×

ரூ.15 கோடி செலவிலான முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (28.3.2023) தலைமைச் செயலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட ஏற்றுமதி ஊக்குவிப்பு மையங்கள் மற்றும் ரூ.15 கோடி செலவிலான பல்வேறு முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, தொழிற்பேட்டைகளில் மனை ஒதுக்கீடு பெற்ற தொழில் முனைவோர்களில் 5 ஒதுக்கீட்டாளர்களுக்கு பட்டாக்களை வழங்கினார்.  

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வேலை உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றுகின்றன. இவை அளவான முதலீட்டில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கி ஒட்டுமொத்த சமூக-பொருளாதார மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும், வளர்ச்சிக்கும் பெரும்பங்களிப்பு செய்து வருகின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு ஆக்கபூர்வமான திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

மாவட்ட ஏற்றுமதி ஊக்குவிப்பு மையங்கள்

சென்னை கலைவாணர் அரங்கத்தில் கடந்த 22.9.2021 அன்று “ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னிலையில் தமிழ்நாடு” என்ற தலைப்பில் தமிழ்நாடு ஏற்றுமதி மாநாடு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்  தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் தனித்துவம் வாய்ந்த பல பொருட்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் தயாரிக்கப்படுகின்றன என்றும்,  இவற்றை உலக அளவில் சந்தைப்படுத்த, ஒவ்வொரு மாவட்டத்திலும் “மாவட்ட ஏற்றுமதி மையங்கள்” உருவாக்கப்படும் என்றும் அறிவித்தார். இதன்படி,  அனைத்து  மாவட்டங்களிலும் மாவட்ட ஏற்றுமதி ஊக்குவிப்பு மையங்கள் 31.03.2023 க்குள் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வர்த்தக மேம்பாட்டு அலுவலர்கள் (Business Facilitation Officer)  நியமனம் செய்யப்பட்டு, மாவட்ட அளவிலுள்ள துறை அலுவலர்களுக்கு ஏற்றுமதி ஊக்குவிப்பு பயிற்சி இரண்டு மாதங்களில் அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இன்று (28.03.2023) அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட ஏற்றுமதி ஊக்குவிப்பு மையங்களை  மாண்புமிகு   தமிழ்நாடு முதலமைச்சர்  அவர்கள் தொடங்கி வைத்தார்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான கடன் மதிப்பீட்டிற்கான அறிவுசார் பங்குதாரராக அகமதாபாத் - இந்திய மேலாண்மைக் கழகத்தை (IIM, Ahemadabad) நியமித்து அண்மையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனை செயலாக்கும் விதமாக, தமிழ்நாடு அரசின் தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் திருமதி சிஜி தாமஸ் வைத்யன் இ.ஆ.ப., மற்றும் அகமதாபாத் - இந்திய மேலாண்மைக் கழகத்தின் பேராசிரியர் நமன் தேசாய் மற்றும் பேராசிரியர் ஜோஷி ஜேக்கப் ஆகியோருக்கும் இடையே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான கடன் மதிப்பீட்டிற்கு தேவையான அனைத்து தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் கடன் மதிப்பீடு கட்டமைப்பின் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டிற்கு அகமதாபாத் - இந்திய மேலாண்மைக் கழகம் உதவி புரியும்.

முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தல்

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள அளவொப்புமை ஆய்வகங்களுக்கான  அங்கீகாரத்துடன் (NABL)  செயல்பட்டு வரும் காக்களூர் மத்திய மின்பொருள் சோதனைக்கூடத்தில் (CETL) 1.32 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ள சோதனை வசதிகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். இதன்மூலம் மாநிலத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தயாரிக்கும் மின் உற்பத்தி பொருட்களின் தரத்தினை இச்சோதனை வசதிகள் வாயிலாக சோதனைக்கு உட்படுத்தி,  தரத்தினை மேம்படுத்தி, தரக்குறியீடுகள் பெறுவதற்கு வழிவகை ஏற்படும்
.
தமிழ்நாடு சிறு தேயிலை விவசாயிகள் தொழிற்கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளின் இணையம் லிமிடெட் (இண்ட்கோசர்வ்) சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ்,  நீலகிரி மாவட்டம், குன்னூர் இண்ட்கோசர்வ் நிறுவனத்தில் 3.29 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள ஊட்டி டீ -யின் அதிநவீன கலவை மற்றும் சிப்பம் கட்டும் அலகினை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். இதன்மூலம்,  ஊட்டி டீ-யின்
100 கிராம் பாக்கெட்டுக்கான உற்பத்திச் செலவு கிலோ ஒன்றுக்கு ரூ.5.63 இருந்து,  இந்த உற்பத்தி அலகு 100 விழுக்காடு உற்பத்தித் திறனில் இயங்கும்போது கிலோ ஒன்றுக்கு ரூ.3.65 மட்டுமே செலவாகும்.  இதனால் கிலோ ஒன்றுக்கு ரூ.1.98 மிச்சமாகும்.  இதனால் இண்ட்கோசர்வ் ஆண்டிற்கு 47.52 இலட்சம் ரூபாய் சேமிக்கப்பட வாய்ப்புள்ளது.

தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் மூலம் இராணிப்பேட்டை தொழிற்பேட்டையில் 1.35 கோடி ரூபாய் செலவில் 4825 சதுர அடி பரப்பளவில் தொழிற்பேட்டையைச் சேர்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் கருத்தரங்கு அறை, மருந்தகம், நிர்வாக அலுவலகம், உணவகம் உள்ளிட்ட பல்வேறு   வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பொதுவசதி  மையக் கட்டடத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
 
திருவள்ளூர் மாவட்டம்,  திருமுல்லைவாயில் தொழிற்பேட்டையில் 750-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் பொருட்டும், நிலத்தடி நீர் மாசுபடுவதை தடுக்கும் நோக்கத்துடன் 2.93 கோடி ரூபாய் செலவில்  நாள் ஒன்றுக்கு 10 இலட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு திறன் கொண்ட  கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையக் கட்டடத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் தொழிற்பேட்டையில் 600-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் பொருட்டும், நிலத்தடி நீர் மாசுபடுவதை தடுக்கும் நோக்கத்துடன் 2.72 கோடி ரூபாய் செலவில் நாள் ஒன்றுக்கு 8 இலட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு திறன் கொண்ட  கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையக் கட்டடத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
காக்களூர் தொழிற்பேட்டையில் 2.92 கோடி ரூபாய் செலவில் 9000 சதுர அடி பரப்பளவில் தொழிற்பேட்டையைச் சேர்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் மூலப் பொருட்கள் சேமிப்பு கிடங்கு, கருத்தரங்கு அறை, சேவை அறை, அலுவலக அறை உள்ளிட்ட பல்வேறு   வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பொது உற்பத்தி மையக் கட்டடத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
    என மொத்தம் 15 கோடி ரூபாய் செலவில் பல்வேறு முடிவுற்ற பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
 
தொழிற்பேட்டைகளில் மனை ஒதுக்கீடு பெற்ற குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர்களுக்கு பட்டாக்கள் வழங்குதல்

நெடுங்காலமாக தொழிற்பேட்டைகளில் பட்டா பெற காத்திருந்த ஒதுக்கீட்டாளர்களுக்கு சிறப்பு முன்னெடுப்பு மூலம் பட்டா வழங்கிடும் விதமாக, முதற்கட்டமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்
210 மனைதாரர்களுக்கு பட்டா வழங்குவதை தொடங்கி வைத்து, அதில் 5 ஒதுக்கீட்டாளர்களுக்கு பட்டா வழங்கினார். இந்த ஒதுக்கீட்டாளர்கள் 1972, 1979, 1982, 1989 மற்றும் 1992 ஆகிய ஆண்டுகளில் மனை ஒதுக்கீடு பெற்றவர்கள் ஆவார்கள். சிட்கோ தொழிற்பேட்டைகளை சேர்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர்கள் பல்லாண்டு காலமாக பெயர் மாற்றம் செய்யப்பட்ட பட்டாக்கள் பெறாமல் சிரமப்பட்டு வந்ததாகவும், தற்போது தங்களுக்கு பட்டா வழங்கப்பட்டதன் மூலம் தங்களது நெடுங்கால கனவு நிறைவேறியுள்ளது என்று தெரிவித்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.  
     
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. தா. மோ. அன்பரசன், தலைமைச்  செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.,  குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைச் செயலாளர் திரு. வி. அருண்ராய், இ.ஆ.ப., தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் திருமதி. சிஜி தாமஸ் வைத்யன், இ.ஆ.ப., தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி. சோ. மதுமதி, இ.ஆ.ப., தொழில் வணிக கூடுதல் ஆணையர் திருமதி. கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.



Tags : Chief President M.D. G.K. stalin , முதல்வர் ,மு.க.ஸ்டாலின்
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...