கட்டனம் குறைவாக இருப்பதன் காரணமாக பேருந்துகளைப் பயன்படுத்தவே மக்கள்  விரும்புகின்றனர். மேலும் அதேபோல மின்சார ரயிலிலும் கட்டணம் குறைவு.

நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய சூழலில் பொது போக்குவரத்தை மக்கள் விரும்புகின்றகள். ஆனால் மெட்ரோ ரயிலில் கட்டணம் சற்று கூடுதலாக இருந்தாலும் ஏசி உள்ளிட்ட வசதிகள் இருக்கின்றன. மாநகர பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என மூன்று பொது போக்குவரத்துகளை பயன்படுத்தும் போதும் தனித்தனியே பயணச்சீட்டு எடுத்து பயணிக்க வேண்டியுள்ளது. இதனால் நேர விரயமும் அலைச்சலும் பயணத்தில் சிரமமும் ஏற்படுகிறது. இதை தவிர்க்க ஒருங்கிணைந்த பயண அட்டை முறையை தமிழ்நாடு போக்குவரத்துத் துறை ஏற்படுத்தவுள்ளது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் ஒரு ஸ்மார்ட் அட்டையை பயன்படுத்தி அனைத்து பொது போக்குவரத்திலும் பயணிக்கலாம். இந்தியாவிலும் டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது. சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் பறக்கும் ரயில் போன்ற அனைத்து பொது போக்குவரத்துக்களின் கட்டணம், பயணிகளின் தகவல்களை ஒருங்கிணைக்கும் பணியை  சென்னை ஒருங்கிணைந்த  பெருநகர போக்குவரத்து குழுமம் ‘கும்டா’ மேற்கொள்கிறது.  இந்நிறுவனம் சார்பில்,  போக்குவரத்து திட்டங்களை ஒருங்கிணைப்பதற்காக சிஎம்டிஏ, உறுப்பினர்  செயலர் தலைமையில், துணை குழு அமைக்கப்பட்டு போக்குவரத்து சார்ந்த  அரசு துறைகளின் அதிகாரிகள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர்.  

இது குறித்து சென்னை ஒருங்கிணைந்த  பெருநகர போக்குவரத்து குழும அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் பல்வேறு வகை போக்குவரத்து சேவைகளை ஒருங்கிணைத்து பயன்படுத்துவதற்கான வாய்ப்புள்ள இடங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி, 240 இடங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட போக்குவரத்து சேவைகளின் சந்திப்பு நிகழும் இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. இதில், 40 இடங்களில், மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தும் பணிகள் துவங்கியுள்ளன. மற்ற இடங்களில், மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது. போக்குவரத்து சேவைகள் ஒருங்கிணைப்பு இடங்களில், மேம்பாட்டு திட்டங்கள் ஒரே மாதிரியான வடிவமைப்பில் இருக்க வேண்டும்.

இதற்கு தேவையான நிதியை பெறுவது, செலவிடுவது, பணிகளுக்கு ஒப்புதல் வழங்க ஒரு தனி அமைப்பை ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. ஒரே பயண அட்டையில், பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் பயணிப்பதற்கான திட்டம் தொடர்பாக எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து, கும்டா அதிகாரிகள் மற்றும் உலக வங்கி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர். இதில் கியூ.ஆர். கோட் முறையில் டிக்கெட் வழங்குவதற்கு அனைத்து துறையினரும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரே டிக்கெட் பயண திட்டத்துக்காக பிரத்யேக ‘ஆப்’ உருவாக்க வேண்டும் என்றும் இதன் வாயிலாக மக்கள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட வசதி ஏற்படுத்த வேண்டும் என உலக வங்கி பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

இதற்காக, தானியங்கி முறையில் டிக்கெட் வழங்கல் உள்ளிட்ட பணிகளுக்கான நவீன கருவிகள் வாங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக செல்போன்  செயலி மூலம் இ டிக்கெட் பெற்று பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் என 3  விதமான போக்குவரத்திலும் பயணிக்கும் வசதி கொண்டு வர வாய்ப்புள்ளது. இந்த  பணிகள் எல்லாம் இறுதி கட்டத்தில் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: