×

திம்பம் மலைப்பாதையில் உலா வந்த சிறுத்தையால் பரபரப்பு!: தடுப்புச்சுவற்றில் நடந்து சென்று காட்டிற்குள் மறைந்தது.. வாகன ஓட்டிகள் அச்சம்..!!

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் அதிகாலை நேரத்தில் சாலையில் உலா வந்த சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் மான், யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையில் உலா வருவதும், சாலையை கடப்பதும் வாடிக்கையாகி வருகிறது. குறிப்பாக தமிழகம் - கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய பாதையான திம்பம் மலைப்பாதையில் சிறுத்தைகள் அதிகளவில் உலா வருகின்றன. இன்று அதிகாலை திம்பம் மலைப்பாதை 25வது கொண்டை ஊசி வளைவில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை ஒன்று சாலையில் நடந்து சென்றது.

சிறுது நேரம் சாலையில் நடந்து சென்ற சிறுத்தை தடுப்பு சுவற்றில் நடந்து சென்று, பின்னர் காட்டிற்குள் தாவி சென்று மறைந்தது. இந்த வீடியோ காட்சிகளை அவ்வழியாக வாகனத்தில் பயணித்த வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். திம்பம் மலைப்பாதையில் வாகனங்களை கவனத்துடன் இயக்குமாறு வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதிகாலை நேரத்தில் சாலையில் உலா வந்த சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.


Tags : Thimpam ,road , Thimpham mountain path, leopard, vehicle drivers
× RELATED திம்பம் சீவக்காய் பள்ளம் அருகே யானை தாக்கி மனநலம் பாதிக்கப்பட்டவர் பலி