எடைக் குறைப்புக்கான அறுவை சிகிச்சைகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

இன்றைய சமூகத்தில் ஒபிஸிட்டி எனும் அதீத எடை ஒரு மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதற்கு ஹார்மோன் கோளாறுகள், வாழ்வியல் முறை, பரம்பரை உடல்வாகு எனப் பல்வேறு காரணங்கள் உள்ளன.

உடல் பருமன் என்பது ஆயுட்காலத்தைக் குறைக்கக்கூடியது. அத்துடன் உடல் செயல்பாடுகளைச் சீர்குலைத்து, தீவிர உடல்நலப் பிரச்சினைகளுக்கும் அது வழிவகுக்கும்.  சர்க்கரை நோய், இதய நோய்கள், பித்தப்பைக் கற்கள், பக்கவாதம் போன்ற வாழ்க்கைமுறை சார்ந்த நோய்கள் அதீத உடல் பருமனால் ஏற்படும் நோய்களாகக் கருதப்படுகின்றன.

இன்று உடல் எடைக் குறைப்புக்கு டயட், உடற்பயிற்சி எனப் பலவிதமான வாழ்வியல் முறைகள் பரிந்துரைக்கப்பட்டாலும் இது எதுவுமே உதவ இயலாத அளவுக்கு உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு அறுவைசிகிச்சை மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பையும் ஊளைச்சதையையும் நீக்கப் பரிந்துரைக்கப்படுகிறது.

பாடி மாஸ் இன்டெக்ஸை (பி.எம்.ஐ.) 40 அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் கொண்டிருப்பவர்கள் நோயுற்ற உடல் பருமன் நோயாளிகள் என வரையறுக்கப்படுகிறார்கள். போதுமான பரிசோதனைக்களுக்குப் பிறகு இவர்களுக்கே அறுவைசிகிச்சை மூலம் உடல் எடைக் குறைப்பு பரிந்துரைக்கப்படுகிறது.இதில் லேப்ராஸ்கோபிக் ஸ்லீவ் காஸ்ட்ரெக்டோமி மற்றும் எண்டோஸ்கோப்பிக் ஸ்லீவ் கேஸ்ட்ரோபிளாஸ்டி என இருவகை சிகிச்சைகள் நடைமுறையில் உள்ளன.

லேப்ராஸ்கோபிக் ஸ்லீவ் காஸ்ட்ரெக்டோமி (எல்எஸ்ஜி)

லேப்ராஸ்கோபிக் ஸ்லீவ் காஸ்ட்ரெக்டோமி (எல்எஸ்ஜி) நடைமுறையில் வயிற்றின் ஒரு பகுதி அறுவைசிகிச்சை மூலம் அகற்றப்படுகிறது.இதனால் வயிறு அதன் அசல் அளவிலிருந்து 15% அளவுக்கு சுருக்கப்படுகிறது. வயிற்றின் அளவைக் குறைப்பதன் மூலம், இரைப்பையில் அதிக உணவை வைத்திருக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதன் விளைவாக உணவு உட்கொள்ளும் அளவு குறைகிறது.

எல்எஸ்ஜி நடைமுறைகள்

நோயாளியின் தற்போதைய நிலைமை, மருத்துவர் / மருத்துவமனை பின்பற்றும் நடைமுறைகள் போன்றவற்றைப் பொறுத்து இந்த அறுவைசிகிச்சை நடைமுறை அமையும். சில எல்எஸ்ஜி அறுவைசிகிச்சைகள் லேப்ராஸ்கோபி முறையில் செய்யப்படுகின்றன. இதில் அடிவயிறு பகுதியில் சிறிய கீறல்கள் மூலம் சிறிய கருவிகளை உட்செலுத்துவதும் அடங்கும். லேப்ராஸ்கோபிக் ஸ்லீவ் காஸ்ட்ரெக்டோமி அறுவைசிகிச்சை செய்ய, வயிற்றை செங்குத்தாக அடைத்து, வயிற்றின் பெரிய, வளைந்த பகுதியை அறுவைசிகிச்சை நிபுணர் அகற்றிய பிறகு, வயிறு ஒரு குறுகிய பகுதியாக மாறிவிடும். அறுவைசிகிச்சைக்குப் பிறகு, நோயாளியின் நிலையை 1-2 மணி நேரம் மருத்துவர் கண்காணிப்பார்.

எல்.எஸ்.ஜி எவ்வாறு பலனளிக்கிறது?

LSG அறுவைசிகிச்சைக்குப் பிறகு முதல் இரண்டு ஆண்டுகளில், பெரும்பாலான நோயாளிகள் தங்கள் உடல் எடையில் 40% முதல் 50% வரை இழந்துவிடுகின்றனர். சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், தூக்கத்தில் மூச்சுத்திணறல் அல்லது அதிகக் கொழுப்பு போன்ற உடல் பருமன் தொடர்பான பிரச்சினைகள் இருந்தால், இந்த நிலைமைகள் மேம்படுவதற்கு 75% வாய்ப்புகள் உள்ளன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எண்டோஸ்கோபிக் ஸ்லீவ் காஸ்ட்ரோபிளாஸ்டி (இஎஸ்ஜி)

இந்த தொழிநுட்பத்தின் வளர்ச்சியடைந்த ஒரு சிகிச்சை முறையே எண்டோஸ்கோபிக் ஸ்லீவ் காஸ்ட்ரோபிளாஸ்டி எனப்படும் இஎஸ்ஜி. பிஎம்ஐ அளவு நாற்பதைக் கடந்தவர்களுக்கு இரைப்பை பைபாஸ் அறுவைசிகிச்சை செய்வதற்கு வாய்ப்பு இருந்தாலும், அதனால் ஏற்படும் சிக்கல்களும் சிகிச்சையிலிருந்து மீள்வதற்கு ஆகும் நேரமும் கவலை ஏற்படுத்துவதாக இருக்கலாம்.

இவர்கள் எண்டோஸ்கோபிக் ஸ்லீவ் காஸ்ட்ரோபிளாஸ்டி (ESG) செய்வதன் மூலம் நல்ல பலன் பெறலாம்.  இது உடலுக்குள் குறைவான அளவே ஊடுருவக்கூடியது. அத்துடன் சாதகமான வகையில் எடைக்குறைப்பு சார்ந்த பலன்களை வழங்குகிறது. உடலைக் கிழிக்க வேண்டிய தேவை இல்லாதது. எல்எஸ்ஜியுடன் ஒப்பிடும்போது வேகமாக குணமடைதல்,  குறைந்த அமில எதிர்க்களிப்பு விகிதம் போன்றவற்றால் இஎஸ்ஜி சிகிச்சை  முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

எல்எஸ்ஜி மற்றும் இஎஸ்ஜி எடை இழப்பு அறுவைசிகிச்சைகளில் நன்மையும் உள்ளன. பக்கவிளைவுகளும் உள்ளன. அனைத்தையும் மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து நன்கு  தெரிந்துகொண்டு நோயாளிகள் முடிவெடுக்க வேண்டும்.

அத்துடன் தகுதிவாய்ந்த ஒரு மருத்துவரின் மேற்பார்வையில் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியது அவசியம். நோயாளியின் உடல் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த முழுமையான உடல் பரிசோதனை அவசியம்.

அறுவைசிகிச்சை அல்லது எடை குறைப்பு சிகிச்சைக்குப் பிந்தைய மாற்றங்களுக்கு நோயாளி தயாராக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு ஊட்டச்சத்து சார்ந்தும், மனநலம் சார்ந்தும் முன்கூட்டியே ஆலோசனைகளைப் பெற வேண்டும்.

தொகுப்பு - ஜாய் சங்கீதா

Related Stories: