சென்னை: கோவை கார் சிலிண்டர் விபத்து வழக்கில், 7 பேரை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே அக்டோபர் 23ம் தேதி கார் சிலிண்டர் வெடித்து ஜமேஷா முபின்(28) என்பவர் பலியானார். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.) போலீசார் விசாரிக்கின்றனர். இது தொடர்பாக இதுவரை 11 பேரை என்ஐஏ போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவான ஆவணங்கள், முக்கிய ஆதாரங்கள், லேப்டாப் உள்ளிட்டவைகளை போலீசார் கைப்பற்றினர்.
இந்த வழக்கில் 7 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க பூந்தமல்லி தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ போலீசார் கடந்த பிப்.1ம் தேதி மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளவழகன், இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முகமது அசாரூதீன்(23), பைரோஸ்(28), நவாஸ்(26), அப்சர்கான்(28), முகமது தவ்பீக்(25), சேக் இதயுதுல்லா(42), சனோபர் அலி(28) ஆகிய 7 பேரை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து 7 பேரையும் என்ஐஏ போலீசார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். சென்னை, கோவை, குன்னூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு 7 பேரையும் அழைத்துச் சென்று என்ஐஏ போலீசார் விசாரித்தனர். விசாரணைக்குப் பிறகு 7 பேரையும் நேற்று பூந்தமல்லி என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி, 7 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.