பரந்தூர் விமான நிலையம்: விரிவான தொழில்நுட்ப பொருளாதார அறிக்கை தயார் செய்ய கோரப்பட்ட டெண்டர் அவகாசம் நீட்டிப்பு..!!

சென்னை: பரந்தூரில் விமான நிலையத்திற்கு விரிவான அறிக்கை தயார் செய்யும் ஆலோசகரை முடிவு செய்யும் டெண்டர் அவகாசம் 2ம் முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 2ம் விமான நிலையத்திற்கு விரிவான தொழில்நுட்ப பொருளாதார அறிக்கை தயார் செய்ய ஆலோசகரை நியமிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. பிப்ரவரி 6ம் தேதியுடன் அவகாசம்  நிறைவடைந்த நிலையில் தற்போது பிப்ரவரி 27ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்துள்ள காஞ்சிபுரத்தில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைய உள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன.  இதற்காக பரந்தூரை சுற்றி உள்ள ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு, எடையார்பாக்கம், தண்டலம் உள்ளிட்ட 13 கிராமங்களில் சுமார் 4,500 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான டெண்டர் விடும் பணிகளும் நடைபெற்று வருகிறது. சென்னையில் இரண்டாவதாக அமைய உள்ள விமான நிலையத்தில் போக்குவரத்து, விமான நிலையம் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு, சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கை, நிலையத்தின் மூலம் கிடைக்கும் வருவாய், மேம்பாட்டு பணிகள், திட்ட வரைபடம் உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளது. இதற்காக ஏற்கனவே சில ஒப்பந்ததாரர்கள் முன்வந்துள்ள நிலையில் கூடுதலாக ஒப்பந்ததாரர்களையும் சேர்ப்பதற்காக கால அவகாசம் பிப்ரவரி 27ம் தேதி வரை  நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Related Stories: