‘கள ஆய்வில் முதல்வர்’ திட்டத்தின் 2ம் கட்டமாக சேலம் மண்டலத்தில் வரும் 15ம் தேதி முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்

சென்னை: ‘கள ஆய்வில் முதல்வர்’ திட்டத்தின், 2ம் கட்டமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 15 மற்றும் 16ம் தேதிகளில் சேலம் மண்டலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

‘‘கள ஆய்வில் முதல்வர்’’ திட்டம் கடந்த 1ம் தேதி தொடங்கப்பட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் முதற்கட்டமாக வேலூர் மண்டலத்திற்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில், குடிநீர் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், வருவாய்த்துறை வழங்ககூடிய சேவைகள், ஊரக மேம்பாடு, நகர்ப்புற வளர்ச்சி, சாலை மேம்பாடு, வாழ்வாதாரத்தை உயர்த்துதல் போன்ற முக்கிய துறை சார்ந்த திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் அவற்றின் பயன்கள் பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடைகிறதா உள்ளிட்ட ஆய்வுகளை மேற்கொண்டார். மேலும், கள ஆய்வு திட்டத்தின் முதல் ஆய்வுக்கூட்டம் முதல்வர் தலைமையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 4 மாவட்டத்தை சேர்ந்த உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆய்வு நடத்தி பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

இதன் பின்னர், மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டம், சுகாதார நல மையத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வுக்கு பின்னர் தான், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கான ஆட்சியர்கள் மாற்றம் செய்யப்பட்டனர். இந்தநிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டாம் கட்டமாக சேலம் மண்டலத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, பிப்.15 மற்றும் 16ம் தேதிகளில் சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் முதல்வர் கள ஆய்வு செய்ய உள்ளார். இந்த ஆய்வுக்கு பின்னர், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் முன்னிலையில் ஆய்வுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில் தலைமைச்செயலர், முக்கிய துறைகளின் செயலாளர்கள் மற்றும் பல்வேறு அரசு துறை தலைவர்கள் முன்னிலையில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சி தலைவர்கள் உள்ளிட்ட மாவட்ட உயர் அலுவலர்களுடன், முதல்வர் விரிவான ஆய்வினை மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: