புற்றுநோய்க்கு புதிய சிகிச்சைகள்

நன்றி குங்குமம் டாக்டர்

மாறிவரும்  வாழ்க்கைச் சூழல்கள், மாசுபட்டச் சுற்றுச்சூழல்கள், துரித உணவுகளின்  ஆதிக்கம் போன்ற பல காரணங்களால் உலக அளவில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து  வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 8 லட்சம் பேருக்குப்  புதிதாகப்  புற்றுநோய் வருவதாக அறியப்பட்டுள்ளது. உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாகவே   இருக்கும் எனத் தெரிகிறது. நாட்டில் வருடத்துக்கு சுமார் 3 லட்சம் பேர்  புற்றுநோயால் மட்டும் இறக்கிறார்கள் என்கிறது ஒரு மருத்துவப் புள்ளிவிவரம்.

இந்த  இறப்புக்குக் காரணங்களாக ‘இந்தியப் புற்றுநோய்க் கழகம்’ கீழ்க்காணும்  காரணங்களைப் பட்டியலிட்டுள்ளது. 1. பொதுமக்களிடம் புற்றுநோய் குறித்த  விழிப்புணர்வு பரவலாக இல்லை. 2. நோயை வருமுன் காக்கத் தவறுகின்றனர். 3.  ஆரம்ப கட்டத்தில் அதைக் கண்டறிந்து சிகிச்சை பெறும் விழிப்புணர்வும்  பரவலாக்கப்படவில்லை. 4. புற்றுநோய்க்கான அனைத்துச் சிகிச்சைகளும்  அடித்தட்டு மக்களுக்குச் சென்றடையவில்லை.

புற்றுநோய்க்குச் சிகிச்சை தற்போதைய  நவீன மருத்துவம் புற்றுநோய் சிகிச்சையில்  பல விதங்களில்  மேம்பட்டிருக்கிறது.  இன்றைக்கு மருந்து சிகிச்சை, அறுவை சிகிச்சை,  கதிர்வீச்சுச் சிகிச்சை, பேலியேட்டிவ் சிகிச்சை போன்றவற்றால்  புற்றுநோய்க்கு முடிவு கட்ட முடியும். நோயாளிக்கு வந்துள்ள புற்றுநோய் வகை,  இடம், நிலை ஆகியவற்றைப் பொருத்து இந்தச் சிகிச்சைகளைத் தருகிறார்கள்  மருத்துவர்கள். சென்னை அடையார் புற்றுநோய் மருத்துவமனையிலும் அரசு  மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் புற்றுநோய்க்கு இலவசமாக சிகிச்சை  தரப்படுகிறது. எனவே, புற்றுநோய்க்குப் பயப்படத் தேவையில்லை. இப்போதெல்லாம்  புற்றுநோயாளிகளுக்கு மறுவாழ்வு கிடைப்பது உறுதியாகிறது. இந்தச் சூழலில்  புற்றுநோய்க்குத் தரப்படும் கதிர்வீச்சுச் சிகிச்சையில் புதிய  முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றை இப்போது பார்ப்போம்.

கதிர்வீச்சு சிகிச்சை

எக்ஸ்-ரே  கருவியின் துணையுடன் கதிர்வீச்சுப் பொருள்களை உடலுக்குள் அனுப்பிப்  புற்றுநோய்த் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வழிமுறைக்குக் கதிர்வீச்சுச்  சிகிச்சை (Radiotherapy) என்று பெயர். கதிர்வீச்சுப் பொருள்களில் எக்ஸ்  கதிர்கள், ஆல்பா, காமா, பீட்டா கதிர்கள், புரோட்டான், நியூட்ரான்,  எலெக்ட்ரான் கதிர்கள் எனப் பலவிதம் உள்ளன. இவற்றில் நம் நாட்டில் எக்ஸ்  கதிர்கள், காமா கதிர்கள், எலெக்ட்ரான் கதிர்கள் ஆகியவை அதிகப் பயன்பாட்டில்  உள்ளன.

இவை மனித உடலுக்குள் செலுத்தப்படும்போது, நேரடி விளைவையும்  ஏற்படுத்துகிறது; மறைமுக விளைவையும் ஏற்படுத்துகிறது. கதிர்வீச்சானது உடல்  செல்களின் ‘டிஎன்ஏ’க்களைத் தாக்கி அழிக்குமானால் அது நேரடி விளைவு.  கதிர்வீச்சு மூலமாகத் திசுக்களில் அல்லது செல்களில் ஏற்படும் ‘ஃபிரீ  ரேடிக்கில்ஸ்’ (Free radicles) எனும் இடைப்பொருள்களைக் கொண்டு  புற்றுசெல்களை அழிப்பது மறைமுக விளைவு. இவற்றின் மூலம் புற்று செல்கள்  மறுபடியும் உற்பத்தியாகாமல் பார்த்துக் கொள்வது கதிர்வீச்சு சிகிச்சையின்  முக்கிய நோக்கம்.

கதிர்வீச்சு முறைகள்

கதிர்வீச்சில் வெளிக்கதிர்  வீச்சு, உட்கதிர் வீச்சு என இரு உட்பிரிவுகள் உண்டு. வெளிக்கதிர் வீச்சு  கோபால்ட் மற்றும் லீனாக் கருவிகளைக் கொண்டு கொடுக்கப்படுகிறது.  கதிர்வீச்சுக் கருவியில் எக்ஸ் கதிர்கள், காமா கதிர்கள் போன்றவற்றை  உருவாக்கி, வெளிப்புறத்திலிருந்து தோல் வழியாக நோயாளியின் உடலுக்குள்  செலுத்துகிறார்கள். அவை புற்றுநோயுள்ள இடத்தை அடைந்து அந்தத் திசுக்களை  அழிக்கின்றன. இது ‘டெலிதெரபி’ (Teletherapy) என்றும் அழைக்கப்படுகிறது.  உதாரணம், நுரையீரல் புற்றுநோய்க்குத் தரப்படும் சிகிச்சை.

‘பிரேக்கிதெரபி’  (Bracytherapy) எனப்படும் உட்கதிர் வீச்சு என்பது கதிர்வீச்சை உமிழும்  ஐசோடோப்புகளை உடலுக்குள் செலுத்தி, அதன் மூலம் கதிர்வீச்சுச் சிகிச்சை  வழங்கப்படுகிறது. தோல் வழியாக இந்தக் கதிர்வீச்சு செல்வதில்லை.  பெரும்பாலும் குறிப்பிட்ட அளவுக்கு வெளிக்கதிர் வீச்சு கொடுக்கப்பட்ட  பிறகு, உட்கதிர் வீச்சு தரப்படுகிறது. உதாரணம், உணவுக்குழாய்ப் புற்று,  கருப்பைவாய்ப் புற்று.

பழைய கதிர்வீச்சு முறை

பழையமுறை கதிர்வீச்சுச்  சிகிச்சையை ‘2D ரேடியோதெரபி’ என்பார்கள். இதில் அதிக அளவு கதிர்வீச்சைத்  தரவேண்டியது இருந்தது. அப்போது அது புற்றுள்ள இடத்தின் அருகில் இருக்கும்  திசுக்களையும் அழித்தது. அதனால் நோயாளிக்கு வாயில் புண் ஏற்படுவது, தலைமுடி  உதிர்வது போன்ற பல பக்க விளைவுகள் ஏற்பட்டன. இதைத் தவிர்க்க ‘3D  கன்ஃபார்மல் ரேடியோதெரபி’ (3D conformal radiotherapy) வந்தது. இந்த  சிகிச்சை முறையில் சிடி ஸ்கேன் மூலம் நோயுள்ள இடத்தை முப்பரிமாணங்களில்  படமெடுத்துக்கொண்டு, கணினி உதவியுடன் நோய்க்குத் தகுந்தவாறு கதிர்வீச்சின்  அளவைக் கணக்கிட்டுக்கொண்டு, புற்றுள்ள இடத்தை மட்டும் தாக்கி அழிக்கும்  வகையிலும், அருகில் உள்ள ஆரோக்கிய உறுப்புகளைத் தவிர்க்கும் வகையிலும்  சிகிச்சை வடிவமைக்கப்பட்டது. இதில் பக்கவிளைவுகள் குறைந்தன என்றாலும்,  முழுவதுமாகத் தவிர்க்க முடியவில்லை.

புதிய கதிர்வீச்சு முறைகள்

நவீன   கதிர்வீச்சு முறையில் பலவிதம் உள்ளன. அவற்றில் ஒன்று, ‘ஐஎம்ஆர்டி’  (Intensity Modulated Radiation Therapy). லீனாக் கருவி மூலம் இந்தச்  சிகிச்சை வழங்கப்படுகிறது. இதில் கதிர்வீச்சுக் கருவியிலிருந்து புறப்படும்  ஒவ்வொரு கதிர்வீச்சின் தன்மையையும் தீவிரத்தையும் மாற்றிக்கொள்ள  முடிகிறது. இதன் பலனாக, உடல் உறுப்பு உள்ள இடத்தைப் பொறுத்தும் அதன்  அமைப்பைப் பொறுத்தும் கதிர்வீச்சின் அளவைக் கூட்டிக்கொள்ளவும் குறைத்துக்  கொள்ளவும் முடிகிறது. அப்போது அது நல்ல உடல் பகுதிகளைத் தாக்குவது  தடுக்கப்படுகிறது. உதாரணமாக, மூளைக்கட்டிகளுக்கு ‘3D ரேடியோதெரபி’  தரும்போது முதலில் கதிர்வீச்சின் வடிவத்தை அமைத்துக்கொண்டு, அதன் அளவைத்  தீர்மானிக்கிறார்கள். அதே அமைப்புடனும் அளவுடனும்தான் சிகிச்சை முழுவதும்  கதிர்வீச்சைத் தரமுடியும். அப்போது அது மூளைக்குள் உள்ள நரம்புகளையோ  சுரப்பிகளையோ தேவையில்லாமல்

தாக்கிவிடலாம்.

ஆனால், ‘ஐஎம்ஆர்டி’  கதிர்வீச்சைத் தரும்போது, ஒவ்வொரு புற்றுள்ள இடத்தைப் பொறுத்து ஒவ்வொரு  கதிர்வீச்சின் வடிவத்தையும் அதன் அளவையும் தீர்மானிக்க முடியும்  என்பதாலும், சிகிச்சையின்போதே தேவைக்குத் தகுந்தவாறு அவற்றை மாற்றிக்கொள்ள  முடியும் என்பதாலும் இந்தப் பிரச்சினை தவிர்க்கப்படுகிறது. ஒருவேளை  கதிர்வீச்சு நல்ல உறுப்புகளுக்கும் செல்வதைத் தடுக்கமுடியாத இடத்தில்  புற்றுநோய் இருந்தால், நல்ல உறுப்புகளுக்குச் செல்லும் கதிர்வீச்சின் அளவை  நன்றாகக் குறைத்துக்கொள்ளவும் இந்தப் புதிய சிகிச்சையில் வழி இருக்கிறது.

‘ஐஜிஆர்டி’  (Image Guided Radiotherapy) என்பது அடுத்ததொரு நவீன கதிர்வீச்சு  சிகிச்சைமுறை.

பொதுவாக, கதிர்வீச்சுச் சிகிச்சையில் தரப்படும்  கதிர்வீச்சுகள் சரியாகவும் முறையாகவும் புற்றுநோயுள்ள இடத்தை அடைந்தால்தான்  நோய் கட்டுப்படும். இல்லையென்றால் அந்தக் கதிர்வீச்சுகள் தேவையில்லாத  இடத்தில் குவிந்துகொண்டு பல சிக்கல்களை உருவாக்கும். அப்படியானால்  கதிர்வீச்சுகள் சரியாகத்தான் சேரவேண்டிய இடத்தில் சேர்ந்துள்ளன என்பதை  எப்படித் தெரிந்துகொள்வது? இதற்காக வந்ததுதான் ‘ஐஜிஆர்டி’ சிகிச்சை.

சுருக்கமாகச் சொன்னால், சரியாகக் குறிபார்த்துச் சுடும் வித்தை. ‘கோன் பீம்  சிடி’ (CBCT) எனும் பிரத்தியேக ஸ்கேன் துணையுடன் நோயுள்ள இடத்தை  நேரடியாகப் பார்த்துக் கொண்டே கதிர்வீச்சு தரப்படும் சிகிச்சை இது. இதனால்  புற்றுநோயுள்ள இடத்தை மட்டும் மிகவும் துல்லியமாக அழிக்கமுடிகிறது. இது  பொதுவாக எல்லாப் புற்றுநோய்களுக்கும் பொருந்தக் கூடியது.

‘எஸ்பிஆர்டி’  (Stereotactic Body Radiotherapy) என்பது மற்றொரு நவீன கதிர்வீச்சு  சிகிச்சைமுறை. மிகவும் அதிக அளவில் கதிர்வீச்சு தேவைப்படும்  புற்றுநோய்களுக்கு ‘சைபர் நைஃப்’ (CyberKnife) எனும் கருவி கொண்டு  அளிக்கப்படும் சிகிச்சை இது. கல்லீரல், சிறுநீரகம், கணையம், புராஸ்டேட்,  கழுத்து, மூளை,  தண்டுவடம் போன்ற முக்கியமான உடல் உறுப்புகளில் அறுவை  சிகிச்சை மேற்கொள்ள முடியாத அளவுக்குப் புற்றுநோய் ஏற்படுமானால், இந்தச்  சிகிச்சை வழங்கப்படுகிறது. மிகத் துல்லியமான சிகிச்சை மட்டுமில்லாமல்  குறுகிய காலச் சிகிச்சையாகவும் இது கருதப்படுகிறது.

புரோட்டான் சிகிச்சை அதிநவீன சிகிச்சை!

இதுவரை  சொன்னவை எல்லாம் நவீன கதிர்வீச்சுச் சிகிச்சைகள் என்றால் ‘புரோட்டான்  சிகிச்சை’ (Proton therapy) என்பது அதிநவீனமானது. புற்றுநோய் சிகிச்சையில்  ஒரு திருப்புமுனை என்று சொல்லலாம். எப்படி? மேற்சொன்ன கதிர்வீச்சுச்  சிகிச்சைகளில் என்னதான் கதிர்வீச்சின் அளவையும் அது தாக்கும் குறியையும்  சரியாக அமைத்தாலும், கதிர்வீச்சின் பயணப்பாதையில் முன்னும் பின்னும்  இருக்கும் நல்ல உறுப்புகளையும் தாண்டித்தான் அது செல்ல முடியும். இது  அக்கதிர்களின் இயற்பியல் பண்பினால் ஏற்படுவது. அப்போது சிறு அளவிலாவது நல்ல  உறுப்புகள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க முடியாது. இதற்கான அதிநவீனத்  தீர்வாக இப்போது வந்துள்ளது ‘புரோட்டான் சிகிச்சை’.

‘புரோட்டான் பீம்’  எனப்படும் பிரத்தியேகக் கருவிகொண்டு இந்தக் கதிர்கள் வெளியேற்றப்படுகின்றன.  முதலில் ‘சைக்ளோட்ரான்’ எனும் கருவியில் புரோட்டான் கதிர்களின் வேகம்  மற்றும் ஆற்றல் செறிவூட்டப்படுகிறது. பிறகு இவை பல்வேறு கட்டங்களில்  வடிகட்டப்பட்டு, புற்றுநோயுள்ள இடத்தை மட்டும் தாக்கி அழிக்கவல்ல கதிர்களாக  வெளித்தள்ளப்படுகிறது. பென்சில் முனை போன்று மிகக் கூர்மையாகப் புற்றுள்ள  இடத்தை மட்டுமே தாக்கி அழிக்கக் கூடியது (Cutting-edge pencil-beam  scanning technology). இயற்பியல் பண்பின்படி, குறிப்பிட்ட இடத்தில் மட்டும்  தம் சக்தி அனைத்தையும் கொடுக்கும்படியாக இக்கதிர்கள் அமைந்துள்ளதே  இதற்குக் காரணம். இதனால் இவற்றின் பயணப்பாதையில் முன்னும் பின்னும் உள்ள  மற்ற நல்ல உறுப்புகளும் நரம்புகளும் துளியும் தாக்கப்படாமல்  தப்பித்துவிடுகின்றன. அதேவேளையில் புற்றுள்ள பகுதி மிகத் துல்லியமாகவும்  முழுவதுமாகவும் அழிக்கப்படுகிறது. நோய் நன்கு கட்டுப்படுகிறது.

கூடுதல் நன்மைகள் என்னென்ன?

உடலில்  மிக நுட்பமான உறுப்புகளில் புற்றுநோய் தாக்கும்போது அவற்றுக்குப்  புரோட்டான் சிகிச்சை சிறந்த பலன் தருகிறது. குறிப்பாகச் சொல்வதென்றால்,  நுரையீரல், குடல், கண், கணையம், மார்பகம், புராஸ்டேட், மூளை, தண்டுவடம்,  முகத்தில் உள்ள சைனஸ் அறைகள் போன்ற இடங்களில் உருவாகும் புற்றுநோய்களுக்கு  முழுமையான நிவாரணம் கிடைக்கிறது. குழந்தைகளுக்கு ஏற்படும்  புற்றுநோய்களுக்கும் இது பயன்படுகிறது.

மேலும், புற்றுநோய்க் கட்டிகளுக்கு  மட்டுமன்றி, சாதாரண வகை கட்டிகளுக்கும் இது நல்ல பலனைத் தருகிறது. அடுத்து,  கதிர்வீச்சு சிகிச்சையின் பக்க விளைவாக வரக்கூடிய இரண்டாம் நிலை  புற்றுநோய் (Secondary cancer) வருவதும் இதில் தடுக்கப்படுகிறது. இறுதியாக,  பழைய சிகிச்சை முறைகளில் கதிர்வீச்சு சிகிச்சைக்கு 30க்கும் மேற்பட்ட  அமர்வுகள் தேவைப்பட்டன. புரோட்டான் சிகிச்சையில் 10க்கும் குறைவான  அமர்வுகளிலேயே நல்ல நிவாரணம் தரமுடிகிறது. இதனால், நோயாளிக்கு அலைச்சல்  மிச்சமாகிறது.

புற்றுநோயாளிகளுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாக தெற்கு  ஆசியாவிலேயே முதல் முதலாக சென்னையில் இந்தச் சிகிச்சை சமீபத்தில்  வந்துள்ளது. புற்றுநோய் சிகிச்சையில் இது ஒரு புது வரவு என்பதால்  இப்போதைக்கு இதற்கான செலவு சிறிது அதிமாகவே இருக்கிறது. நாளடைவில் இந்தச்  செலவு குறையும் என நம்பலாம்.

Related Stories: