×

தேனி ஆர்டிஓ அலுவலகத்தில் தேர்வுதளமான வாகன ஓடுதளம் ஒழுங்குப்படுத்தப்படுமா?

*வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரும் எதிர்பார்ப்பு

தேனி : தேனி வட்டார போக்குவரத்து அலுவலகம் கட்டி திறக்கப்பட்டு 13 ஆண்டுகளாகியும் பராமரிப்பில்லாமல் சேதமடைந்த ஓடுதளங்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.தேனி மாவட்டத்திற்கான வட்டார போக்குவரத்து அலுவலகம் பெரியகுளத்தில் கடந்த 2010ம் ஆண்டு வரை செயல்பட்டது. இதனையடுத்து, தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள மாவட்ட கலெக்டரின் பெருந்திட்ட வளாகத்திற்குள் உள்ள காலியிடத்தில் கடந்த 2010ம் ஆண்டு அப்போதைய மதிப்பின்படி, ரூ. 1 கோடியே 25 லட்சம் மதிப்பில் தேனி வட்டார போக்குவரத்து அலுவலகம் கட்டப்பட்டது.

இக்கட்டடம் கடந்த 2010ம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி போடி தாலுகா லெட்சுமிநாயக்கன்பட்டியில் நடந்த அரசு விழாவில் அப்போதைய துணை முதல்வரான மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. இவ்வலுவலகத்தில் கீழ்த்தளம், முதல் மாடி மற்றும் மேல் மாடி என மூன்று அடுக்கு மாடி கட்டிடமாக பிரமாண்டமாக கட்டப்பட்ட அலுவலகத்தில் கடந்த 13 ஆண்டுகளாக தேனி வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இந்த அலுவலகத்தில் நாள்தோறும் புதிய வாகனங்களுக்கான பதிவுவெண் பெறுதல், வாகனங்களுக்கனா எப்சி பெறுதல், விபத்து வாகனங்களை தணிக்கை செய்தல், சொந்த வாகனம் மற்றும் வாடகை வாகனங்களுக்கான வரி செலுத்துதல், வாகன ஓட்டுனர் உரிமம் பெறுதல், பேருந்து நடத்துனர்களுக்கான வாகன உரிமம் பெறுதல், பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கான உரிமம் பெறுதல், வாகன தகுதிச்சான்று பெறுதல், ஆட்டோக்களுக்கான உரிமம் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக நாள்தோறும் ஏராளமானோர் தேனி வட்டார போக்குவரத்து அலுவலகம் வந்து செல்கின்றனர்.

இதில் எப்சி எனப்படும் தகுதிச்சான்று பெறுவதற்காக கொண்டு வரப்படும் கார், வேன், ஆட்டோ, பேருந்து, லாரிகள் உள்ளிட்டவை ஓட்டிப்பார்ப்பதற்காக வாகன ஓடுதளம் உள்ளது. இதேபோல, இவ்வலுவலக வளாகத்தில் கார், வேன், லாரி உள்ளிட்ட லைட் மற்றும் கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்களுக்கான ஓட்டுனர் உரிமம் வழங்க ஓட்டுனர் தேர்வு தளம் உள்ளது.

 இத்தகைய தேர்வு தளம் தார்ச்சாலையாகவும், நெடுஞ்சாலைகளில் உள்ளது போல நீண்டும், ஆங்காங்கே வளைந்து, நெளிந்து செல்லும் வகையிலும், மலைமீது ஏறிச் செல்வது போல வடிவிலான மேடுகளை கொண்ட ஓடுதளங்களாக அமைக்கப்பட்டுள்ளன.இவ்வலுகமானது 2006/2011ம் ஆண்டில் நடந்த திமுக ஆட்சியின்போது கட்டப்பட்டு செயல்பாட்டுக்கு வந்து 13 ஆண்டுகளாகி விட்ட நிலையில் இதுவரை ஓட்டுனர் உரிமம் கேட்டு விண்ணப்பிப்போருக்கான தேர்வுதளமான ஓடுதளம் பராமரிப்பில்லாமல் போனதால் தார்ச்சாலை குண்டும், குழியுமாக மாறிப்போய் விட்டது. மேலும், மலைச்சாலையை நினைவு படுத்தும் வகையிலான ஏற்ற, இறக்க சாலை அமைந்துள்ள பகுதிகள் புதர்மண்டியும், சாலையானது சிதிலமடைந்தும் போயுள்ளது.

இதனால் ஓட்டுனர் உரிமத்திற்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் முன்னிலையில் வாகனங்களை ஓட்டிக்காட்டுவதில் சிரமம் உள்ளது.இதேபோல, தேனி வட்டார போக்குவரத்து அலுவலக நுழைவு பகுதியில் உள்ள கேட் துவங்கி அலுவலக பிரதான அலுவலக கட்டிடம் செல்லும் வரையிலான சாலையில் 13 ஆண்டுகளுக்கு முன்னர் போடப்பட்ட தார்ச்சாலை இருந்த இடம் தெரியாத அளவிற்கு சிதிலமடைந்துவிட்டது. இதனால் அலுவலக நுழைவு பாதை முதல் சாலையில் கற்கள் குவிந்து, டூவீலர்கள் அலுவலகத்திற்கு வரும்போது, தடுமாறி கீழே விழும் அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள சாலைகள் 3 ஆண்டு முதல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சீரமைப்பது வழக்கம். வாகன ஓட்டுனர்களுக்கான உரிமம் வழங்கக் கூடிய முதன்மையான வட்டார போக்கவரத்து அலுவலக வளாகத்தில் உள்ள சாலைகள் சிதிலமடைந்து இருப்பதை மாற்றி, புதுப்பொழிவுடன் சாலைகளையும், தேர்வுக்கான ஓடுதளங்களையும் சீரமைக்க பொதுப்பணித் துறை நிதி ஒதுக்கீடு செய்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags : Theni: Theni district transport office has been built and opened and the runways damaged after 13 years without maintenance should be repaired.
× RELATED மகன் கையால் மாங்கல்யம் பெற்று...