×

அஜீரணக் கோளாறுக்கு உடனடி வைத்தியம்!

நன்றி குங்குமம் டாக்டர்

அஜீரணக் கோளாறு இன்று பலரும் அடிக்கடி சந்திக்கும்  பெரும் பிரச்சனையாக  இருக்கிறது. சரியாக சாப்பிடாதது, சாப்பிட்ட உணவு சரியாக செரிமானமாகாதது, காரமான உணவு, சாப்பிட்டவுடன் படுப்பது, மன அழுத்தம், பதற்றம், மது அருந்துதல், புகைபிடித்தல் போன்றவையே பொதுவாக அஜீரணக் கோளாறை ஏற்படுத்தும் காரணிகளாக உள்ளன.

இதுதவிர, இரைப்பைப் புற்றுநோய், இரைப்பை அழற்சி, குடற்புண், பித்தப்பைக் கல், கணைய அழற்சி ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அஜீரணம் ஏற்பட வாய்ப்புள்ளது.வாய் குமட்டுதல், வாய் துர்நாற்றம், நெஞ்செரிச்சல், வாய் புளித்தல், வாயுத் தொல்லை, வயிற்று உப்புசம் போன்றவை அஜீரணத்தின் அறிகுறிகள்.

இதனை வீட்டில் உள்ள பொருட்களைக்கொண்டே எவ்வாறு சரி செய்யலாம் என்று பார்ப்போம்:

புதினா: வாய் துர்நாற்றத்தை நீக்கும், வாய் குமட்டுதலை குணமாக்கும். சாப்பிட்ட பிறகு புதினா இலைகள் அல்லது புதினா டீ அருந்தினால் அஜீரணக் கோளாறு மட்டுப்படும்.

இஞ்சி: தினசரி  உணவுடன் இஞ்சி சேர்த்துக் கொள்வது  நல்ல பலன் தரும். இஞ்சி டீ அருந்தலாம். இஞ்சியில் ஆன்டி ஆக்சிடன்ட் இருப்பதால் அஜீரணத்தை கட்டுப்படுத்தும்.

பெருஞ்சீரகம்: சாப்பிட்டு முடித்தவுடன் பெருஞ்சீரகத்தை சிறிதளவு அப்படியே சாப்பிடலாம் அல்லது நீரில் போட்டு கொதிக்க வைத்து அருந்தலாம் அஜீரணத்தை சரி செய்யும்.

நெல்லிக்காய்: அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் தினம்  ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் அஜீரணக்கோளாறு நீங்கும்.

எலுமிச்சை: சாப்பிட்ட பிறகு எலுமிச்சை ஜூஸ் குடித்தால் வயிற்றெரிச்சல் மற்றும் வயிற்று வலி குறையும்.

தேன்: பாக்டீரியாக்கள் உற்பத்தியை தடுப்பதன் மூலம் அஜீரணத்தை குணப்படுத்த தேன் உதவுகிறது. தேனை அப்படியே சாப்பிடலாம் அல்லது வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிட்டு வர அஜீரணத்தைக் கட்டுப்படுத்தலாம்.

லவங்கப்பட்டை: லவங்கப்பட்டையில் ஆன்டி ஆக்சிடன்ட் அதிகம் இருப்பதால் அஜீரணத்தைக்  குணப்படுத்த உதவும். லவங்கப்பட்டையிலும் டீ  செய்து ஒரு நாளைக்கு 2-3 முறை அருந்தலாம்.

தொகுப்பு: ரிஷி

Tags :
× RELATED கண்ணைக் கட்டிக் கொள்ளாதே!