பித்தப்பை பிரச்னைக்கு தீர்வு என்ன?

நன்றி குங்குமம் டாக்டர்

இதயம், கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகளுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தில் சிறிதளவுகூட பித்தப்பைக்கு நாம் தருவதில்லை. ஆனால், இது செய்யும் வேலை எளிதானது அல்ல. நாம் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புமே முக்கியம் என்றாலும் பித்தப்பை எந்த ஒரு முக்கிய உறுப்புக்கும் இணையான மகத்தான பணியைச் செய்கிறது என்றால் அது மிகையில்லை.

உண்மையில் சாதாரண ஒரு வாயுப் பிடிப்பால் இதயப் பகுதியில் மிக மெலிதான வலி இருந்தால்கூட பதறிப்போகும் நாம், பித்தப்பை முழுதுமாக பாதிக்கப்பட்டு சிக்கலாகும் வரை அப்படி ஒரு உறுப்பே நம் உடலில் இருக்கிறது என்கிற பிரக்ஞை இல்லாதவர்களாக இருக்கிறோம்.இந்த உதாசீனம் சில சமயங்களில் ஆபத்தாய் முடிந்துவிடுகிறது. பித்தப்பையும் பித்தப்பை கற்களும் சாதாரண பிரச்னைகள் இல்லை. ஒருவரின்  உயிரையே பறிக்கும் அளவுக்குத் தீவிரமான நோய் இது.

பித்தப்பையானது நம் வயிற்றின் வலது மேற்பகுதியில் அமைந்துள்ளது. கல்லீரல் உற்பத்தி செய்யும் பித்தநீரைச் சேமிப்பதே இதன் பிரதான பணி. நாம் உணவு உண்ணும்போது இந்த பித்தநீரை பித்த நாளம் வழியே சிறு குடலுக்கு அனுப்புவதே பித்தப்பையின் முக்கியப் பணியாகும்.

முக்கியத்துவம் என்ன?

நமது உணவில் கலந்துள்ள கொழுப்பை உடைத்து ஜீரணிக்க பித்தநீர் உதவுகிறது. உணவில் கொழுப்புச்சத்து இருப்பின், பித்தநீரை சிறுகுடலுக்குள் செலுத்தி ஓரளவு ஜீரணமான உணவுடன் கலந்து கொழுப்பை உடைக்கிறது. சிறுகுடல் இப்பணியைச் செய்து கொண்டிருக்கும்போது, சுரக்கப்பட்ட பித்தநீர் மீண்டும் பித்தநீர்ப்பைக்குள் சென்று தேவைப்படும் வரை சேமிப்பிலிருக்கும்.  

பித்தப்பையால் பிரச்னை என்ன?

கல்லீரலிலிருந்து பித்தப்பைக்கும் பின்னர் அங்கிருந்து சிறுகுடலுக்கும் பித்தத்தை எடுத்துச் செல்லும் குழாயான பித்தநாளத்தில் ஏற்படும் அடைப்பு சிக்கலான பிரச்னையாக உருவாகிறது. பித்தம், கொழுப்பு மற்றும் பாஸ்பரஸ் கொழுப்புகளின் செறிவில் ஏற்படும் மாற்றம் காரணமாக கல்லாக உருவாகி அடைப்பை ஏற்படுத்துகிறது. சில தருணங்களில் கற்கள் இன்றியும், சிறுகுடல் தொடங்கி பித்தப்பை வரையிலும் வலி அதிகரித்துக் கடுமையான பித்தப்பை அழற்சிக்கு வழிவகுக்கலாம்.  

அறிகுறிகள்

பித்தப்பை பிரச்னையின் முக்கிய நோய்க்குறி வயிற்றுவலிதான். பித்தம் கடினமாகிப் பித்தக் கற்களாக உருமாறிப் பாதையை அடைப்பதால், விலா எலும்புகளுக்கு கீழே மிதமான மற்றும் கடுமையான வலி ஏற்படும்.  ஆரம்பத்தில் 30 நிமிடம் தொடங்கி பல மணி நேரம் நீடிக்கும் இந்த வலி பின்னர் தொடர் வலியாக மோசமடையும்.

இத்துடன் பசியின்மை, களைப்பு, எடை குறைதல், கண்களும், சருமமும் மஞ்சள் நிறமாதல் (மஞ்சள் காமாலை) மற்றும் கருநிறச் சிறுநீர், தட்பவெப்ப ஏற்ற இறக்கம், அரிப்பு, இரவு நேரத்தில் வியர்த்தல், வெளிர்நிற மலம், வயிற்றின் வலது மேற்பக்கம் அவ்வப்போது ஏற்படும் வலி போன்ற அறிகுறிகளையும் உணரலாம்.

சிகிச்சைகள்

பித்தப்பைக் கற்களை அகற்ற அறுவை சிகிச்சைக்கு மாற்றாக மருந்துகள் பரிந்துரைக்கப்படும். 5மிமீ அளவுக்கும் மேலாக கற்கள் இருந்தால் நோயைக் கண்டறிய மருத்துவர் இஆர்சிபி சிகிச்சை முறையைப் பரிந்துரைப்பார்.  பித்தக் கற்கள் காரணமாக பித்தநீர் நாளத்தில் அடைப்பு இருப்பின், சிகிச்சையை உடனடியாகத் தொடங்குவார். பித்தப்பை அறுவை சிகிச்சை மூலம் பித்தப்பை முழுமையாக அகற்றப்படும். பித்தக் கற்கள் காரணமாகக் கடுமையான வலி ஏற்பட்டால் அறுவை சிகிச்சையே கடைசி தீர்வாகும்.  

லேபரோஸ்கோபிக் என்னும் வயிற்றறை நுண்ணோக்கி அறுவை சிகிச்சையில் சிறு துளையிட்டுப் பித்தக் கற்கள் அகற்றப்படும். பித்தப்பை நோய் தீவிரமானால் திறந்தநிலை அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்படும்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறை அவசியம்!

‘வருமுன் காப்போம்’ என்னும் பழமொழிக்கேற்ப நோய்க்கான சிகிச்சையை விடவும், நோய்த் தடுப்பே சிறந்தது. தினசரி சமச்சீரான உணவை உண்ணுதல், சரியான பிஎம்ஐ பராமரித்தல், முறையான உடற்பயிற்சி மேற்கொள்ளல், மதுபானம் தவிர்த்தல், சர்க்கரை மற்றும் கொழுப்பு அளவுகளைக் கட்டுக்குள் வைத்தல் போன்ற வாழ்க்கை முறைகளும் முக்கியம். கொழுப்புச் சத்து மிக்க உணவுகளான பால், முட்டை, மீன், அசைவ உணவுகளை தொடர்ச்சியாக உண்பவர்கள் அதே அளவுக்கு நடைப்பயிற்சியும் மேற்கொள்ள வேண்டியது அவசியம். மேலும், இப்படி தொடர்ந்து அசைவங்களாகச் சாப்பிட்டுவிட்டு திடீரென நிறுத்தினால் சமயங்களில் பித்தப்பையில் சுரக்கும் நீர் சேகரமாகி பித்தப்பை கற்களாக உருவெடுக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, சமச்சீரான உணவு, சமச்சீரான உடற்பயிற்சி இரண்டும் மிக முக்கியம்.

தொகுப்பு - எஸ்.கே.ஞானதேசிகன்

Related Stories: