ஆர்கானிக் அறிவது எப்படி?

நன்றி குங்குமம் டாக்டர்

‘எங்க வீட்டுல எல்லாமே ஆர்கானிக்தான்‘ என்று சொல்வது இப்போதைய ட்ரெண்டாகிவிட்டது. காலையில் எழுந்ததும் பல் துலக்கும் பேஸ்ட்டில் இருந்து படுக்கப்போகும் போது ஏற்றும் கொசுவத்தி வரை சகலமும் ஆர்கானிக்கில் வந்துவிட்டது. வாடிக்கையாளர்களின் இந்த ஆர்கானிக் மோகத்தைப் புரிந்துகொண்ட நிறுவனங்கள் விதவிதமான ஆர்கானிக் பொருட்களை சந்தையில் இறக்கி கல்லா கட்டுகின்றன. ரேப்பரில் விதவிதமான வகையில் எழுதப்பட்டிருக்கும் ஆர்கானிக் பொருட்களுக்கு என்ன அர்த்தம்?

எதுவெல்லாம் அசல் ஆர்கானிக்… வாங்க பார்க்கலாம்!

100% ஆர்கானிக்

இப்படி அச்சிடப்பட்டிருந்தால் இவை முழுமையான ஆர்கானிக் பொருட்கள். இவற்றில் இந்திய ஆர்கானிக் லோகோ, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் ஆர்கானிக் ஏஜென்சிகளின் லோகோக்கள் இடம்பெற்று இருக்கும். இவற்றை நம்பி வாங்கலாம்.

ஆர்கானிக்

இவற்றில், 95 சதவிகிதம் ஆர்கானிக் பொருட்களாக இருக்க வேண்டும். எஞ்சி உள்ள 5 சதவிகிதத்தில்  (உப்பையும் நீரையும் தவிர) குளோரின் (பாக்கிங் பொருட்கள் சுத்தம் செய்யப்பட்டிருப்பதால்), நிறமூட்டிகள் போன்ற  ஆர்கானிக் அல்லாத பிராஸசிங் எய்டுகள் இருக்கலாம். ஆனால், அவை அங்கீகரிக்கப்பட்ட பொருட்களாக இருக்க வேண்டும். இதற்கென சர்வதேச தரச் சான்று நிறுவனங்கள் இருக்கின்றன. அவர்கள் இதனை அங்கீகரித்து இருக்க வேண்டும்.

மேட் வித் ஆர்கானிக்

இவற்றில் 70 சதவிகிதம் ஆர்கானிக் பொருட்களால் ஆனவையாக இருக்க வேண்டும். உதாரணமாக, ஊறுகாய் என்றால் அதில் உள்ள மாங்காய் இயற்கை முறையில் விளைந்ததாக இருக்க வேண்டும். ஆனால், இவற்றில் சில சுவையூட்டிகளும் உப்புகளும் செயற்கையானவையாக இருக்கக்கூடும் என்பதால் கவனம். இவை ஆர்கானிக்கால் தயாரானவையே தவிரவும் முழு ஆர்கானிக்காக இருக்க வேண்டியதில்லை.

ஆர்கானிக் இன்கிரிடெண்ட்ஸ்

இவற்றில் 70 சதவிகிதத்துக்கும் குறைவான ஆர்கானிக் பொருட்கள் இருக்கும். இவற்றை ஆர்கானிக் உணவு என்று சொல்ல முடியாது. ஆனால், இவற்றின் லேபிளில் ஆர்கானிக் பொருட்களால் ஆன இன்கிரிடெண்ட்ஸ் உள்ளதென குறிப்பிட்டுக்கொள்ளலாம். உதாரணம் ஜாம்கள், சாஸ்கள் மற்றும் சப்ளிமென்டுகள். இதுவும் ஆர்கானிக்கால் தயாராவையே தவிரவும் முழுமையான ஆர்கானிக் பண்புடையவை அல்ல.

நேச்சுரல்

இந்தியாவில் நேச்சுரல், ஹெர்பல் போன்றவைகளுக்கு எந்தவிதமான முறைசார்ந்த அங்கீகார சான்றிதழ்களும், கண்காணிப்புகளும் கிடையாது. இவற்றில் குறைந்த அளவு பிராசஸ்டு பொருட்கள் இருக்கக்கூடும் அல்லது இவைகள் போலியானவையாகவும் இருக்கக்கூடும். இன்று பலதரப்பட்ட உணவுப் பொருட்கள் முதல் அன்றாடப் பயன்பாட்டு பொருட்கள் வரை ஆர்கானிக் நேச்சுரல் போன்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை வரன்முறைப்படுத்த வேண்டியது அவசியம்.

ஃபேர் டிரேடு

என்.ஜி.ஓ-க்கள் மூலமாகச் சந்தைப்படுத்தப்படும் பொருட்கள். உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாகப் பெறப்பட்டு, சந்தைப்படுத்தப்படும் பொருட்கள் இவை. சில குறிப்பிட்ட ஊர்கள் சூழல்களில் மட்டும் இவற்றைக் காணலாம். உதாரணம், ஊட்டி டீத்தூள், காபிக்கொட்டை, காபி தூள்.

ஆர்கானிக் பை டிரஸ்ட்

சிறிய விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு சான்றிதழ் பெறுவது பெரிய அளவில் சந்தைப்படுத்துவது சாத்தியமில்லை. எனவே, அவர்கள் சந்தைப்படுத்தும் பொருட்கள் அல்லது அவர்களால் சில என்.ஜி.ஓ க்களுக்கு விற்பனை செய்யப்படும் பொருட்களில், ‘ஆர்கானிக் பை டிரஸ்ட்’ எனக் குறிப்பிட்டுக்கொள்வார்கள். இது ஒருவகை சுயசான்றிதழ் என்பதால் இவற்றின் தரத்தை நிர்ணயிப்பது கடினம். வாடிக்கையாளர்கள்தான் இவற்றின் நம்பகத்தன்மையை சோதித்து அறிந்துகொள்ள வேண்டும்.

கேஜ் ஃப்ரீ

இந்தியாவில் கேஜ் ஃப்ரீ, நியர் ஆர்கானிக் போன்ற பதங்கள் மாறி மாறி குறிப்பிடப்படுகின்றன. கூண்டில் அடைக்கப்படாமல், ஒரு பெரிய கட்டடத்தில் சுதந்திரமாக இருக்கவிடப்பட்ட பறவைகளின் இறைச்சிகளை கேஜ் ஃப்ரீ என்பார்கள். இதுவும் முறையான அங்கீகாரம் பெறப்பட்ட சான்று அல்ல.

கிராஸ் ஃபெட்

தானியங்கள், புற்கள், இலை தழைகள் போன்ற இயற்கை உணவுகள் தந்து வளர்க்கப்பட்ட கால்நடைகள் மற்றும் பறவைகளின் இறைச்சி மற்றும் அவற்றில் இருந்து பெறப்படும் பால் பொருட்களில்  கிராஸ் ஃபெட்  என குறிப்பிடப்பட்டிருக்கும்.

நோ ஏடட் ஹார்மோன்ஸ்

ஹார்மோன் ஊசிகள் போடப்படாத கால்நடைகளில் இருந்து பெறப்பட்ட பால்பொருட்கள் மற்றும் இறைச்சிகள் மேல் நோ ஏடட் ஹார்மோன்ஸ் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்தியாவில்  முறையாக இந்த சான்றிதழ் பெற்றுள்ள நிறுவனங்கள் உள்ளன.

தொகுப்பு - இளங்கோ

Related Stories: