×

அரசை விமர்சித்த வழக்கில் உத்தரவாதம் தந்த முன்னாள் ராணுவ அதிகாரிக்கு முன்ஜாமீன்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் பிரபு கொலை செய்யப்பட்டதை கண்டித்து, சென்னை திருவல்லிக்கேணியில் பாஜ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் பேசிய பாஜவை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கர்னல் பாண்டியன் என்பவர் தமிழ்நாடு அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். அப்போது அரசுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார். இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு கர்னல் பாண்டியன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கர்னல் பாண்டியன் நேரில் ஆஜராகி இருந்தார். அவர் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், இதுபோல மிரட்டல் விடுக்கும் விதமாக இனி பேச மாட்டேன் என்று உத்தரவாதம் அளித்திருந்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, ஒரு வாரம் சென்னையில் தங்கியிருந்து திருவல்லிகேணி காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன், அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.


Tags : Anticipatory bail to ex-army officer who gave surety in case of criticizing government: Court orders
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...