×

200 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஈராச்சி பாசன கண்மாய் மண் மேடாக மாறியது-தூர்வார நடவடிக்கை எடுக்கப்படுமா?

எட்டயபுரம் : எட்டயபுரம் அருகே 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஈராச்சி பாசனக்கண்மாய் மண்மேடாகி, வேலி மரங்கள் முளைத்து தரிசு நிலமாக காட்சியளிக்கிறது. எனவே கண்மாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் தாலுகா ஈராச்சியில் 50ஆண்டுகளுக்கு முன் சுமார் 80 ஏக்கர் மானாவாரி நிலத்திற்கு நீர் ஆதாரமாக 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட பாசனக்கண்மாய் உருவாக்கப்பட்டது. ஆரம்ப காலங்களில் வருடா வருடம் கோடை காலத்தில் விவசாயிகள் தங்கள் நிலத்திற்கு தேவையான வண்டல் மண்ணை கண்மாயிலிருந்து மாட்டுவண்டிகள் மூலம் எடுத்து சென்றனர். அதனால் கண்மாய் மண்மேடாகாமல் ஆழமாகவே இருந்தது.

இதனால் மழைக்காலங்களில் அதிக்கபடியான மழைநீர் கண்மாயில் தேங்கியது. 80 ஏக்கர் நிலத்திற்கு நீராதாரமாக உருவாக்கப்பட்ட கண்மாய் மூலம் சுமார் 120 ஏக்கர் நிலங்களுக்கு நீர் பாய்ச்சும் அளவிற்கு தண்ணீர் தேங்கியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.  கோடைகாலமான சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் கண்மாயிலிருந்து இயற்கை உரம் நிறைந்த வண்டல் மண்ணை ஈராச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கசவன்குன்று, துறையூர் காமநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு மாட்டுவண்டிகள் மூலம் எடுத்து சென்றனர். இதனால் கண்மாய் மண்மேடாகாமல் பாதுகாக்கப்பட்டதோடு விவசாய நிலங்களுக்கு இயற்கை உரமும் கிடைத்தது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக கண்மாயிலிருந்து வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் காலப்போக்கில் மண்மேடாகி போனது.

மேலும் கண்மாய் பராமரிப்பிலும் அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை. அதனால் விவசாய நிலங்களுக்கு நீர்ஆதாரமாக உருவாக்கப்பட்ட 200 ஏக்கர் பாசனக்கண்மாயில் தற்போது 20 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே நீர்தேங்கும் குட்டை போல் மாறிப்போனது. எஞ்சியுள்ள 180 ஏக்கர் கண்மாயும் வேலிமரங்கள் முளைத்து தரிசு நிலமாக காட்சியளிக்கிறது. 120 ஏக்கர் விவசாய நிலத்திற்கு நீர் வரத்து கேள்விக்குறியானதோடு அந்தப்பகுதியில் உள்ள கிணற்றுப்பாசனத்தை நம்பி வாழும் விவசாயிகளின் கிணற்றில் நீர்வற்றத்துவங்கியது. எனவே பாசனக்கண்மாயை ஆதாரமாக கொண்டுள்ள 120 ஏக்கர் நிலத்திற்கு நீர் ஆதாரத்தை உறுதிப்படுத்தவும்,  அந்த பகுதியில் கிணறு மற்றும் ஆழ்குழாய் பாசனத்தை பாதுகாக்கும் வகையில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் கண்மாயை ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு முதல் கட்டமாக வரும் சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி மாதங்களில் கண்மாயிலிருந்து வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கவேண்டும், மேலும் கண்மாயில் வளர்ந்துள்ள வேலிமரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். மழைநீர் கண்மாயிலிருந்து வெளியேறாத வகையில் கரையை வலுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து ஈராச்சி முன்னாள்  பஞ்சாயத்து தலைவர் சுப்பையா கூறியதாவது: ‘ஈராச்சி பகுதியில் விவசாயத்தை  பெருக்கவும், விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், உருவாக்கப்பட்ட  200 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஈராச்சி பாசனக்கண்மாய் தற்போது மண்மேடாகி தரிசு  நிலமாக மாறிப்போனது. நான் 1986ல் பஞ்சாயத்து தலைவராக இருந்த காலகட்டத்தில்  ஒரு முறை தூர்வாரப்பட்டது. அதிலிருந்து இதுவரை குளம் தூர்வாரப்படவுமில்லை,  விவசாயிகள் வண்டல் மண் அள்ள அனுமதியும் வழங்கப்படவில்லை.

இதனால்  பாசனக்கண்மாய் மண்மேடாகிபோனது. மழைக்காலங்களில் கண்மாயில் மழைநீர்  தேங்காமல் வெளியேறிவிடுகிறது. இதனால் 120 ஏக்கர் நிலத்தின் விவசாயம்  ள்விகுறியாகியுள்ளது. கண்மாயை பராமரிக்கவேண்டும் அல்லது விவசாயிகளுக்கு  வண்டல் மண் அள்ள அனுமதி அளிக்கவேண்டும் என வருவாய்துறையினரிடம் கோரிக்கை  வைத்தால் அவர்கள் வளர்ச்சி துறையினரை அணுகச்சொல்கிறார்கள். அவர்களிடம்  சென்றால் கனிமவளத்துறை அதிகாரிகளிடம் செல்ல வலியுறுத்துகிறார்கள். இது  இல்லாத ஊருக்கு செல்லாத பாதையை காட்டுவது போல் உள்ளது. எனவே இனிமேலாவது  அதிகாரிகள் விவசாயிகள் நலனை கவனத்தில் கொண்டு உடனடியாக கண்மாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

வண்டல் மண் அள்ள அனுமதிக்க வேண்டும்

மழைக்காலங்களில் மானாவாரி நிலங்களிலிருந்து மழைநீர் அரித்து செல்லும் கரிசல்மண் கண்மாயில் தேங்குகிறது. இதோடு மழைநீர் அடித்து செல்லும் விவசாயநிலங்களில் உள்ள நவதானிய சக்கைகள், பறவை மற்றும் கால்நடைகளின் எச்சங்கள் தேங்கி மக்கி உரமாகிறது. மேலும் கண்மாயில் வாழும் மீன்கள் இறந்து அதுவும் மக்கி உரமாகிறது. இதனால் கண்மாயில் உள்ள வண்டல் மண்ணில் விவசாய நிலத்திற்கு தேவையான இயற்கை உரம் கலந்து கிடக்கிறது.

இந்த வண்டல் மண்ணை விவசாயிகள் மீண்டும் நிலத்தில் பரப்பும் போது மழைநீர் அரித்து சென்ற காலிஇடத்தில் மண்பரப்பப்படுவதோடு இயற்கை உரமும் சேர்வதால் நிலம் வளமாகிறது. இதனால் ரசாயன உரம் தேவையில்லாமல் இருந்தது.

ஆனால் தற்போது கண்மாயில் இருந்து வண்டல் மண் அள்ள விவசாயிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் நிலங்களில் அரிப்பு ஏற்பட்டு சமத்தன்மையை இழந்ததோடு இயற்கை உரமும் இல்லாமல் வறண்டு போனது. தொடர்நது நிலத்தில் ரசாயன உரத்தை பயன்படுத்துவதால் மண்புழு உள்ளிட்ட இயற்கை உரத்தை உற்பத்தி செய்யும் உயிரினங்களும் அழிந்து வருகிறது எனவே இயற்கை உரத்தின் புதையில் பொதிந்து கிடக்கும் வண்டல் மண்ணை அள்ள விவசாயிகளுக்கு அனுமதி வழங்கவேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

Tags : Ettayapuram: Near Ettayapuram, an area of 200 acres of Erachi irrigation canal has turned into mud and fence trees have sprung up and looks barren.
× RELATED நியூசிலாந்தில் இருந்து வந்து வாக்களித்த மருத்துவர்