பாமக நிறுவனர்ராமதாஸ் மீது சமூக வலைதளங்களில் அவதூறு: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ், மது பாட்டிலுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை  சமூக வலைதளங்களில்  பரப்பிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாமக சார்பில் போலீஸ் கமிஷனர் அலுலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாமக மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் ஜெயராமன் அளித்த புகாரில் கூறியுள்ளதாவது:

எங்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்தும், போராடியும் வருகிறார். அதேபோல் மருத்துவம் பயின்று மருத்துவராக இருந்து வருவதால் மதுவின் தீமை குறித்து தொடர்ந்து பேசி வருகிறார். இந்நிலையில் எங்கள் கட்சியின் நிறுவனரின் நற்பெயருக்கும், மதுவிற்கு எதிராக அவரது கொள்கைக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில், திட்டமிட்டு சமூக வலைதளத்தில் இரண்டு புகைப்படங்களில் மது பாட்டில் இருப்பது போன்று வெளியிட்டுள்ளார். இதை கண்டதும் எங்கள் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தோம்.

எங்கள் நிறுவனர் இடம்பெற்றுள்ள படத்தில் உள்ள பாட்டில் கொலவிட்டா என்ற ஆலிவ் ஆயில் பாட்டில் ஆகும். சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஏதோ ஒரு செய்தியாக இதை கருதாமல், செய்தி வெளியிட்டவர்களின் உள்நோக்கத்தையும், அது சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தையும் கருத்தில் கொண்டு எங்கள் புகார்  மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படத்தையும் நீக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: