ஊதியூரில் சிறுத்தையை பிடிக்க 3 ரோந்து வாகனம், 30 கேமிரா, 4 கூண்டுகளுடன் வனத்துறை தீவிர தேடுதல் வேட்டை: மாவட்ட வனஅலுவலர் நேரில் ஆய்வு

காங்கயம்: ஊதியூரில் சிறுத்தையை பிடிக்க 3 ரோந்து வாகனங்கள் 30 கேமிரா, 4 கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மாவட்ட வன அலுவலர், ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனருமான தேஜாஸ்வி  ஊதியூர் வந்து வனப்பகுதியில் சிறுத்தையை தேடும் பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஊதியூர் அடுத்துள்ள தாயம்பாளையம் விவசாயி ஆட்டுப் பட்டியில் புகுந்து ஆட்டை அலேக்காக தூக்கிச் சென்ற சிறுத்தை தொடர்ந்து அடுத்தடுத்து மலையை சுற்றியுள்ள தோட்டங்களில் புகுந்து மாடு, கன்று என தூக்கிச்சென்றது. இதனைத் தொடர்ந்து காங்கயம் வனச்சரக அலுவலர் தனபால் தலைமையில் வனத்துறையினர் ஊதியூரில் முகாமிட்டு கூண்டுகளில் ஆடுகளைக் கட்டி வைத்து சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதற்காக வழக்கமாக சிறுத்தை இரவு நேரத்தில் மலையிலிருந்து இறங்கிச் செல்லும் பாதையை கண்காணித்து அந்தப் பகுதியில் கூண்டுகளை வைத்து ஆடுகளைக் கட்டி வைத்தனர். ஆனால் நேற்று வழக்கமான பாதையில் செல்லாமல் வனத்துறையினருக்கு போக்கு காட்டிவிட்டு ஊதியூர் மலையின் வடக்கு பகுதி அடிவாரத்தில் உள்ள அகஸ்டின் என்பவரது தோட்டத்திற்கு காலை 7 மணியளவில் வந்த சிறுத்தை அங்கு கட்டிப் போடப்பட்டிருந்த அவரின் வளர்ப்பு நாளை கண்ணிமைக்கும் நேரத்தில் கடித்து இழுத்துக் கொண்டு மலைக்குள் சென்றுவிட்டது. இதனால் பொதுமக்கள் உச்ச கட்ட பீதியில் உள்ளனர்.

இதுபற்றி பொதுமக்கள் தரப்பில் கூறியதாவது: சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் இங்கு முகாமிட்டுள்ள நிலையிலும் அவர்களுக்கு போக்குக் காட்டும் சிறுத்தை அவ்வவ்போது மலையை விட்டு கீழிறங்கி வந்து ஆடு, மாடுகள், நாய்களைக் கடித்து இழுத்துச் செல்கிறது. தற்போது பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருப்பதாகவே உணர்கிறோம். எனவே அரசு இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி சிறுத்தையை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள்  கூறினார். இதையடுத்து தற்போது 3 வனத்துறை ரோந்து வாகனங்கள் வரவழைப்பட்டு அதன் மூலம் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு பகல், இரவு நேரங்களில் சிறுத்தையை தேடி வருகின்றனர். நேற்று மாவட்ட வன அலுவலர், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குனருமான தேஜாஸ்வி  ஊதியூர் வந்து வனப்பகுதியில் சிறுத்தையை தேடும் பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து ஏற்கனேவே 2 கூண்டுகள் வைக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் 2 கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் 10 கேமராக்கள் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டது. மொத்தம் 30 கேமராக்கள் தற்போது பொருத்தப்பட்டுள்ளது. நள்ளிரவு நேரங்களில் சிறுத்தை குறித்த தகவல் ஏதேனும் பொதுமக்களிடம் கிடைக்க பெற்றால், உடனடியாக ரோந்து வாகனத்தின் மூலம் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று சிறுத்தையை பிடிக்கும் முயற்சி எடுத்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: