தகாத உறவை அம்பலப்படுத்திய வாலிபர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை-பெரம்பலூர் அருகே பயங்கரம்

குன்னம் : பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா மங்களமேடு அருகே நமையூர் கிராமம் நரியோடை நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் ரஜினி(43). இவரது மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்த அல்லித்துரை மகன் அஜித்(26). இவரது மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் ஈஸ்வரி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து குழந்தையை வளர்க்க நினைத்த அஜித், கடந்த மாதம் 2வதாக சாந்தி என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தார்.

இந்நிலையில் ரஜினிக்கும், அஜித்துக்கும் இடையே பணம், கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் ரஜினிக்கு, அதே பகுதியை சேர்ந்த 40வயதான பெண் ஒருவருடன் தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதனை அறிந்த கணவர், தனது மனைவியை கண்டித்து வந்துள்ளார். கணவர் வெளியூர் செல்லும் நேரங்களில் ரஜினியை தனது வீட்டிற்கு வரவழைத்து அந்த பெண் உல்லாசமாக இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தெரிய வந்த அஜித், ரஜினியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் கூறி அவரது தகாத உறவை அம்பலப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து அஜித்திடம் இந்த விவகாரம் குறித்து கேட்டதோடு, அவரை கடுமையாக கண்டித்துள்ளனர். இதில் ஆத்திரமடைந்த ரஜினி, தகாத உறவை அம்பலப்படுத்தி தன்னை அவமானபடுத்திய அஜித்துக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என முடிவு செய்தார். இந்நிலையில் வழக்கம் போல் நேற்றுமுன்தினம் வியாபாரத்துக்கு சென்ற ரஜினி, இரவு சீக்கிரமாகவே வீடு திரும்பினார். பின்னர் அளவுக்கு அதிகமாக மதுஅருந்திய ரஜினி, பைக்கில் போதையில் அஜித் வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கிருந்த அஜித்துடன் தகராறில் ஈடுபட்டதோடு, பைக்கில் மறைத்து வைத்திருந்த பால்ரஸ் குண்டுகள் நிரப்பப்பட்ட உரிமை பெறாத நாட்டுத்துப்பாக்கியால் அஜித்தை சுட்டார்.

இதில் அவரது தோள் மற்றும் கையில் குண்டுகள் துளைத்தன. இதில் ரத்த வெள்ளத்தில் அஜித் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனையடுத்து ரஜினி அங்கிருந்து தப்பியோடினார். இந்த சம்பவத்தை பார்த்த அஜித்தின் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அஜித் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் அஜித் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் தலைமறைவான ரஜினி துப்பாக்கியுடன் பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில் நேற்று மாலை சரண் அடைந்தார்.

Related Stories: