×

உடனடி எடைக் குறைப்புக்கு ஜி.எம் டயட்!

நன்றி குங்குமம் டாக்டர்  

ஜி.எம் டயட் சமீபத்தில் உலகம் முழுதும் அதிரிபுதிரி ஹிட் அடித்திருக்கும் அட்டகாசமான டயட். ஜெனரல் மோட்டார் நிறுவனம், தன் ஊழியர்கள் விரைவில் உடல் எடையைக் குறைப்பதற்காக, பல்வேறு டயட் முறைகளை ஆராய்ந்து உடனடி பலன் கிடைப்பதற்காகக் கண்டுபிடித்த டயட் என்பதால், இதை ஜி.எம் டயட் என்கிறார்கள். அதிரடியாக எடை குறைக்க ஏற்ற டயட் என்பதால், ஹாலிவுட், பாலிவுட் செலிபிரிட்டிகள் முதல் உலகெங்கும் பலர் இந்த டயட்டைப் பின்பற்றுகிறார்கள். குறிப்பாக, பெண்கள் அதிலும் திருமணத்தை நெருங்கும் இளம்பெண்களிடையே இந்த டயட் மிகவும் பிரபலம்.

எப்படிப் பின்பற்ற வேண்டும்?

இந்த டயட்டை ஒரு கோர்ஸில் ஏழு நாட்களுக்குப் பின்பற்ற வேண்டும். மிகவும் கட்டுப்பாடான டயட் என்பதால், ஆறு மாதங்களுக்கு ஒருமுறைதான் இதைப் பின்பற்ற வேண்டும். இதன்மூலம், அதிகபட்சமாக 10 கிலோ வரை எடையைக் குறைத்து, தோற்றத்தை ஸ்லிம்மாக்கிக்கொள்ள இயலும். மேலும், சருமம் பொலிவு பெறும்; உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்கள் நீங்கும். இந்த டயட்டைப் பின்பற்றும் முன் மருத்துவர் மற்றும் டயட்டீஷியனிடம் உங்கள் வழக்கமான உணவுப்பழக்கம், வாழ்க்கைமுறை போன்றவற்றை ஆலோசித்து மேற்கொள்வது சிறந்த பலனைத் தரும்.

முதல் நாள்

பழங்களால் ஆன டயட்டே முதல் நாள் மெனு. பழங்களைத் தவிர காய்கறிகள், சாதம் எதையும் தொடவே கூடாது. தர்பூசணி, மாதுளை, ஆப்பிள், எலுமிச்சை, ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றைச் சாப்பிடலாம். வாழை, லிச்சி, மாம்பழம் மற்றும் திராட்சையைச் சேர்க்கக் கூடாது. தண்ணீர் 10 முதல் 12 கிளாஸ் அவசியம் அருந்த வேண்டும்.

இரண்டாம் நாள்

முதல் நாள் பழங்களாகச் சாப்பிட்டதில் உடல் சற்று சோர்ந்திருக்கும். எனவே, உடலுக்குப் போதிய எனர்ஜி கிடைக்க வேகவைத்த ஓர் உருளைக்கிழங்கை ஒரு டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்துக் காலை உணவாகச் சாப்பிடலாம். வெண்ணெய் சேர்ப்பதால் நல்ல கொழுப்பு உடலில் சேரும். பின் காய்கறிகளைப் பச்சையாகவோ அல்லது எண்ணெய் சேர்க்காமல் வேகவைத்தோ மதியமும் இரவும் சாப்பிடலாம். கீரைகளையும் வேகவைத்துச் சாப்பிடலாம். முட்டைக்கோஸ், கேரட், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளை சாலட் செய்து அதிகமாகச் சாப்பிடலாம். தண்ணீர் 10 முதல் 12 கிளாஸ் அவசியம் அருந்த வேண்டும்.

மூன்றாம் நாள்

முதல் இரண்டு நாட்கள் உண்ட காய்கறிகளில் உருளைக்கிழங்கைத் தவிர மற்றவற்றையும் பழங்களையும் கீரைகளையும் சாப்பிடலாம். காய்கறி, பழங்களை சாலட் செய்து சாப்பிடலாம். வாழைப் பழத்தை இன்றும் தவிர்க்க வேண்டும். தண்ணீர் 10 முதல் 12 கிளாஸ் அருந்த வேண்டும்.

நான்காம் நாள்

ஒரு டம்ளர் பால் (ஸ்கிம்டு மில்க்) மற்றும் இரண்டு வாழைப்பழங்களை தலா மூன்று வேளையும் சாப்பிட வேண்டும். கடந்த மூன்று நாட்களாக ஜி.எம் டயட் பின்பற்றி இருப்பதால், உடலில் சோடியத்தின் அளவு குறைந்திருக்கும், வாழைப்பழத்தை உட்கொள்வதன் மூலம் உடலுக்கு வேண்டிய சோடியம் மற்றும் பொட்டாசியத்தைப் பெறலாம். பால் மற்றும் வாழைப்பழத்துடன் தக்காளி, வெங்காயம், குடைமிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து, சூப்செய்து குடிக்கலாம். தண்ணீர் 10 முதல் 12 கிளாஸ் அருந்த வேண்டும்.

ஐந்தாம் நாள்

முளைகட்டிய பயறை வேகவைத்துச் சாப்பிடலாம் அல்லது பிரவுன் அரிசி சாதத்துடன் தயிரும் தக்காளியும் சேர்த்துச் சாப்பிடலாம். ஐந்தாம் நாளில் தக்காளி அவசியம் இருக்க வேண்டும். மேலும், வேகவைத்த சிக்கன் அல்லது மீல் மேக்கருடன் காட்டேஜ் சீஸையும் சேர்த்துக்கொள்ளலாம். இந்த நாளில் ஒரு பவுல் சூப்பும் எடுத்துக்கொள்ளலாம். தண்ணீர் 10 -12 கிளாஸ் அருந்த வேண்டும்.

ஆறாம் நாள்

ஐந்தாம் நாள் பின்பற்றியதைப்போல முளைகட்டிய பயறு அல்லது பிரவுன் அரிசி சாதத்துடன் தயிர் சாப்பிடலாம். மேலும், சிக்கன் அல்லது மீல் மேக்கருடன் காட்டேஜ் சீஸ் ஆகியவற்றைச் சாப்பிடலாம். இதனோடு இதர காய்கறிகளையும் சாப்பிடலாம். ஆனால், தக்காளியைச் சேர்க்கக் கூடாது. சூப் குடிக்கலாம். தண்ணீர் 10-12 கிளாஸ் அருந்த வேண்டும்.

ஏழாம் நாள்

ஏழாவது நாளை விருந்து என்றுதான் சொல்ல வேண்டும்.வெள்ளை அரிசி அல்லது பிரவுன் அரிசி சாதத்துடன் காய்கறிகள், கீரைகள், பழங்கள் என எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். முடிந்தவரை சாதத்தைக் குறைத்துக்கொண்டு காய்கறிகள், பழங்களை உண்பது மிகவும் நல்லது. தண்ணீர் 10 -12 கிளாஸ் அருந்த வேண்டும். விரும்பினால் ஜூஸ் பருகலாம்.

டயட் அலெர்ட்!

 ஏழாம் நாளைத் தவிர, மற்ற நாட்களில் ஜூஸ், டீ, காபி குடிக்கக் கூடாது. பிளாக் டீ, பிளாக் காபி மற்றும் சர்க்கரை சேர்க்காத எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம். ஒவ்வொரு நாளும் தவறாமல் 45 நிமிடங்கள் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். களைப்பாக இருந்தால் போதிய ஓய்வு எடுத்துவிட்டு உடற்பயிற்சியைத் தொடர வேண்டும். ஜி.எம் டயட்டில் உடற்பயிற்சியும் ஒரு அங்கம். எனவே, தினமும் குறைந்தது 10,000 அடி அல்லது 3 கி.மீ தூரம் நடப்பது. அரை மணி நேரம் நீந்துவது, சைக்கிளிங் போவது போன்ற கார்டியோ பயிற்சிகளைச் செய்யலாம்.
ஏழு நாளும் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும்.

உங்களின் மருத்துவர் அல்லது டயட்டீஷியனிடம் தொடர்ந்து அறிவுரை பெற வேண்டும். அளவுக்கு அதிகமான சோர்வு, படபடப்பு, மயக்கம் இருந்தால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். சர்க்கரை நோயாளிகள், முதியவர்கள் இந்த டயட்டை முயற்சிக்க வேண்டாம்.

ஜி.எம் டயட் சந்தேகங்கள்!

ஜி.எம் டயட் இருப்பதால் உடலில் உள்ள நீர் மட்டும்தான் இழக்கப்படுமா? நீர் உடம்பு உள்ளவர்களுக்க்குத்தான் இந்த டயட் பொருந்துமா?
அப்படி இல்லை. உடலில் உபரியாக உள்ள நீர் முழுமையாக வெளியேறும் என்பது உண்மைதான். ஆனால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பும் கரையவே செய்யும். உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும்.

ஜி.எம் டயட்டை தொடர்ந்து பின்பற்றலாமா? என்ன கால இடைவெளியில் இதைப் பின்பற்றுவது?’

“இது கடுமையான டயட் என்பதால் தொடர்ந்து பின்பற்றக் கூடாது. ஜி.எம் டயட் என்பது ஆரோக்கியமான உணவுப் பழக்கம் நோக்கி நம்மைத் திருப்புவது என்பதால், முதல் ஏழு நாட்கள் இந்த டயட்டை பின்பற்றிய பிறகு குறைந்தபட்சம் மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு விடுப்பு கொடுப்பது நல்லது. ஆனால், இந்த டயட் விடுப்புக் காலங்களில் வைட்டமின்கள், தாதுஉப்புக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுவது அவசியம். அதிக எடை உள்ளவர்கள், மருத்துவரின் ஆலோசனையோடு ஓரிரு வார இடைவெளிக்குப் பிறகுகூட மீண்டும் இந்த டயட்டில் இறங்கலாம். கவனம் மருத்துவ ஆலோசனை அவசியம்.

எத்தனை முறை இந்த டயட்டைப் பின்பற்றலாம்?

அப்படி கணக்குகள் ஏதும் இல்லை. மேலே குறிப்பிட்டுள்ளபடி குறித்த கால இடைவெளிவிட்டு இந்த டயட்டை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம். ஆனால், அது அவரவர் உடல்வாகைப் பொறுத்த விஷயம் என்பதால், மருத்துவர் ஆலோசனை அவசியம்.

ஜி.எம் டயட்டில் தேவையான அளவு எடையைக் குறைத்த பின் என்ன சாப்பிடலாம்?

நல்ல கொழுப்பு, கார்போஹைட்ரேட், வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், நார்ச்சத்து, நுண்ணூட்டச்சத்துக்கள் ஆகிய அனைத்து சத்துக்களும் அடங்கிய ஆரோக்கியமான சமச்சீரான உணவுகளைச் சாப்பிடலாம். உடற்பயிற்சி செய்ய மறக்காதீர்கள். ஒரு நாளுக்கு சராசரியாக 2000 கலோரி தேவை. அதற்கு அதிகமாக சேர்த்த கலோரிகளை அன்றன்றே எரித்துவிட வேண்டியது அவசியம்.

ஜி.எம் டயட்டை யார் பின்பற்றக் கூடாது?

“சர்க்கரை நோயாளிகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், முதியவர்கள், நீண்டகால உடல்நலப் பிரச்னை உடையவர்கள் இந்த டயட்டைத் தவிர்க்கவும்.
இந்த டயட் இருக்கும்போது, அதிகாலையில் வெந்நீரில், எலுமிசசைச் சாறு, தேன் கலந்து குடிக்கலாமா?

எலுமிச்சைச் சாற்றை வெறும் வயிற்றில் குடிப்பதால் செரிமானம் மேம்படும் என்பதால் செய்யலாம். ஆனால், எலுமிச்சை உடலில் அமிலத்தைச் சேர்ப்பதால் அதைப் பருகிய அரை மணி நேரம் கழித்தே காலை உணவை உண்ண வேண்டும்.இல்லாவிடில், செரிமானப் பிரச்னை ஏற்படக்கூடும். தேன் உலகின் சிறந்த இனிப்புப் பொருள் என்றாலும் தேனின் கலோரி அதிகம். எனவே, ஜி.எம் டயட் காலங்களில் தேனைத் தவிர்ப்பது நல்லது.’காய்கறிகள் மற்றும் அசைவங்களைச் சமைக்க எண்ணெய் பயன்படுத்தலாமா?

கூடாது. ஜி.எம் டயட்டில் காய்கறிகளைப் பொரிக்கவோ, தாளிக்கவோ கூடாது. அசைவங்களை வேகவைத்துச் சாப்பிடலாம்.

உலர் பழங்கள், நட்ஸ் சாப்பிடலாமா?

உலர் பழங்கள், நட்ஸில் கொழுப்புச்சத்து அதிகம் உள்ளன. எனவே அவை உடலுக்கு உடனடி எனர்ஜி கொடுத்தாலும் ஜி.எம் டயட்டின்போது தவிர்க்க வேண்டியது அவசியம். ஆனால், ஜி.எம் டயட் பின்பற்றாத நாட்களில் இவற்றை எடுத்துக்கொள்வதில் தவறு இல்லை.

சப்பாத்தி, ரொட்டி, புல்கா, கோதுமை பிரெட், பருப்புகள் சாப்பிடலாமா?

இவற்றில் குளூட்டன் (Gluten) என்ற வேதிப்பொருள் உள்ளது. இது, எடையை அதிகரிக்கச் செய்யும். எனவே, இவற்றை ஜி.எம் டயட் நாட்களில் தவிர்ப்பது நல்லது.

Tags :
× RELATED பலாப்பழத்தின் பயன்கள்!