×

12ம் வகுப்பு கணிதத் தேர்வில் பாடத்திட்டத்திற்கு வெளியில் இருந்து வினா: தமிழக அரசின் தேர்வுத்துறை விசாரணை நடத்த ராமதாஸ் வலியுறுத்தல்..!!

சென்னை: 12ம் வகுப்பு கணிதத் தேர்வில் பாடத்திட்டத்துக்கு வெளியில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் தேர்வுத்துறை விசாரணை நடத்தவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற மாநிலப் பாடத்திட்டத்தின்படியான 12ம் வகுப்பு கணிதப்பாடத் தேர்வில்  கடினமான வினாக்கள் கேட்கப்பட்டிருப்பதாக மாணவர்கள்  தரப்பில் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டை கணித ஆசிரியர்களும் உறுதி செய்திருக்கின்றனர்.

கணிதப்பாடத் தேர்வில் குறைந்தது 3 வினாக்கள் மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்டத்திலிருந்து (சி.பி.எஸ்.இ) கேட்கப்பட்டுள்ளன. மாநிலப் பாடத்திட்ட நூல்களை மட்டும் படித்து தேர்வு எழுதிய மாணவர்களால் முழு மதிப்பெண்களை எடுக்க முடியாது என்று கூறப்படுகிறது. இது நியாயமல்ல. கணிதத்தில் 100 சதவீதம் மதிப்பெண் பெறுவது தான் மாணவர்களின் இலக்கு. ஆனால், சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தையும் படித்தால் தான் 100 சதவீதம் மதிப்பெண் எடுக்க முடியும் என்பது அறமல்ல.

வினாத்தாள் தயாரிப்புக் குழுவினர் அவர்களின் திறமையை காட்டுவதற்காக மாணவர்களின் எதிர்காலத்தை சீர்குலைக்கக்கூடாது. 12ம் வகுப்பு கணிதத் தேர்வில் பாடத்திட்டத்திற்கு வெளியிலிருந்து வினாக்கள் கேட்கப்பட்டது குறித்து தமிழக அரசின் தேர்வுத்துறை விசாரணை நடத்த வேண்டும். மாணவர்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க அவர்களுக்கு உரிய அளவில்  கூடுதல் மதிப்பெண்கள்  வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Ramadoss ,Tamil Nadu government , 12th Class Maths Exam, Quiz, Examination Department, Ramadoss
× RELATED மக்களவை தேர்தலுக்கான பாமகவின்...