வெயிலோடு விளையாடி… வெயிலோடு உறவாடி…

நன்றி குங்குமம் டாக்டர்

வைட்டமின் டி அலெர்ட்!

மனிதன் காட்டிலும் மேட்டிலும் அலைந்து திரிந்த நாட்களில் இல்லாத பிரச்னை ஒன்று இப்போது ஏற்பட்டு உள்ளது. அது வைட்டமின் டி குறைபாடு. வெயில் நம் மீது படுவது குறைவதால்தான் வைட்டமின் டி குறைபாடு ஏற்படுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். ஏ.சி அறையில் இருந்து வெளியேறி, ஏ.சி காரில் ஏறி இன்னொரு ஏ.சி அறையில் அமர்ந்து அலுவல் பார்த்துவிட்டு மீண்டும் ஏ.சி அறைக்குத் திரும்பும் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் பிரச்னை இது.

சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதாக் கதிர்கள் நம் மேனியில் படும்போது, நம் உடல் அதில் இருந்து தனக்கான வைட்டமின் டி என்ற முக்கியமான சத்தைக் கிரகித்துக்கொள்கிறது. மற்ற வைட்டமின்கள் அனைத்தும் நமக்கு உணவுப் பொருட்கள் மூலமாக உடலுக்குப் போதுமான அளவு கிடைக்கின்றன. ஆனால், இந்த வைட்டமின் டி மட்டும் நமக்கு சூரிய வெளிச்சத்தில் இருந்து மட்டுமே நிறைவாகக் கிடைக்கிறது. பால் பொருட்களிலும், கீரைகளிலும், கொய்யா போன்ற கனிகளிலும் இருந்து மிகக் குறைந்த அளவு (சுமார் இரண்டு சதவிகிதத்துக்கும் குறைவாக) கிடைத்தாலும், அது முழுமையானது அல்ல. எனவே, நம் உடல் வைட்டமின் டி சத்துக்காக சூரியனையே நம்பி உள்ளது.

வைட்டமின் டி ஏன் தேவை?

நம் உடலுக்கு அஸ்திவாரமாய் இருப்பவை எலும்புகள். எலும்புகளில்தான் கோடிக்கணக்கான செல்கள் நாள்தோறும் உற்பத்தியாகி, உடல் புது உருக்கொள்ள பயணப்படுகின்றன. வைட்டமின் டி நம் எலும்புகளை உறுதியாக்கி, நம் ஆரோக்கியத்துக்கு அச்சாரம் இடுகிறது. எலும்புகள் வலுவாக இருக்க கால்சியம் தேவை. அந்த கால்சியத்தை உடல் கிரகிக்க  வைட்டமின் டிதான் உதவுகிறது. நம் உடலின் வளர்சிதை மாற்றத்தை சீராக வைத்திருக்கவும், மூளையில் சுரக்கும் எண்டார்பின் எனும் உற்சாகம் தரும் ஹார்மோன் சுரப்பை மேம்படுத்தவும், உடல் கடிகாரத்தை சீராகப் பராமரிக்கவும் வைட்டமின் டி தேவை.

நாம் போதுமான அளவு வெயிலில் இல்லாதபோது நம் உடலில் வைட்டமின் டி குறைகிறது. இதனால், எலும்பு அடர்த்திக் குறைதல், எலும்புத் தேய்மானம் உட்பட பல்வேறு வளர்சிதை மாற்றக் கோளாறுகள் உடலில் ஏற்படுகின்றன.

வெயிலோடு உறவாடுவோம்!

புற ஊதாக் கதிர்களில் ஏ, பி என இருவகை உள்ளன. இதில் ஏ வீரியம் குறைந்தது. காலை 6:00 மணி முதல் 10:00 மணி வரையிலும் மாலை நான்கு மணிக்கு மேலும் ஏ வகைக் கதிர்கள் இருக்கும். காலை 11:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை பி வகைக் கதிர்கள் இருக்கும். இந்தக் கதிர்களில் வைட்டமின் டி அதிகமாக இருக்கும். என்றாலும், இவற்றில் கார்சினோஜன் எனப்படும் புற்றுநோய் காரணியும் உள்ளது. எனவே, இதைத் தவிர்க்கலாம்.

தினமும் காலை 6-9 அல்லது மாலை 4-6 மணி அளவில் வெயிலில் நடக்கும்போது, உடலுக்குத் தேவையான வைட்டமின் டி கிடைக்கிறது. சிலர் பால்கனியில் நின்றுகொண்டு வெயிலில் காய்வார்கள். இது, போதுமான சத்தை உடலுக்குத் தராது. முடிந்தவரை திறந்தவெளியில் நிற்பது நல்லது.உணவில் வைட்டமின் டிபால், சிக்கன், மீன், முட்டை போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். உணவு மூலமாக மிகக்குறைவான அளவே வைட்டமின்-டி கிடைக்கும். அதனால் தவிர்க்காமல் தினசரி உணவில் இவற்றில் ஏதாவது ஒன்றைச் சேர்க்க வேண்டும்.

வைட்டமின் டி மாத்திரைகள்

ஏ.சி வசதியுள்ள அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் பகல் நேரத்தில் வெளியே செல்ல முடியவில்லை என்றால், வைட்டமின்-டி மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் உட்கொள்ளவும். பாதிப்பின் தீவிரத்தைப்பொறுத்தே மாத்திரையின் அளவு பரிந்துரைக்கப்படும்.

தொடர் சிகிச்சையின் மூலம் வைட்டமின்-டி குறைபாட்டைச் சரிசெய்துவிட்டாலும் அதன் அளவை சீராக வைத்துக்கொள்ளத் தொடர்ந்து மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும். மாத்திரையின் அளவு நபருக்கு நபர் வேறுபடும்.

தேசிய ஊட்டச்சத்து நிறுவனம்

தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் `இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோரில் பெரும்பாலானோர் வைட்டமின் டி பற்றாக்குறையால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்’ என்று தெரிவித்திருக்கிறது. இதன்படி பார்த்தால் வயது முதிர்வும் வைட்டமின்-டி குறைபாட்டுக்கு முக்கியக் காரணம் என்பதால், மற்றவர்களைவிட முதியவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

தொகுப்பு: யுவா

Related Stories: