இளம் மணப்பெண்ணே நலமா?

நன்றி குங்குமம் டாக்டர்

புதிய தம்பதிகளுக்கான மெடிக்கல் கைடு!

இரு மனங்கள் இணையும் வைபவம் திருமணம். நான்கு கண்கள் காணும் ஒற்றைக் கனவு. மனம் எல்லாம் குதூகலமாய், நினைவெல்லாம் பூரிப்பாய், உடலெங்கும் சிலிர்ப்பாய் பலப் பல எதிர்பார்ப்புகளோடு தம்பதிகள் இருவருமே புது வாழ்வில் இணையக் காத்திருப்பார்கள். திருமணத் தேதி குறித்ததுமே உள்ளுக்குள் சில்லென்று ஒரு மின்னல் ஊடாடத் தொடங்கிவிடும். இன்னும் எத்தனை நாள் என காலண்டர் தேதியைப் பார்த்துப் பார்த்து மனம் மகிழ்ச்சியில் மனம் விம்மும்.

இவன்தானா என்னவன் என மணப்பெண்ணும் இவளா நம் வாழ்வை அர்த்தமாக்க வந்த தேவதை என மணமகனும் ஒருவர் புகைப்படத்தை மற்றொருவர் ரகசியமாய் ரசித்தபடி, வாட்ஸப்களில் குறுகுறுப்பு வளர்த்து புதிய வாழ்க்கைக்குக் காத்திருப்பார்கள். இணையவிருக்கும் புதிய வாழ்வு அன்பும் அறனும் நிறைந்த பண்பும் பயனுமாய் இருந்தால் மட்டும் போதாது. உடல் மனம் இரண்டுக்கும் ஆரோக்கியத்தின் அரவணைப்பும் அங்கு இருந்தால் ஆனந்தத்துக்கு எல்லையேது?

பதட்டம் வேண்டாம்

திருமணத் தேதி நெருங்க நெருங்க மணமக்களுக்கு ஒருவித மன அழுத்தம் கூடுதலாக உருவாகும். நிகழவிருக்கும் மணவிழா நல்லவிதமாக நிகழ வேண்டுமே என்கிற பதட்டம் ஒருபுறம், வரப்போகும் துணையை, அவர்களின், வீட்டாரைப் பற்றிய எதிர்பார்ப்புகள் மறுபுறம் என சமனற்ற உணர்வுகளில் தள்ளாடுவார்கள். குறிப்பாக, பெண்களுக்கு இந்தப் பதட்டம் அதிகமாகவே இருக்கும். இது இயல்புதான். இதற்காக அச்சப்பட ஒன்றுமில்லை. மணமகனோடு திருமணத்துக்கு முன்பே கொஞ்சம் இயல்பாகப் பேசி இந்த விஷயங்களை எல்லாம் கொஞ்சம் எளிமையாக்கிக்கொள்வது நல்லது.

அளவுகடந்த ஆர்வமும் வேண்டாம்

சிலர் மணநாள் நிச்சயமானதுமே அதீத ஆர்வத்தில் என்னென்னவோ செய்யத் தொடங்குவார்கள். வருங்காலத் துணையை இம்ப்ரஸ் செய்ய வேண்டும் என்பதற்காக சினிமா நாயகர், நாயகி போல் சாகசங்களில் எல்லாம் இறங்குவார்கள். அதிரடியாக இரவில் வீட்டுக்குச் சென்று சர்ப்ரைஸ் தர நினைப்பது. அவர்களுக்குப் பிடிக்குமா பிடிக்காதா என்று விசாரிக்காமலே தனக்குப் பிடித்த பரிசுடன் சென்று நிற்பது என்பது முதல் ஃப்ரீ வெட்டிங் ஷூட்களில் ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுவது வரை தப்பு தப்பாய் செய்து சொதப்புவார்கள். முதலில் உங்கள் இணையை புரிந்துகொள்ளுங்கள். உங்களைப் புரிய அவர்களுக்கும் போதிய கால அவகாசம் கொடுங்கள். இல்லாவிடில் அதீத ஆர்வமே சிக்கலாக மாறவும்கூடும்.

விருந்து கவனம்

திருமணமான புதிதில் விருந்தினர் வீடுகளுக்குச் செல்வது ஒரு முக்கிய சடங்கு. அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, மாமன், மச்சான் என எல்லோரும் வரிசையாக புது மணத் தம்பதிகளை விருந்துக்கு அழைப்பார்கள். மணமக்களை அசத்த வேண்டுமென பலவகையான அறுசுவை மெனுக்களைப் போட்டு, அசரடிப்பார்கள். சாப்பிட்டே ஆக வேண்டுமென அன்பு வன்முறை செய்வார்கள். இப்படி, தொடர்ச்சியாக காரமாக, அசைவம் அது இதுவென பலவீட்டுச் சாப்பாட்டையும் சாப்பிட்டுக்கொண்டிருந்தால் வயிறு வேலையைக் காட்டிவிடும். எனவே, டயட்டில் கவனமாய் இருங்கள்.

இனிப்பாய் இருந்தாலும் காரமாய் இருந்தாலும் அளவோடு உண்ணுங்கள். வழக்கமான கலோரிகளுக்கு மேல் எப்போதும் எடுத்துக்கொள்ளாதீர்கள்.

உடற்பயிற்சி, ஓய்வு முக்கியம்

மணமான புதிதில் கல்யாணப் பூரிப்பு என்பதால் தம்பதிகள் இருவருமே கொஞ்சம் உடல் பூசிவிடுவார்கள். எனவே, டயட்டோடு சேர்ந்து உடற்பயிற்சியும் அவசியம். தினமும் அதிகாலை எழுந்து நடைப்பயிற்சி செய்வது நல்லது. நடைப்பயிற்சி, ஜாக்கிங், நீச்சல், சைக்கிளிங், ஸ்கிப்பிங் போன்ற கார்டியோ பயிற்சிகள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைத்து உங்களை ஃபிட்டாக வைத்திருக்க உதவும். உடற்பயிற்சி போலவே உறக்கமும் மிகவும் முக்கியம். என்னதான் புதுமணத் தம்பதிகள் என்றாலும் தினசரி எட்டு மணி நேரத் தூக்கம் என்பதில் கறாராக இருப்பது நல்லது. இரவில் போதிய தூக்கம் இல்லாவிடில் பகலில் அதை ஈடுகட்டியாவது உடலைக் காத்துக்கொள்ளுங்கள். இதனால், உடலின் வளர்சிதை மாற்றம் கெடாது.      

கணவன் மனைவி அன்னியோன்யம் மேம்பட…

கணவன் மனைவியிடமும் மனைவி கணவனிடமும் காட்ட வேண்டியது பரஸ்பர அன்பையும் மரியாதையையும்தானே தவிர அதிகாரத்தை அல்ல. எனவே, உங்கள் இணையின் கருத்துகளுக்கு எப்போதும் மதிப்பளியுங்கள். மாற்றுக்கருத்து இருந்தால் ஆரோக்கியமாய் உரையாடுங்கள். இரு குடும்பங்கள் இனையும் நிகழ்வே திருமணம். எனவே, நம்வீட்டுச்சுழல்தான் அங்கும் இருக்கும் என நினைக்காதீர்கள்.

கணவன், மனைவி இருவருமே ஒருவரை ஒருவர் மனம் விட்டுப் பாராட்டுங்கள். குற்றம், குறை இருந்தால் தன்மையாய் அதை சரியான தருணத்தில் சுட்டிக்காட்டுங்கள். ஒருவர் கோபப்படும் தருணத்தில் இன்னொருவர் தணிந்திருக்கலாம். ஒருவர் பொறை இருவர் நட்பு என்பார்கள். ஒருவர் அமைதியாக இருந்தாலே பெரும்பாலான வாக்குவாதங்கள், மனேஸ்தாபங்கள் விரைவில் முடிவுக்கு வந்துவிடும்.

யார் பெரிது என்ற ஈகோ எப்போதும் வேண்டாம். எப்படிப்பட்ட சண்டையாக இருந்தாலும் ஆணோ பெண்ணோ அவர் பேசட்டும் என நினைக்காமல் நீங்களாகவே சென்று பேசுங்கள். தவறு உங்கள் பக்கம் என்றால் ஒப்புக்கொள்ளுங்கள். தயங்காமல் மன்னிப்புக் கேளுங்கள். பிரச்சனைகளை உங்களுக்கு உள்ளேயே மனம் விட்டுப் பேசிக்கொள்ளுங்கள். எக்காரணத்தை முன்னிட்டும் மூன்றாம் நபர் உள்ளே நுழைய அனுமதிக்காதீர்கள். தினசரி ஒருவேளை உணவையேனும் குடும்பமாகச் சேர்ந்து அமர்ந்து உண்ணுங்கள். அப்போதுதான் குடும்பத்தில் உள்ளவர்கள் ஒவ்வொருவரின் மனநிலை என்ன என்பது மற்றவர்களுக்குத் தெளிவாகத் தெரியும்.

எப்போதும் வேலை வேலை என்று பறந்து கொண்டிருக்காமல், வீட்டுக்கு என்று தினசரி குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள். ஞாயிற்றுக் கிழமைகளில் குடும்பத்தோடு பிக்னிக் செல்வது, ஷாப்பிங் செல்வது, கோயிலுக்குச் செல்வது என்ற பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.சின்னச் சின்ன பரிசுகள், அன்பளிப்புகள் குடும்பத்தை உற்சாகமாக வைத்திருப்பவை. எனவே, குழந்தைகளுக்கும் உங்களின் இணைக்கும் தாராளமாகப் பரிசளியுங்கள். விலை மதிப்பு மிக்கவைதான் பரிசுகள் என்று இல்லை. சிறிய சாக்லேட், ஒரு டம்ளர் பாயாசம் போன்றவைகூட மனதையும் வயிற்றையும் நிறைக்கும் பரிசுகளாக மாற முடியும்.

வீட்டுக்கு வரும் நண்பர்கள் உறவினர்களிடம் இருவருமே சுமுகமாய், கலகலப்பாய் பழகுங்கள். இது உன் நண்பர்தானே, உன் உறவினர்தானே நான் ஏன் பேச வேண்டும் என்ற மனோபாவத்தைக் கைவிடுங்கள்.

இளம் மணப்பெண்ணுக்கு ஃபோலிக் ஆசிட் அவசியம்!

பொதுவாக இன்றைய பெண்களுக்கு வைட்டமின் பி (B) குறைவாக உள்ளது. இதனால் ரத்தசோகை ஏற்படுவதோடு மகப்பேறு பிரச்னைகளும் உருவாகிறது. ஃபோலிக் ஆசிட்  குறைப்பாட்டால் கருவின் மூளைவளரச்சி பாதிக்கபடக்கூடும்.போலிக் ஆசிட் மாத்திரையில் வைட்டமின் பி சத்து அதிகமாக உள்ளதால் பெண்களுக்கு மருத்துவர்கள் இதனைப் பரிந்துரை செய்கின்றனர். கர்ப்பக் காலத்தில் குழந்தையின் வளர்ச்சிக்காகவும், தாயின் இரத்த அளவு அதிகரிக்கவும், குழந்தையின் டி.என்.ஏ வளர்ச்சிக்கும் போலிக் ஆசிட் அவசியமானது.போலிக் ஆசிட் மாத்திரைகளை மருத்துவரின் ஆலோனையைப் பெற்று திருமணத்திற்கு மூன்று மாதத்திற்கு முன்பு இருந்தாவது சாப்பிட ஆரம்பித்தால் குழந்தை பேறில் ஏற்படும் சிக்கலைத் தவிர்க்கலாம்.

போலிக் ஆசிட் மாத்திரைகள் மகப்பேறுக்கான மாத்திரை மட்டும் இல்லை. சில பெண்களுக்கு ஹீமோகுளோபினின் அளவு இயல்பிலேயே குறைவாக இருக்கும். இதனை இரும்புச் சத்து மாத்திரைகளால் மட்டும் சரி செய்துவிட முடியாது. அப்படிப்பட்ட பெண்கள், மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து போலிக் ஆசிட் மாத்திரைகளை எடுத்துக்கொள்வது அவசியம். காய்கறிகள், பசலைக்கீரை, பீன்ஸ், ப்ரோக்கோலி, பப்பாளி, ஆரஞ்சு, ஈஸ்ட், லெட் யூஸ், முளைக்கட்டிய பயறு, சிக்கன் வகைகளில் ஃபோலிக் ஆசிட் இருப்பதால் இந்த உணவுகளையும் சாப்பிடலாம்.

அட்டைப்படம்: shutterstock

Related Stories: