×

100 நாள் வேலை திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு ரத்தை கண்டித்து ஒன்றிய அரசுக்கு எதிராக மார்ச் 29,30ல் போராட்டம்: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு

கொல்கத்தா: 100 நாள் வேலை திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு ரத்தை கண்டித்து ஒன்றிய அரசுக்கு எதிராக மார்ச் 29,30ல்  போராட்டம் நடத்தப்படும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய மம்தா பானர்ஜி, மேற்கு வங்கத்திற்கு எதிராக ஒன்றிய அரசு பாகுபாட்டுடன் நடந்து கொள்கிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திற்கான நிதியை ஒன்றிய அரசு வழங்க மறுக்கிறது.  ஒன்றிய அரசிடம் இருந்து எந்த ஒரு திட்டத்திற்கும் நிதி பெறாத ஒரே மாநிலம் மேற்கு வங்கம்தான்.

பட்ஜெட்டில் நிதி ஒதுக்காமல் சர்வாதிகாரப் போக்குடன் ஒன்றிய அரசு நடப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.  அதானி மற்றும் அவரது நண்பர்கள் ஒரு சிலருக்காக மட்டுமே பாஜக அரசு பணியாற்றுகிறது. வெளிநாட்டுக்கு தப்பியோடிய மெஹூல் சோக்சிக்கு எதிரான ரெட் கார்னர் நோட்டீஸ் ஒன்றிய அரசால் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று மம்தா சாடியுள்ளார். ஒன்றிய அரசின் பாகுபாட்டைக் கண்டித்து நான் போராட இருக்கிறேன்.

ஒன்றிய அரசை கண்டித்து கொல்கத்தாவில் அம்பேத்கர் சிலை முன்பு வரும் 29ம் தேதி தொடங்கும் போராட்டம் 30ம் தேதி மாலை நிறைவு பெறும் எனவும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்திருக்கிறார். அவர் தொடர்ந்து கூறும்போது, ஒரு சில நபர்களே இந்த நாட்டை நடத்தி செல்கின்றனர். அதானி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோர் அவர்களது சிறந்த நண்பர்களாக உள்ளனர். அந்த மக்களுக்காக மட்டுமே பா.ஜ.க. வேலை செய்து வருகிறது எனவும் மம்தா குறிப்பிட்டார்.


Tags : Union government ,West Bengal ,Chief Minister ,Mamata Banerjee , 100 day work plan, allocation of funds, struggle, Mamata Banerjee
× RELATED மம்தா குறித்த சர்ச்சை பேச்சு பாஜ தலைவர் திலிப் கோஷ் மீது வழக்குப் பதிவு