கவுன்சலிங் ரூம்

நன்றி குங்குமம் டாக்டர்

மருத்துவப் பேராசிரியர் முத்தையா

‘எனது காலில் சேற்றுப்புண் அதிகமாக உள்ளது. கால்களில் சிறிய வெடிப்புகளும் உள்ளன. இதற்கு என்ன காரணம். தீர்வு என்ன?’  

- விநோதினி, ஊரப்பாக்கம்.

‘காலில் சேற்றுப்புண் வருவதற்கு ஒருவர் அதிக நேரம் தண்ணீரில் இருப்பதுவே முக்கியமான காரணம். மழைக் காலங்களில் பல பேருக்கு இந்த சேற்றுப்புண் பிரச்சனை இருக்கும். பாதங்களை அதிக நேரம் தண்ணீரில் வைத்திருந்தால் சேற்றுப்புண் வரும். எனவே, நீங்கள் அதிக நேரம் தண்ணீரில் இருந்தபடி வேலை செய்பவராக இருந்தால் அதனை மாற்றி அமையுங்கள். தொடர்ச்சியாக ஒரு மணி நேரத்துக்கு மேல் கால்களை நீரில் ஊறவைத்தபடியே வேலை செய்வதைத் தவிர்க்கலாம்.

கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துவிட்டு அல்லது வேறு வேலைகள் செய்துவிட்டு அந்தப் பணியை மேற்கொள்ளலாம். ஓய்வு நேரத்தில் மென்மையான பருத்தித் துணியால் பாத விரல்களின் இண்டு இடுக்குகள் உட்பட மொத்த பாதத்தையும் சுத்தமாகத் துடைத்துவிடுங்கள். சேற்றுப் புண் வராமல் இருப்பதற்காக அதற்கான களிம்புகளை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் வாங்கி வந்து கால்களுக்குப் போடுங்கள்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் காலில் சேற்றுப்புண் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர்களுக்கு சேற்றுப்புண் உருவாக வாய்ப்புகள் அதிகம். எனவே, சர்க்கரை நோய் உள்ளவர்கள் தண்ணீரில் அதிக நேரம் வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும். சேற்றுப்புண் போலவே பாத வெடிப்பும் முக்கியப் பிரச்சனைதான். காலில் எண்ணெய்ப் பசை இல்லையென்றால் குதிகாலில் வெடிப்பு ஏற்படும். உடலின் எடை அதிகமாக இருந்தாலும் காலில் வெடிப்பு ஏற்படும். வெடிப்புகளில் சுத்தம் செய்யும் பிரஷ் வைத்து சுத்தம் செய்யலாம். வெதுவெதுப்பான தண்ணீரில் காலை வைத்து பிரஷ்ஷால் சுத்தம் செய்து, அதற்கான களிம்பைப் பூசலாம்.

குதிகால் வெடிப்பு உள்ளவர்களும் சேற்றுப்புண் உள்ளவர்களும் அதிக நேரம் தண்ணீரில் இருக்கக் கூடாது. கைகளால் துணிகளைத் துவைப்பதைத் தவிர்த்து வாஷிங் மிஷின் வாங்கிக்கொள்ளலாம். சில சமயங்களில் சோப்புகளில் இருக்கும் வேதிப் பொருட்களால் சேற்றுப்புண்ணோ பாதவெடிப்போ ஆற தாமதமாகும்.  காலில் சீழ் பிடிக்காமல் இருக்க காயமுள்ள இடத்தில் மஞ்சள் வைக்கலாம்.  மருத்துவரிடம் சென்று இதற்கான சிகிச்சை எடுக்கத் தயங்கக்கூடாது.’

‘எனக்கு முப்பது வயதாகிறது. சில மாதங்களாக உடலில் ஆங்காங்கே மரு தோன்றியுள்ளது. கை,கால்,தலையில் என மரு இருக்கிறது. மரு ஏற்படுவதற்கான காரணம் என்ன? ஏதும் நோயின் அறிகுறியாக இருக்குமோ என சந்தேகம் உள்ளது. இதற்கு ஒரு தீர்வு கூறுங்கள்?’

- சி.ஆர்.கெளதமன், சேலம்.

‘மருவை உன்னி மரு, பால் மரு பரம்பரை மரு என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். உன்னி மருவும், பால் மருவும் வைரஸ் கிருமிகளால் வர கூடியவை. உடலில் கை கால் மற்றும் தலை போன்ற இடங்களில் ஒன்றிரண்டு இடங்களில் முதலில் வரும். பிறகு, எல்லா இடங்களிலும் பரவும். இந்த மருக்கள் உடலில் எல்லா இடங்களிலும் பரவக்கூடிய தன்மை உடையவை. இந்த உன்னி மருவும் பால் மருவும் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்குப் பரவக்கூடிய தன்மை உடையவை. உன்னி மரு தண்ணீரில் பரவக் கூடிய தன்மை உடையது. ஒன்று அல்லது இரண்டு மரு கை கால்களில் இருந்தால், தோல் மருத்துவரிடம் சென்று, இந்த மருவுக்கு சரியான களிம்பை வாங்கி மரு உள்ள இடத்தில் இரவு நேரத்தில் மருவில் போட்டுக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் மரு சுருங்கிவிடும்.  முகத்தில் மரு இருந்தால், அதற்கு களிம்பு போடக் கூடாது. லேசர் சிகிச்சை மூலம் மருவை அகற்றிக்கொள்ளலாம்.

பரம்பரை மரு (டி.பி.என்) ஒருவருடைய பொற்றோரிடமிருந்து பெறக்கூடியது. இந்தப் பரம்பரை மருவால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. உங்களுக்கு முப்பது வயது என்பதால் இந்த வயதில் இந்த மூன்று வகை மருவுமே உடலில் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அவற்றில் எது என்று தோல் மருத்துவரிடம் சென்று தெரிந்துகொண்டு சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.

நிறைய மரு இருந்தால், அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்போது உன்னி மருவும், பால் மருவும் உடலில் வேகமாகப் பரவும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதற்கு சர்க்கரை நோய், சிறுநீரகம் சம்பந்த பட்ட நோய்கள், பால்வினை நோய்கள்  போன்ற சில காரணங்கள் உள்ளன. உடலில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் மரு இருக்கும்போதே, சிகிச்சை மூலம் அகற்றிவிட வேண்டும். இல்லையென்றால் உடலில் எல்லா இடங்களிலும் பரவும். எனவே, தோல் மருத்துவரிடம் சென்று, இதற்கு சரியான சிகிச்சை முறையை எடுத்துக்கொள்வது நலம்.’

‘என் தந்தைக்கு கல்லீரல் வீக்கம் பிரச்சனை இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். கல்லீரல் வீங்குமா? எதனால் இது ஏற்படுகிறது? இதற்கு தீர்வு என்ன?’

- செ.கு.மோகனப்ரியா, இனாம் மணியாச்சி.

‘கல்லீரல் வீக்கத்தை ஃபேட்டி லிவர் (Fatty Liver) என்பார்கள். மோசமான வாழ்வியல் பழக்கவழக்கங்களால்தான் பெரும்பாலும் கல்லீரல் வீக்கம் ஒருவருக்கு உருவாகிறது. குறிப்பாக, மதுப் பழக்கம், புகைபிடித்தல் இரண்டும் இதன் மோசமான காரணிகள். உடல் எடை அளவுக்கு அதிமாக இருப்பவர்களுக்கு கல்லீரலில் கொழுப்பு சேர்வதன் மூலமும் இந்த கல்லீரல் வீக்கம் பிரச்சனை உருவாகிறது.  இந்த ஃபேட்டி லிவர் பிரச்சனை இருபத்தைந்து முதல் நாற்பது வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அதிகமாக வருகிறது.

இந்தப் பிரச்சனையால் உயர் ரத்த அழுத்தம், உடல் வலி எனப் பல இதர அபாயங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. பெண்களுக்கு பெரும்பாலும் உடல்பருமன் அதிகரிப்பதால் இது ஏற்படுகிறது. இந்த ஃபேட்டி லிவர் பிரச்சனையை ஆரம்பத்திலேயே கவனித்து மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்றால் மருந்து மாத்திரைகளாலேயே குணப்படுத்திவிடலாம். அதைக் கடந்துவிட்டால் சிலருக்கு அறுவைசிகிச்சை செய்ய வேண்டியது இருக்கும்.

மது, புகையிலை போன்ற கெட்ட பழக்கங்களை அறவே கைவிட வேண்டும். உடல் பருமனை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்கள், தினசரி உடற்பயிற்சி, நல்ல ஓய்வு இந்த மூன்றுமே சரியான எடைப் பராமரிப்புக்கான வழிமுறைகள். ஃபேட்டி லிவர் பிரச்சனை இருப்பவர்கள். ஃபாஸ்டு ஃபுட், ஃப்ரைடு ரைஸ், எண்ணெயில் வேகவைத்த பலகாரங்கள் போன்றவற்றைத் தொடவே கூடாது. காய்கறிகளைப் பச்சையாக சாப்பிடுவது நல்லது. அன்றாட உணவுகளில் எண்ணெயை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். அசைவத்தையும் அளவாகச் சாப்பிட வேண்டும். உடற்பயிற்சியும் வியர்வை நன்றாகச் சுரக்குமளவுக்கான வேலையும் இதனை ஓரளவு கட்டுப்படுத்தும்.  

வீட்டிலேயே இருக்கும் பெண்கள் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதேபோல், அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள் உடல் உழைப்பு குறைந்தவர்களுக்கும் உடற்பயிற்சி அவசியம். இல்லாவிடில் கல்லீரலில் கொழுப்பு சேர்வதைத் தடுக்க இயலாது.’  

Related Stories: