ABC ஜூஸ்... ஏராளமான பலன்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

வெயிலுக்கு இதமாய் சில்லென ஜூஸ் குடிப்பது உடலுக்குக் குளிர்ச்சி. அதிலும் சத்து நிறைந்த ஜூஸாக அது இருந்தால் ஆரோக்கியமும் நம் வசமாகும். அப்படி ஒரு அதிரிபுதிரி ஜூஸ்தான் ஏபிசி ஜூஸ். அதாவது, ஆப்பிள், பீட்ரூட், கேரட் மூன்றும் கலந்தது இது. செய்வதற்கு எளிமையான இந்த ஜூஸ் பலன்களை அள்ளித் தரும் அமுத சுரபி. மிட் மார்னிங் நேரம் எனப்படும் காலை உணவுக்குப் பிறகு மதிய உணவுக்கு முன் இடைப்பட்ட நேரத்தில் தேநீரும் நொறுக்ஸும் சாப்பிடும் நேரத்தில் அவற்றுக்குப் பதிலாக இதனை

எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.

தேவையான பொருட்கள்

ஆப்பிள் - 1

பீட்ரூட் - 1(சிறியது)

கேரட் - 2(மீடியம் சைஸ்)

செய்முறை:

ஆப்பிள், கேரட், பீட்ரூட்டை நன்றாகக் கழுவிய பின், மேல் தோலை நீக்கிவிடவும். பிறகு, இவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனை மிக்ஸியில் போட்டு நன்றாக ஜூஸாகும்படி அடிக்க வேண்டும். இதனை அப்படியே ஒரு டம்ளரில் ஊற்றிப் பருகலாம். இதனோடு எலுமிச்சைச் சாறு, புதினா போன்றவற்றைக் கலந்தும் சாப்பிடலாம். ருசி வேண்டும் என நினைப்பவர்கள் எலுமிச்சையைத் தவிர்க்கலாம்.

 

பலன்கள்:

ஆப்பிளில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்திக்கு மிகவும் நல்லது. எலுமிச்சை சேர்த்தால் அதிலிருக்கும் சிட்ரிக்கும் வைட்டமின் சியும் இதனோடு கிடைக்கும். கேரட்டிலும் பீட்ரூட்டிலும் உள்ள கரோட்டினாய்டுகள் கண் பார்வைத் திறன் மேம்பட உதவும். மேலும், ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களையும் மேம்படுத்தும். இவ்விரண்டிலும் உள்ள அந்தோசயனானின் உடலின் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துகிறது. சருமத்தை பாதுக்காக்கிறது. இதன் ஆண்டிஆக்ஸிடண்ட்கள் சருமம் வயதாவதிலிருந்து காக்கிறது. மணமாகப் போகும் இளம் பெண்கள் இதனைப் பருகினால் சருமம் பளிச்சென மிளிரும்.

உடலுக்கு மிக முக்கியமான வைட்டமின்களான ஏ, பி1, பி2, பி3, பி6,பி9, சி, இ மற்றும் கே இந்த ஜூஸில் நிறைந்துள்ளன. இரும்புச்சத்து, துத்தநாகம், மக்னீஷியம், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், செலினியம் போன்ற பல தாது உப்புகளும் நிறைந்துள்ளன.  நுரையீரல் புற்றுநோய் உள்ளவர்களுக்கு தினமும் பருகப் பரிந்துரைக்கப்படுகிறது.  செரிமானப் பிரச்னை உள்ளவர்கள், வயிற்றில் புண், அல்சர் போன்ற பிரச்னைகள் இருப்பவர்களுக்கு இந்த ஜூஸ் அருமருந்து. அலர்ஜி பிரச்னைகள் உள்ளவர்கள், வாயுக் கோளாறு உள்ளவர்கள் இதனை உணவில் ஒரு பகுதியாகச் சேர்த்து வரலாம்.

Related Stories: