×

7ம் தேதி தேர் திருவிழா ஏகாம்பரநாதர் கோயிலில் ஆய்வு: துரை சந்திரசேகர் எம்எல்ஏ ஆலோசனை

பொன்னேரி: ஏகாம்பரநாதர் கோயிலில் வரும் 7ம் தேதி தேர் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு துரை சந்திரசேகர் எம்எல்ஏ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் பிரசித்தி பெற்ற  ஏகாம்பரநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. வடகாஞ்சி என்றழைக்கப்படும் மீஞ்சூர் திருக்கோயிலில் பிரம்மோற்சவ திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது.  வரும்  8ம் தேதி வரை பிரம்மோற்சவ நிகழ்ச்சி  நடைபெற உள்ளது. எனவே, 14நாட்கள் நடைபெற உள்ள இந்த விழாவில் 7ம் நாள் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நடைபெற உள்ளது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மாடவீதிகளில் வலம்வர உள்ள தேரோட்டத்தை பாதுகாப்பாக நடத்துவது குறித்து பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகர் நேற்று முன்தினம் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மேலும், தேர் வலம் வரும் வீதிகளில் உள்ள சாலைகளின் அமைப்பு குறித்தும்,  நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டார். மாட வீதிகளில் செல்லும் உயரழுத்த மின் கம்பிகள், வீடுகளுக்கு செல்லும் மின் இணைப்பு வயர்கள் ஆகியவற்றை தேரோட்ட நாளில் துண்டித்து அசம்பாவித சம்பவங்கள் ஏதுமின்றி பாதுகாப்பாக தேரோட்டத்தை நடத்தி, தேர் பவனிக்கு பிறகு மீண்டும் மின் இணைப்புகளை வழங்குவது குறித்தும் மின்வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.  மேலும், பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும், இந்த கூட்டத்தில்  அதிகாரிகளிடம் எம்எல்ஏ கேட்டறிந்தார். இதில்,  மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ்,  துணை தலைவர் அலெக்சாண்டர் மற்றும் மீஞ்சூர் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்துறை போலீஸ் அதிகாரிகள்,  வார்டு கவுன்சிலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.



Tags : 7th Chariot Festival Inspection ,Ekambaranath Temple ,Durai Chandrasekhar ,MLA , 7th, Chariot Festival, Ekambaranathar Temple, study, consultation
× RELATED மீனவர்கள் மீதான தொடர் தாக்குதலை...