×

கவுன்சலிங் ரூம்

நன்றி குங்குமம் டாக்டர்  

எனக்கு வெயில் காலங்களில் அக்குளில் அக்கி எனப்படும் சிறுசிறு கொப்புளங்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. டாக்டரிடம் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டால் சில மாதங்கள் எந்தப் பிரச்னையும் இல்லாமல் நன்றாக இருக்கிறது. பிறகு, மீண்டும் இது ஏற்படுகிறது. இந்த அக்கி ஏன் ஏற்படுகிறது? இதற்கு நிரந்தரத் தீர்வு உண்டா?

கே.சி.மகிமைதாஸ், மணப்பாடு.அக்குளில் ஏற்படும் அக்கியை ‘ஷிங்கில்ஸ்‘ அல்லது ‘ஹெர்பிஸ் ஜோஸ்டர்‘ என அழைப்பார்கள். சின்னம்மையை ஏற்படுத்தும் வைரஸ் கிருமிகள் நரம்பு மண்டல அணுக்களுக்குள் தங்கி சிறிது காலம் கழித்து, உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறையும்போது மறு உயிர்ப்பு பெற்று இந்தப் பிரச்னையை ஏற்படுத்துகின்றன. வைரஸ் கிருமிகள் மறு உயிர்ப்பு பெறும்போது உடலின் ஒரு பகுதியில் மட்டும் வலிபோன்ற உணர்வு ஏற்படும்.  முதுகு நரம்புகளில் இருந்து வைரஸ் ஒரு நரம்பு வழியாக வெளிப்படுவதால் இந்த வலி ஏற்படுகிறது. இந்த வலி சில நாட்கள் நீடிக்கும். பின்னர், தோலில் சீழுடன் சிறுசிறு கொப்புளங்கள் தோன்ற ஆரம்பிக்கும்.

தோல் கொப்புளங்கள் மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை நீடித்துப்பரவும். இவை சில நாட்களில் காய்ந்து பொருக்குகளாகி உதிரும்.  இதற்கு இரண்டு முதல் மூன்று வாரங்கள் ஆகலாம். இந்தக் கொப்புளங்கள் மற்றவர்களுக்கும் பரவும் தன்மை கொண்டவை. எனவே, இந்த பாதிப்பு உள்ளவர்களிடம் இருந்து மற்றவர்கள் விலகி இருக்க வேண்டும். குறிப்பாக, கர்ப்பிணிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பிறக்கும் குழந்தைக்கு ஏற்படும் சின்னம்மை மரணத்தையே ஏற்படுத்த வல்லவை.  இந்தக் கொப்புளங்களுக்கு ஈரமான குளிர் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இதற்கு அலுமினியம் அசிடேட் கலவையைப் பயன்படுத்தலாம். கொப்புளங்களை நன்கு கழுவ வேண்டும். அவற்றை கட்டுப்போட்டு மறைக்கக் கூடாது.

காலமைன் லோஷன் கிரிம்களைப் பூசலாம். வலி இருக்கும் என்றால் டாக்டரின் பரிந்துரையின் பேரில் வலி நீக்கும் மாத்திரைகள் மற்றும் களிம்புகளைத் தடவலாம். வேப்பிலையையும் மஞ்சளையும் அரைத்துப் பூசுவதாலும் இவை கட்டுப்படுகின்றன. இந்தக் கட்டிகள் முகத்தில் குறிப்பாக கண்களுக்கு அருகே தோன்றினால் உடனே மருத்துவர் உதவியை நாட வேண்டும்.

கவனிக்காமல் விட்டால் பார்வை இழப்புகூட ஏற்படக்கூடும். வலி நீக்கி மருந்துகள், மனச்சோர்வுக்கான மருந்துகள் மற்றும் அறுவைசிகிச்சைகூட தீவிரமான பாதிப்பு உள்ளவர்களுக்குத் தர வேண்டியது இருக்கும். அருகில் உள்ள மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.

எனக்கு வயது 53. நான் கடந்த ஆண்டு முதல் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவருகிறேன். தற்போது இந்த நோய் என் மனைவிக்கும் பரவி உள்ளதோ என சந்தேகமாக உள்ளது. யானைக்கால் நோய் ஏன் ஏற்படுகிறது? இது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவுமா? இதற்கு என்ன தீர்வு?
- உப்பிலிசாமி, காரைக்கால்.

யானைக்கால் நோய் எனப்படும் லிம்ஃபாடிக் ஃபைலெரியாசிஸ் (Lymphatic filariasis) உடலின் நிணநீரில் வாழும் ஒட்டுண்ணிப் புழுக்களால் உருவாகிறது. நிணநீரில் வாழும் மைக்ரோஃபைலேரியா எனப்படும் ஒட்டுண்ணிப் புழுக்களின் லார்வாக்கள் ரத்த ஓட்டத்தில் கலந்து உடல் முழுக்கப் பயணிக்கும். இந்த பாதிப்பு ஏற்பட்டவரைக் கொசு கடிக்கும்போது, அதன் லார்வாக்கள் கொசுவுக்குத் தொற்றி, அந்தக் கொசு இன்னொருவரைக் கடிக்கும்போது அவருக்கும் யானைக்கால் நோய் ஏற்படுகிறது.  திடீரென அடிக்கடி ஏற்படும் காய்ச்சல், தலைவலி, உடல் வலி, சோர்வு, குளிர் நடுக்கம், மலேரியா போல விட்டுவிட்டு தோன்றும் காய்ச்சல், கை, கால்களில் தோல் வீக்கம், வலி, பெரிதான நிணநீர் முடிச்சுகள், நிணநீர் குழாய் வீக்கம், கை, கால்களின் கீழ்ப்பகுதி, பிறப்புறுப்பில் வீக்கம் போன்றவை இதன் அறிகுறிகள்.   

இந்த பாதிப்பு ஏற்பட்டவருக்கு டைஈதல் கார்பமிஸின் (டிஈசி -ஹெட்ரசான்) மாத்திரைகள் தரப்படுகின்றன. இந்த மருந்தை நோயாளியின் எடையில் கிலோவுக்கு 6 மி.கி என்ற கணக்கில் இரண்டு வாரங்களுக்குத் தர வேண்டும். இதன் விலை மிகவும் மலிவு. இதனுடன் அல்பெல்டஸோல் மாத்திரையையும் மருத்துவர் பரிந்துரையுடன் அளவாக எடுத்துக்கொள்ளலாம்.  கால் வீக்கத்தைக் குறைக்க எலாஸ்டிக் பேண்ட் அணிவது நல்லது. இது நிரந்தரமாகக் கால் வீங்கிப்போவதைத் தவிர்க்கும். இரவு நேரத்தில் கட்டை அவிழ்த்துவிடுவது நல்லது. இந்த நோய் கொசுக்கள் மூலம் பரவுவதால், சுகாதாரமான சூழல் அவசியம். இந்த கொசுக்கள் மாலை நேரத்தில்தான் கடிக்கும் என்பதால், கொசுவலை போன்றவற்றைப் பயன்படுத்தி இந்த நோய்  பரவாமல் தடுக்கலாம்.

மருத்துவப் பேராசிரியர் முத்தையா

Tags :
× RELATED சிறுநீரகக் கற்களுக்கு ஆயுர்வேதத் தீர்வு!