லூஃபா குளியல் டிப்ஸ்!

நன்றி குங்குமம் டாக்டர்

அந்தக் காலத்தில் குளிக்கும்போது உடலை  அழுக்குப்போக தேய்த்துக் குளிக்க,  மக்கள்  இயற்கையாக விளைந்த  உலர்ந்த பீர்க்கன் நார்க் குடுவைகளைப்  பயன்படுத்தினர். இதனால், மக்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படவில்லை.  தற்போது, குளிக்கும் போது உடலைத் தேய்த்துச் சுத்தப்படுத்துவதற்கு மெல்லிய சிந்தடிக் இழைகளைக்கொண்ட  லூஃபாவை பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர். இந்த லூஃபாவை பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை என்னென்ன...

சமீபகாலமாக  லூஃபா இல்லாமல் குளிக்க முடியாது என்ற அளவுக்கு அதனை பலரும் பழகிவிட்டார்கள். அதிலும்,  இப்போது லூஃபாக்கள் பெரும்பாலும் பிளாஸ்டிக் இழைகள் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. எனவே, அவற்றைத்  தொடர்ந்து பயன்படுத்தும்போது நாளடைவில் சருமத்துக்குச் சேதம் ஏற்படலாம். அதனால், தினமும் லூஃபா பயன்படுத்துவது நல்லதல்ல எனச் சரும நிபுணர்கள்  கூறுகின்றனர்.

உடலில் உள்ள அழுக்கு மற்றும் இறந்த செல்களை நீக்குவதற்கு லூஃபா பயன்படும் என்றாலும் தினமும் பயன்படுத்தும்போது, லூஃபாவின் இழைப் பகுதியில் பாக்டீரியாக்கள் படிந்து பாக்டீரியா, பூஞ்சை பிரச்சினைகளை ஏற்படுத்தும் அபாயமும் உண்டு.  குளியல் அறை என்பது ஈரப்பதமான பகுதி. அதனால், ஒவ்வொரு நாளும் குளித்து முடித்ததும் லூஃபாவை அங்கேயே வைத்திருந்தால்  சீக்கிரம் உலர்ந்து போகாமல் ஈரப்பதத்துடனே இருக்கும்.  இதனால், அதில் இருக்கும் ஈரப்பதத்தில் பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் நன்கு வளரத் தொடங்கிவிடும்.

இதனை அறியாமல்,  மறுநாள் பயன்படுத்தும்போது உலர்வடைந்திருப்பதாக  நினைத்து நாம்  அப்படியே பயன்படுத்தினால் அவை உடலில் ஊடுருவி சரும பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். இதனால் லூஃபாவை பயன்படுத்தி முடித்ததும் வெயிலில் உலர்த்திவிட்டு பயன்படுத்துவது சரியானது.   

அதுபோன்று, சிலருடைய சரும வகைக்கு லூஃபா ஒத்துக்கொள்ளாது. எனவே,  லூஃபா பயன்படுத்தியதும் சருமம் சிவத்தல், எரிச்சல் உணர்வு போன்ற பாதிப்புகளை உணர்ந்தால் மீண்டும் பயன்படுத்தாமல் தவிர்த்துவிடுவது நல்லது.

தொகுப்பு : ரிஷி

Related Stories: