×

20 மாத காலம் ஆட்சியில் 117 பேருந்து நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது: நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு பேச்சு

சென்னை: சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது மதுராந்தகம் மரகதம் குமரவேல்(திமுக) பேசும்போது, மதுராந்தகம் நகர பேருந்து நிலையம் இடம் மாற்றம் செய்து புதிய பேருந்து நிலையம் அமைக்க அரசு முன்வருமா? என்றார். மேலும் கீழ்பெண்ணாத்தூர் பிச்சாண்டி(திமுக), சாக்கோட்டை அன்பழகன் ஆகியோர் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில் மதுராந்தகம் நகரப் பேருந்து நிலையம் 1992 ஆண்டில் கட்டப்பட்டது. 25 பேருந்துகள் நிறுத்தக்கூடிய அளவுக்கு கட்டப்பட்டுள்ள நிலையில் 10 பேருந்துகள் மட்டுமே இங்கு வந்து செல்கின்றன.

இதனால் தற்போது அங்கு புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டிய தேவை இல்லை. எனினும் மக்களின் வசதிக்காக அதை நவீனமயமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் 184 பேருந்து நிலையங்கள் மாநகராட்சி, நகராட்சி பகுதியில் இருப்பதாகவும் 203 பேருந்து நிலையங்கள் பேரூராட்சி, ஊராட்சி பகுதியில் இருக்கிறது. மேலும் கடந்த 20 மாத திமுக ஆட்சியில் 117 பேருந்து நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. கோவில் நகரமான கும்பகோணம் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக இடம் தேர்வு செய்து தந்தால் பேருந்து நிலையம் அமைக்க இந்த ஆண்டே அரசு முன்னுரிமை அளிக்கும்.

திருவண்ணாமலைக்கு நாள் ஒன்றுக்கு 30 லட்சம் பேர் வரை வந்து செல்லும் நிலையில் அங்கு புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும். வால்பாறை பகுதியிலுள்ள மாசாணி அம்மன் திருக்கோயிலில் நவீனமயமாக்கப்பட்ட பேருந்து நிலையம் கட்டுவதற்கு திட்ட அறிக்கை தயார் செய்து நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் 490 பேரூராட்சிகள் உள்ளது இதில் 203 பேரூராட்சிகளில் பேருந்து நிலையங்கள் உள்ளது. தற்போது கீழ்பெண்ணாத்தூரில் உள்ள பேரூராட்சிகளில் பேருந்து நிலையம் அமைப்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.

Tags : Municipal ,Minister , 117 bus stands are being renovated in 20 months of government: Municipal Administration Minister Nehru Speech
× RELATED திருப்போரூர் பேரூராட்சி குப்பை கிடங்கில் தீ