×

சாலை விரிவாக்கத்துக்காக தோண்டியபோது 2 அடியில் இருந்து 6 அடி உயரத்தில் வெளிப்பட்ட பிரமாண்ட சிவலிங்கம்-7ம் நூற்றாண்டை சேர்ந்தது

வந்தவாசி : வந்தவாசி அருகே ஏற்கனவே 2 அடி உயரத்தில் சிவலிங்கம் இருந்த இடத்தை சாலை விரிவாக்கத்துக்காக தோண்டியபோது 6 அடி உயரத்தில் பிரமாண்ட சிவ லிங்கம் சிலை கண்டெடுக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில் முனீஸ்வரன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் விவசாய நிலங்களுக்கு இடையே இருந்தது. தற்போது கோயில் அருகில் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வரை சாலையை விரிவுபடுத்தி இருவழிச் சாலையாக மாற்றும் பணி நடந்து வருகிறது.

இந்தப் பணிக்காக மருதாடு கிராமத்தில் 2 கி.மீ தூரம் புறவழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் கடந்த ஒரு வருடங்களாக நடந்து வருகின்றது. ஜல்லி கொட்டப்பட்டு பின்னர் தார் சாலை அமைக்கும் பணி நடைபெறும் நிலையில் உள்ளன. இந்நிலையில் முனீஸ்வரன் கோயில் அருகே ஏற்கனவே 2 அடி உயரத்தில் சிவலிங்கம் இருந்தது.

இதனை அதே கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கடந்த 10 ஆண்டுகளாக வழிபட்டு வந்தனர். தற்போது புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெறுவதால் பொதுமக்களின் பார்வைக்கு சிவலிங்கம் அதிக அடி உயரமாக தென்பட்டது. இதனை அறிந்த கரூரை சேர்ந்த சிவன் பக்தர்கள் 5 பேர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் மருதாடு கிராமத்திற்கு வந்து அங்கிருந்த சிவலிங்கத்தை வழிபட்டனர்.தொடர்ந்து சிவலிங்கம் உயரமாக இருக்குமோ என கருதி கடப்பாரையால் அங்குள்ள சிவலிங்கத்தை தோண்டினர். அப்போது சிவலிங்கம் கீழே மண்ணில் புதைந்திருப்பது தெரிய வந்ததை அடுத்து ஜேசிபி உதவியுடன் சிவலிங்கத்தை மேலே எடுத்தனர். அப்போது 6 உயரம் கொண்ட பிரமாண்ட சிவலிங்கமாக இருந்தது.

பிரம்ம சூத்திரம் குறியீடு இருந்ததால் இதில் 7ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட சிவலிங்கமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. ஏற்கனவே இரண்டடி உயரத்தில் வழிபட்ட சிவலிங்கம் தற்போது 6 அடி உயரமாக பிரமாண்டமாக இருந்ததால் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வழிபட்டனர். நேற்று சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து வழிபட்டனர்.

Tags : Shiva Lingam , Vandavasi : When the place where Shiva Lingam was already 2 feet high near Vandavasi was excavated for widening the road
× RELATED திருமால் வணங்கிய சிவதலங்கள்