×

மூளைக் கட்டி அச்சம் வேண்டாம்!

நன்றி குங்குமம் டாக்டர்

பிரெயின் டியூமர்…   ஏன்? எப்படி? என்ன சிகிச்சை?

அந்தப் பெண் குழந்தைக்கு வயது நான்கு. சில வாரங்களாக தலை வலி, வாந்தி மற்றும் நடப்பதில் சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட, குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் பெற்றோர். ஸ்கேன் செய்து பார்த்ததில் மூளையின் தண்டுப் பகுதியில் (Brain stem) கட்டி (Brain Tumor) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கட்டி மூளைப் பகுதியை அழுத்தியதால், தலைக்குள் உள்ள நீரோட்டம் பாதிக்கப்பட்டு வீக்கம் காணப்பட்டது. மருத்துவர்கள் நீரோட்டப் பாதையை வயிற்றுக்கு திருப்பியிருந்தனர். ஆனால், அது நிரந்தரத் தீர்வாக இருக்கவில்லை.

படுத்த படுக்கையாக இருந்த குழந்தையின் தலைக்குள் கிட்டதட்ட ஒரு எலுமிச்சைப் பழ அளவிலான கட்டி இருந்தது. மயக்க மருந்து நிபுணர், மூளை அறுவை சிகிச்சை நிபுணர்கள், குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவர்கள் என அனைவரும் இணைந்து பேசி அறுவைசிகிச்சை செய்ய முடிவெடுத்தோம். கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் தொடர்ந்து நடைபெற்ற சிகிச்சையில் கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது. சில நாட்கள் மருத்துவமனையில் ஃபிசியோதெரபி மற்றும் மறுவாழ்வுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இன்று குழந்தை ஸ்கூலுக்கு செல்லும் அளவுக்குக் குணமடைந்துவிட்டாள்.

ஞாபக மறதியால் அவதியுற்ற பெண்!

அந்தப் பெண்மணிக்கு வயது அறுபத்தைந்து. ஆந்திராவில் தனியாக வசித்து வருகிறார். அவரின் மகளுக்கு சென்னையில் ஐ.டி பணி. ஃபோனில் பேசும்போது பல விஷயங்களைத் தன் தாயார் மறந்து போவதைக் கவனித்தவர், மருத்துவரிடம் அவரை அழைத்துச் சென்றார். மூளையைப் பரிசோதித்த மருத்துவர் பெண்மணியின் மூளையில்  எட்டு செ.மீ அளவிலான பெரிய கட்டி இருப்பதைக் கண்டறிந்தார். அவரின் தாயை நாங்கள் பரிசோதித்தோம்.

மிக மிக சிக்கலான அறுவைசிகிச்சைதான், இருப்பினும் அனைத்து மருத்துவக் குழுவினரும் இணைந்து செயல்பட்டால், இது சாத்தியம் என்பதை உணர்ந்தோம். காலை எட்டு மணிக்குத் தொடங்கிய அறுவைசிகிச்சை கிட்டத்தட்ட  பதினான்கு மணி நேரம் தொடர்ந்து நடைபெற்றது. மூன்று நாட்கள் தீவிர கண்காணிப்பில் இருந்த பின்,  எட்டாம் நாள் அந்தப் பெண்மணி வீடு திரும்பினார். இப்போது யாரின் உதவியும் இன்றி நலமாக வசித்து வருகிறார்.

மூளைக்கட்டி எந்த வயதிலும் வரலாம்!

மேலே சொன்ன இரண்டு நோயாளிகளைப் பார்த்தாலே, மூளைக்கட்டி எனப்படும் பிரெயி ட்யூமர் எந்த வயதினருக்கும் வரலாம் என்பது புரிந்திருக்கும். குழந்தைக்கு ஏற்பட்டது பைலோசைடிக் அஸ்ட்ரோசைடோமா (Pilocytic Astrocytoma) வகை கட்டியாகும். அந்தப் பெண்மணிக்கு வந்திருந்தது, மெனின்ஜஸ் எனப்படும் மூளை மற்றும் முதுகுத் தண்டின் மேற்பரப்பில் வரக்கூடிய மெனிஞ்சியோமா (Meningioma) வகை கட்டியாகும்.

இவை இரண்டுமே கேன்சர் அல்லாத கட்டிகளாகும். எனவே, மூளைக்குள் கட்டி என்றாலே அது புற்றுநோயாக இருக்க வேண்டும் என்று எண்ணுவது தவறு. மூளை மண்டலத்தின் கிளையல் (Glial) செல்களில் ஏற்படும் கட்டிகளை கிளையோமா (Glioma) என்கிறோம். இவ்வகைக் கட்டிகளே பெரும்பாலும் புற்றுக் கட்டிகளாக இருக்கின்றன. சில சமயம் நுரையீரல் மற்றும் மார்பக கேன்சர் பரவி மூளையைத் தாக்க வாய்ப்புள்ளது. இவ்வகையிலும் மூளையில் கட்டி வரலாம். இதேபோல மெடுல்லா பிளாஸ்டோமா (Medulla Blastoma) என்ற புற்றுநோய்க் கட்டியும் உண்டு. இது பொதுவாக குழந்தைகளைத் தாக்குகிறது.

மூளைக் கட்டியின் அறிகுறிகள்...

* தலை வலி மற்றும் வாந்தி மூளைக் கட்டிக்கான முதல் அறிகுறிகள் ஆகும். மூளைக்குள் அழுத்தம் ஏற்படுவதால் இவை ஏற்படுகின்றன.
* கை கால் வலிப்பு
* பக்க வாதம்
* ஞாபக மறதி
* உடல் சமநிலை தவறுதல்
* கண் பார்வையில் கோளாறு
* கவனக் குறைபாடு
* உடலின் ஏதாவது பாகத்தில் வலுவிழப்பு
* சுய நினைவை இழத்தல்

மேற்கண்ட அறிகுறிகள் இருந்தால், உடனே அது மூளைக் கட்டியாக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. முதலில் பொது மருத்துவரை அணுகுங்கள். அவரின் அறிவுறுத்தலின் பேரில், தகுந்த நரம்பியல் மருத்துவரை அணுகலாம்.

ஏன் வருகிறது?

அறிவியல் பல கேள்விகளுக்கு இன்னும் விடை தேடிக்கொண்டே இருக்கிறது. அவற்றில் ஒன்று மூளையில் கட்டி ஏன் ஏற்படுகிறது என்பதற்கான காரணம். மரபியல் இதற்கானவொரு காரணமாக இருக்கிறது என்று அறிவியல் நிபுணர்கள் கருதுகின்றனர். கதிர்வீச்சின் பாதிப்பு மற்றும் முதுமை, மூளைக் கட்டிகளுக்கான பிற காரணங்களாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

என்னென்ன பரிசோதனைகள்...


எம்.ஆர்.ஐ (MRI) ஸ்கேன் மூலம் துல்லியமாக மூளைக் கட்டிகளை இனம் காணமுடியும். தேவைப்பட்டால் சிடி (CT) ஸ்கேன் மற்றும் பெட் (PET) ஸ்கேன் எடுக்கலாம். புற்றுநோய்க் கட்டியாக இருக்கலாம் எனும் பட்சத்தில், கட்டியின் சிறு பகுதி வெட்டப்பட்டு பயாப்சி எனப்படும் சதைப் பரிசோதனை செய்யப்படும்.

மூளைக் கட்டிக்கான சிகிச்சைகள்


மண்டை ஓட்டைத் திறந்து, அறுவைசிகிச்சை மூலம் கட்டியை அகற்றும் செய்முறையை கிரேனியோட்டமி (Craniotomy) என்கிறோம். மெனிஞ்சியோமா
வகை கட்டிகளை இதன் மூலம் முழுமையாக அகற்றலாம். கிளையோமா வகை புற்றுநோய்க் கட்டிகளை முடிந்தளவு (கிட்டத்தட்ட 80%) அகற்றி, பின்னர் கீமோதெரபி மற்றும் ரேடியோதெரபி சிகிச்சை வழங்கப்படுகிறது. தற்போது வரை மூளைக் கட்டியைக் கரைக்க மருந்துகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்தில் வரலாம். மூளையில் வரும் கட்டிகள் பிற பாகங்களுக்கு பரவுவதில்லை என்பதே ஒரே ஆறுதல்.

மூளைக் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், குடும்பத்தினரும் நண்பர்களும் அவர்களுக்கு பக்கபலமாய் இருக்க வேண்டும். அறுவைசிகிச்சை மூலம் கட்டியை அகற்றிய பின்னர்  நான்கு நாட்கள் வரை மருத்துவமனையில் இருக்க நேரிடும். பின்னர் வீட்டில்  ஆறு வாரங்கள் வரை இருக்க நேரிடும். இந்தக் காலத்தில் பேச்சுப் பயிற்சி, பிசியோதெரபி மற்றும் மறுவாழ்வுப் பயிற்சிகள் வழங்குவதால் மீண்டும் இயல்பு வாழ்வை அவர்களால் வாழ முடியும்!

மூளைக் கட்டியை அறுவைசிகிச்சை செய்து எடுப்பது பெரும் சவாலான, சிக்கலான விஷயமாகும். வலிப்பு மருந்து, வீக்க மருந்து, மயக்க மருந்து, இருதயப் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை அனைத்தும் செய்த பின்னரே சிகிச்சை தரப்படும் என்பதால் இது வெற்றிகரமாக நடக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன.

Tags :
× RELATED கவுன்சலிங் ரூம்