×

குழந்தைகளுக்கான தைராய்டு… தீர்வு என்ன?

நன்றி குங்குமம் டாக்டர்

தைராய்டு பிரச்சனை முன்பெல்லாம் பெரியவர்களுக்குத்தான் அதிகமாக வந்துகொண்டிருந்தது என நம்பப்பட்டது. ஆனால், சமீபத்தில் குழந்தைகளுக்கும் வளரிளம் பருவத்தினருக்குமேகூட தைராய்டு பிரச்சனை ஒரு தீவிரமான பாதிப்பாக உருவெடுத்துள்ளது. குழந்தைகளுக்கான தைராய்டு பிரச்சனைக்கு சிகிச்சை என்ன? அதற்கான தீர்வுகள் என்னென்ன என்று பார்ப்போம்.

தைராய்டு சுரப்பி என்றால் என்ன?


தைராய்டு சுரப்பி என்பது நமது கழுத்துப் பகுதியில் பட்டாம்பூச்சி வடிவில் இருக்கும் நாளமில்லா சுரப்பி. இது ‘‘தைராய்டு ஹார்மோன்கள்” எனப்படும் முக்கியமான ஹார்மோன்களை ரத்தத்தில் கலக்கச் செய்கிறது.  இதயம் மூலம் ரத்தத்தை பம்ப் செய்தல், நுரையீரலின் சுவாசச் செயல்பாடு, குடல் இயக்கம், நரம்பு மண்டலத்தைச் செயல்படுத்துதல் போன்ற முக்கியமான பல உடலியல் செயல்பாடுகளுக்கு தைராய்டு ஹார்மோன்கள் அவசியம்.

தைராய்டு பிரச்சனை

இந்த தைராய்டு சுரப்பில் ஏற்படும் பிரச்சனையை ஹைப்போ தைராய்டிசம் மற்றும் ஹைப்பர் தைராய்டிசம் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

ஹைபோதைராய்டிஸம்

இது தைராய்டு சுரப்பி போதுமான அளவு தைராய்டு ஹார்மோன்களை சுரக்காமல் இருக்கும் நிலை.

அறிகுறிகள்

உடல் இயக்கம் அனைத்தும் மெதுவாக செயல்படுவதால், அதிக குளிர் உணர்வது, எளிதில் சோர்வடைவது, சருமம் உலர்வது, எடை கூடுதல், தூக்கக் கலக்கம், மறதி மற்றும் மனச்சோர்வு அதிகரிப்பது, மாதவிடாய் பிரச்சினைகள் மற்றும் மலச்சிக்கல் ஆகியவை.

காரணங்கள்

உடலில் அல்லது தைராய்டில் ஏற்படும் ஆட்டோ இம்யூன் வியாதிகள், தைராய்டு அறுவை சிகிச்சை, கழுத்துப் பகுதியில் கொடுக்கப்படும் கதிர்வீச்சு சிகிச்சை, பிறக்கும்போதே தைராய்டு பிரச்சினைகளுடன் பிறப்பது, தைராய்டில் எரிவு (inflammation), குறிப்பிட்ட சில மருந்துகள், மிக அதிக அல்லது மிகவும் குறைவான அயோடின் மற்றும் தைராய்டை கட்டுப்படுத்தும் மூளையிலுள்ள பிட்யூட்டரி சுரப்பியில் நோய் மற்றும் குடும்பத்தில் தைராய்டு நோய் இருப்பது.

ஹைபர்தைராய்டிஸம் (Hyperthyroidism)

இது, உடலின் தேவையைவிட அதிக தைராய்டு ஹார்மோன் சுரக்கும் நிலை. இந்த நிலையில், உடலின் அனைத்து இயக்கங்களின் வேகம் அதிகரிக்கிறது. இதன் அறிகுறிகள் மிகவும் மெதுவாக ஆரம்பித்து முன்னேறுவதால், மன அழுத்தம் அல்லது பதற்றம் எனத் தவறாகப் புரிந்துகொள்ள நேரிடும்.

அறிகுறிகள்

பதற்றம், அதிக வியர்வை, படபடப்பு, கை நடுக்கம், தூங்குவதில் சிரமம், சருமம் மெலிதல், முடி உதிர்தல், தசைகள் ஓய்ந்து போதல்  குறிப்பாக தொடை மற்றும் தோற்பட்டை தசைகள், அடிக்கடி மலம் கழித்தல், பெண்களுக்கு மாதவிடாய் சரியாக இல்லாமல் இருத்தல், எடை குறைதல் ஆகியவை.

காரணங்கள்

‘கிரேவ்ஸ்’ நோய் எனப்படும் நோயால் பொதுவாக ஏற்படும். இது தவிர தைராய்டு சுரப்பியில் ஏற்படும் கட்டி அல்லது முடிச்சுகளாலும், எரிவாலும், தொற்றாலும் சில வகையான மருந்துகளாலும் ஏற்படலாம்.

வளரும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்!


உடல் வளர்ச்சி மற்றும் மன வளர்ச்சி என இரண்டு முக்கியமான விஷயங்களை தைராய்டு ஹார்மோன் குழந்தைகளுக்கு வழங்குகிறது. உடல் மற்றும் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு தைராய்டு ஹார்மோன் குறைபாடுகூட ஒரு காரணமாக இருக்கலாம்.

குழந்தைகளுக்கு வாழ்நாள் சிகிச்சை அவசியமா?

தைராய்டு குறைபாடுகள் உள்ள பெரியவர்கள் பொதுவாக வாழ்நாள் முழுவதும் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஹைப்போ தைராய்டிசம் உள்ள குழந்தைகள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு நிரந்தர தைராய்டு குறைபாடுகள் இருக்கலாம். அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் சிகிச்சை அவசியம் ஆகும். அதே சமயம் நிலையற்ற ஹைப்போ தைராய்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு குறுகிய கால தைராய்டு சிகிச்சையே போதுமானதாகும்.

பரிசோதனைகள் அவசியம்

ஹைப்போ தைராய்டிச பாதிப்பு இருக்கும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு அறிகுறிகள் எதுவும் இல்லாமல் கடுமையான தைராய்டு ஹார்மோன் குறைபாடு இருக்கலாம். எனவே, பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் ஹைப்போ தைராய்டிச பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது முக்கியமானதாகும். வளர்ச்சி குறைபாடு மற்றும் மன வளர்ச்சி குன்றிய அனைத்து குழந்தைகளுக்கும் தைராய்டு பரிசோதனை அவசியமாகும்.

தைராய்டு சுரப்பியால் உற்பத்தி செய்யப்படும் தைராய்டு ஹார்மோன்கள் ரத்தத்தில் டி3 மற்றும் டி4 என அளவிடப் படுகிறது. தைராய்டு சுரப்பி நமது தலைப் பகுதியில் உள்ள பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து உற்பத்தி செய்யப்படும் டிஎஸ்ஹெச் எனப்படும் தைராய்டு தூண்டுதல் ஹார்மோனால் கட்டுப்படுத்தப்படுகிறது.

ஹைப்போ தைராய்டிசம் உள்ள குழந்தைகளுக்கு இந்த டிஎஸ்ஹெச் அளவு அதிகமாகவும், டி3 டி4 அளவு குறைவாகவும் இருக்கும். இதைக் கண்டறிய தைராய்டு அல்ட்ராசவுண்ட், நியூக்ளியர் ஸ்கேன் மற்றும் தைராய்டு ஊசி ஆஸ்பிரேஷன் போன்ற சிகிச்சைமுறைகள் உள்ளன. பிரச்சினையின் அடிப்படையில் தேவையான பரிசோதனை டாக்டர்களால் மேற்கொள்ளப்படும்.

சிகிச்சைகள்!

தைராய்டு ஹார்மோனுக்கான மருந்து சிரப் அல்லது பிற திரவ வடிவில் கிடைக்காது. அது மாத்திரையாக மட்டுமே கிடைக்கும். ஹைப்போ தைராய்டிசம் உள்ள குழந்தைகள் காலையில் எழுந்த வுடன் வெறும் வயிற்றில் மாத்திரையைச் சாப்பிட வேண்டும். இந்த மாத்திரையை சோயா உணவு அல்லது இரும்புச்சத்து மாத்திரைகளுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளக்கூடாது.

உணவுமுறை!

தைராய்டு பிரச்சனை உள்ள குழந்தைகள் முட்டைக்கோஸ், காலிபிளவர் மற்றும் ப்ரோக்கோலி உள்ளிட்டவற்றைத் தவிர்க்க வேண்டும். வளரும் குழந்தைகளிடம் இவற்றால் பாதிப்பு ஏதேனும் ஏற்படுமா என்பது குறித்து  எந்தவித ஆய்வறிக்கையும் இல்லை. எனவே, வயதுக்கு ஏற்ற கலோரிகள் மற்றும் புரத உணவுகளை உட்கொள்ள வேண்டும்.  

தைராய்டு குழந்தைகள் பராமரிப்பு முறைகள்

குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப தைராக்சின் அளவை சரிசெய்ய வேண்டும். குழந்தையின் வயது அதிகரிக்கும் போது, அவ்வப்போது உயரம், எடை மற்றும் ரத்த பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். மேலும் உங்கள் டாக்டரின் ஆலோசனைப்படி குழந்தைக்கு சரியான முறையில் மாத்திரைகளை வழங்க வேண்டும்.டாக்டர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை அவர் குறிப்பிட்ட நேரத்தில் தவறாமல் உங்கள் குழந்தைக்கு கொடுங்கள்.

ரத்தத்தில் உள்ள தைராய்டு ஹார்மோனின் அளவை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்ளவும். மேலும் மருந்து மாத்திரைகளின் அளவு குறித்து உங்கள் டாக்டர் வழங்கும் அறிவுரையை பின்பற்றவும். சரியான வளர்ச்சி அட்டவணைப்படி உங்கள் குழந்தையின் வளர்ச்சி உள்ளதா என்பதையும் பரிசோதித்துக் கொள்ளவும்.

தொகுப்பு -  யாழ் ஸ்ரீதேவி

Tags :
× RELATED அனஸ்வரா ராஜன் ஃபிட்னெஸ்