
சென்னை: தமிழ்நாடு மகளிர் காவல்துறையின் 50வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு, 17ம் தேதி முதல் 27ம் தேதி வரை சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை நூற்றுக்கும் மேற்பட்ட பெண் காவலர்கள், பெண்கள் பாதுகாப்பு, போதை பழக்கத்திற்கு அடிமையாக வேண்டாம் என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பேரணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த சைக்கிள் பேரணியில் ஈடுபட்டுள்ள பெண் காவலர்களுக்கு வழிநெடுக பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் காவலர்கள் தரப்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. செங்கல்பட்டு வந்த பெண் காவலர்களுக்கு பழவேலி, சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் மாவட்ட காவல்துறை சார்பில் உணவு வழங்கப்பட்டது. செங்கல்பட்டு தாலுகா காவல் ஆய்வாளர் அசோகன் தலைமையில் காவலர்கள், மாணவ, மாணவிகள் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பிறகு செங்கல்பட்டில் இருந்து வழியனுப்பி வைத்தனர்.