மனம் எனும் மாயலோகம்! டிப்ரஸன் அரக்கன்!

நன்றி குங்குமம் டாக்டர்

இன்றைய நவீன வாழ்க்கைமுறையில், பெருந்தொற்றுக் காலத்திலிருந்து மீளும்  இந்நேரத்தில், மனநலம் சார்ந்து நாம் உரையாடுவது கட்டாயமாகிறது. மனம் சார்ந்த சிக்கல்கள் அதிகரித்துக்கொண்டிருக்கும் இன்றும், சமூகத்தில் பல மனத்தடைகள் இருக்கின்றன. உடலுக்கு ஏதாவது நோய் ஏற்படும்போது எவ்வித தயக்கங்களும் இல்லாமல் எப்படி ஒரு மருத்துவரை அணுகுகிறோமோ அவ்வாறே மனநலம் சார்ந்த குறைபாடுகளுக்கோ நோய்களுக்கோ நாம் அத்துறை ஆலோசகர்களை/ மருத்துவர்களை மனத்தடையின்றி நாட வேண்டும்.

ஏனெனில் மனம் என்பது உடலின் ஒரு கூறு. சொல்லப் போனால் உடல்நலமும் மனநலமும் நாணயத்தின் இருபக்கங்கள் போன்றவை, ஒன்றுடன் ஒன்று பிணைந்தவை. நம் வாழ்க்கைத் தரம் சிறப்பானதாக இருக்க வேண்டுமெனில் உடலும் மனமும் ஆரோக்கியமாக செயல்பட வேண்டும்.

மன அழுத்தம் (Depression)

சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டது. அதில், உலக அளவில் இந்தியாதான் மன அழுத்த நோயில்  முதல் இடத்தில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உலகின் ஜனத்தொகையில் சுமார் 3.8% மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அதாவது, உலகம் முழுதும், சுமார் இருபத்தெட்டு கோடி பேர் இந்த மனச் சிக்கலால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மன அழுத்தம் பலவகைப்படும். ஒவ்வொருவகைக்கும் ஏற்ப சிகிச்சை முறை மாறுபடும். அதன் தாக்கத்தைப் பொறுத்து அதற்கு ஆலோசனை மட்டும் போதுமா அல்லது மனநல மருத்துவரை நாடி மருந்துகளும் எடுத்துக்கொள்ள வேண்டுமா என்பதும் மாறுபடும்.ஏனெனில் 50% மக்களின் மன அழுத்தம் கண்டுபிடிக்கப்படாமலேயே இருக்கிறது. வருடக்கணக்காக சிகிச்சை அளிக்கப்படாத மன அழுத்தம் தற்கொலை வரை செலுத்தக்கூடும். 10 நபர்களில் ஒருவர் அவ்வாறு இறக்கிறார் என்பது மிகவும் வருத்தங்கூடிய செய்தி.

என்னென்ன காரணங்களால் மன அழுத்தம் ஏற்படக்கூடும்?

மன அழுத்தம் இன்ன காரணத்தால்தான் என்று முடிவாக கூற முடியாதவாறு பல்வேறு விஷயங்களால் உண்டாகிறது. சில நேரம் ஒன்றுக்கும் மேற்பட்ட காரணிகளும் பங்கு வகிக்கின்றன.

*ஆண்களை விட பெண்களுக்கு இருமடங்கு ஏற்படக் கூடிய சாத்தியங்கள் இருக்கிறது. பூப்படைதல், கருவுறுதல், மெனோபாஸ் போன்றவையால்  அவர்களுக்கு உண்டாகும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

*மரபியல் - வழி வழியாக வரும் குடும்ப ஜீன்கள் காரணமாகவும்  இருக்கக்கூடும்.

*சூழல் - சிறு வயதில் உடல் / மன துன்பங்களுக்கு (abuse) ஆளாக்கப்படுவது, பிற்காலத்தில் மன அழுத்தம் உருவாக காரணியாக இருக்கக் கூடும்.

நம் நாட்டில் இனம், மதம், ஜாதி போன்ற காரணிகளையும் இங்கு சேர்த்துக் கொள்ளலாம்.

*உடல் நோய்கள் -  சமயத்தில் உடல் சார்ந்த நோய்களாலும் மன அழுத்தம் தோன்றுகிறது. நீண்ட கால நோய்கள், தைராய்ட் குறைபாடு,சர்க்கரை வியாதி, கீல்வாதம், இதயநோய்கள், எய்ட்ஸ் போன்றவை மன அழுத்தம் உண்டாக்கும்.

*மருந்துகள் - உடல் நோய்கென எடுத்துக் கொள்ளும் சில மருந்துகளின் பக்க விளைவாக மன அழுத்தம் ஏற்படக்கூடும்.

*சர்ச்சைகள் - குடும்ப நபர்களுடன் அல்லது நண்பர்களுடன் உருவாகும் மோதல்களால், கருத்து வேறுபாடுகளால் மன அழுத்தம் உருவாகும்.

*முக்கிய மாற்றங்கள் - நேர்மறையான மாற்றம் என்றாலும் கூட திருமணம், வேலை மாற்றம், புதிய இடத்திற்கு மாறுதலாவது, போன்றவைகளால் மன அழுத்தம் எழும்.

விவாகரத்து, வேலை பறிபோவது, ஓய்வு பெறுதல், நெருங்கியவர்களின் மரணம் ஆகியவைகளாலும் மன அழுத்தம் ஏற்படும்.

*போதை பழக்கம் - மது உள்ளிட்ட பிற போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களில் ஏறத்தாழ 30 சதவீதத்தினர் மன அழுத்த நோய்க்கு ஆளாகி இருப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

அறிகுறிகள்

*மிகுந்த சோர்வு

*எதிர்மறை சிந்தனைகளுடன் வாழ்வில் நம்பிக்கையற்றத் தன்மை

*குற்றவுணர்ச்சியும் சுயமதிப்பின்மையும்

*நிராதரவான மனநிலை

*கவனச்சிதறல் , முடிவுகள் எடுப்பதில் குழப்பம்

*தாம்பத்தியத்தில் ஆர்வமின்மை

*முன்பு மகிழ்ச்சியுடன் செய்தவைகளில் இப்போது விருப்பம் இன்மை

*நிறைய சாப்பிடுவது அல்லது சாப்பிடாமல் இருப்பது

*தூக்கமின்மை/குறைவான தூக்கம் அல்லது நிறைய தூங்குவது

*வலிகள், நீண்ட கால தலைவலி அல்லது தசைப்பிடிப்பு

*சிகிச்சைக்கு பின்னும் தொடரும் வயிறு மற்றும் ஜீரணம் சம்பந்தமான பிரச்சனைகள்.

*அதீத கவலை, பதட்டம், வெறுமையான உணர்வு

*வெறித்தனம், எரிச்சல், அமைதியற்றத்தன்மை.

*தற்கொலை எண்ணங்கள்/ தற்கொலை முயற்சிகள்.

இதில் ஏழுக்கும் மேற்பட்ட அறிகுறிகள் தினமும் பெரும்பாலான நேரம், தொடர்ந்து இரு வாரங்களுக்கும் மேல் இருந்தால், உடனடியாக மனநலத்துறை நிபுணரை நாடுவது அவசியம். தொடர் சிகிச்சையில் நிச்சயம் மன அழுத்தத்தை நாம் வெற்றி கொள்ள முடியும்.

ஜான்ஸி ராணி மனநல ஆலோசகர்

Related Stories: