மருத்துவ சிகிச்சைக்கு க்ரவுடு ஃபண்டிங்… உதவும் தன்னார்வலர்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

மருத்துவ சிகிச்சைக்குப் பணம் இல்லை என்பது மிக வருத்தத்துக்குரிய பிரச்னைதான். நம் அரசும் இலவச மருத்துவ சிகிச்சை முதல் இலவச காப்பீட்டுத் திட்டங்கள் வரை எத்தனையோ திட்டங்களை வகுத்தாலும், இன்னமும் எளிய மனிதர்கள் தங்களின் அன்புக்குரியவர்களின் சிகிச்சைக்காக பணமின்றித் தவிப்பது என்பது அன்றாடத் தொடர்கதையாக இருக்கிறது. வீட்டில் இருக்கும் சொத்துகளை விற்று, கையில், காதில் கிடப்பதை எல்லாம் கழட்டி அடகு வைத்து, நண்பர்கள், உறவினர்கள் எனப் பலரிடமும் கையேந்தி நின்றாலும் எதிர்கொள்ள முடியாத பெருஞ் செலவாக பலருக்கும் மருத்துவ செலவுகள் இருக்கின்றன.

இன்றைய தகவல் தொடர்பு யுகத்தில் இணையம் பல்வேறு சாத்தியங்களைத் திறந்துவிட்டிருப்பதைப் போலவே மருத்துவத்துறையிலும் க்ரவுடு ஃபண்டிங் எனப்படும் தன்னார்வலர்களிடம் நிதி திரட்டும் புதிய வாய்ப்பையும் உருவாக்கியிருக்கிறது. இதில், பல்வேறு தன்னார்வலர்கள், அமைப்புகள், சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் மூவரும் ஒரே புள்ளியில் இணைந்து தேவையானவர்களுக்குத் தேவைப்பட்ட உதவியைச் செய்ய முடிகிறது. அப்படியான ஓர் அமைப்புதான் மிலாப்.ஆர்ஜ். க்ரவுண்ட் ஃபண்டிங் முறையில் நிதி திரட்டுவதில் பனிரெண்டு வருடங்கள் அனுபவம் கொண்ட முன்னணி நிறுவனம் இது. விரிவான நன்கொடையாளர்கள் கொண்ட வலையமைப்பு இவர்களிடம் இருப்பதால் தனிமனிதர்களால் எதிர்கொள்ளவியலாத மிகப் பெரிய நிதித் தேவையைக் கூட இவர்களால் எளிதாகச் செய்துதர முடிகிறது.

உதாரணமாக, குஜராத்தைச் சேர்ந்த 7 மாத ஆண் குழந்தையான அப்பாஸ் அலிக்கு பிறப்பிலிருந்தே பிலாரி அட்ரேசியா இருப்பது கண்டறியப்பட்டதால், அவருக்கு அவசரமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது. அவரது சிகிச்சைக்காக ஏற்கனவே 5 லட்ச ரூபாய்க்கு மேல் செலவழித்த குடும்பத்தால், உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைக்குத் தேவைப்பட்ட ரூ. 28 லட்சத்தை சேகரிக்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து மாற்று அறுவைசிகிச்சைக்கு ரூ. 23 லட்சமும், முன் மதிப்பீடு, பிந்தைய மருந்துகளுக்கு கூடுதலாக ரூ.5 லட்சமும் தேவைப்பட்டது.

அவசரமாக செய்யப்பட வேண்டிய சிகிச்சை இது. எனவே, Milaap.org-ல் நிதிதிரட்டல் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஒரு மாதத்துக்குள் உலகம் முழுவதிலுமிருந்து 1,243 பேர் தங்கள் விரும்பிய தொகையை வழங்க முன்வந்தனர். அவரது அறுவைசிகிச்சை, அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய சிகிச்சைக்கு உதவியாக ரூ. 30 லட்சம் வரை நன்கொடை சேர்ந்தது. முகம் தெரியாதவர்களின் தாராள மனப்பான்மையால் அந்தக் குழந்தையின் வாழ்க்கை மாற்றியமைக்கப்பட்டு சிறப்பு கவனிப்பைப் பெற முடிந்துள்ளது.

இதேபோல், லூதியானாவைச் சேர்ந்த 6 மாத ஆண் குழந்தை ஹர்திக், பிறவி கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்ய சுமார் 20 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. ஏற்கனவே சுமார் 4.5 லட்சம் ரூபாய் செலவழித்துவிட்டதால், அந்தக் குடும்பம் தங்கள் மகனுக்கு சிகிச்சை அளிக்க நிதி உதவியை எதிர்பார்க்கிறது. இந்தியாவில் கிரவுட் ஃபண்டிங்கிற்கு மிகவும் பாதுகாப்பான, நம்பகமான நிறுவனம் என்கிற பெயரைப் பெற்றுள்ளது.

மிலாப்பில் 7 லட்சம் நிதி திரட்டும் முயற்சிகள் நடைபெற்றுள்ளன, அவற்றில் 90% மருத்துவத் தேவைகளுக்கானவை. மருத்துவ, சமூக காரணங்களுக்காக ரூ. 2,024 கோடிக்கு மேல் நிதி திரட்டி ஒரு மைல்கல்லை மிலாப் எட்டியுள்ளது. மேலே குறிப்பிட்டது போன்ற குடும்பங்களுக்கு நிதி திரட்ட உதவும் வகையில் Milaap தன் தளத்தை இலவச சேவையாக வழங்குகிறது. நிதி தேவைப்படும் எவரும் milaap.org-ல் நுழைந்து, தள நிர்வாகத்தால் சரிபார்க்கப் பட்டு அங்கீகரிக்கப்பட்டவுடன், எந்த கட்டணமும் இன்றி நிதி திரட்டலைத் தொடங்கலாம்.

இந்தியா போன்ற அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டில், மையப்படுத்தப்பட்ட ஒரு திட்டத்தின் மூலம் அனைவரும் சமமாகப் பாதுகாக்கப்படுவது சாத்திய மல்ல. கடினமான சூழ்நிலைகளின் போது உதவுவதற்கு நண்பர்களைப் போலவே இரக்கமுள்ள உதவும் குணம் படைத்தவர்கள் இருப்பதும் சாத்தியம் தான். ஒவ்வொரு நபரும் வாழ்க்கையில் எதிர்பாராத துன்பங்களை எதிர்த்துப் போராடுவதற்கான நியாயமான வாய்ப்பைப் பெறத் தகுதியுடையவரே. இணைய வழி கிரவுட் ஃபண்டிங் என்பது ஒரு தேசமாக, அடுத்தகட்ட மருத்துவ சிகிச்சையை அனைவரும் பெறுவதற்கான மிகப் பெரிய திறவுகோலாக மாறலாம்.

தொகுப்பு : ஜாய் சங்கீதா

Related Stories: