மனவளர்ச்சி குன்றிய சிறுவன் கிணற்றில் விழுந்து பரிதாப பலி

துரைப்பாக்கம்: சென்னை காரப்பாக்கம், சடகோபன் தெருவை சேர்ந்தவர் யுவராஜ். இவரது மகன் ஏழுமலை (9), மன வளர்ச்சி குன்றியவன். வழக்கமாக வீட்டின் அருகே உள்ள வேண்டவராசி அம்மன் கோயில் மைதானத்தில் எப்போதும் விளையாடிக் கொண்டிருப்பான். அதேபோல் நேற்றும் விளையாடிக் கொண்டிருந்தான்.

இந்நிலையில், சிறுவன் ஏழுமலையை வெகு நேரமாக காணவில்லை என பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தனர். ஆனால், எங்கு தேடியும் கிடைக்காததால், பெற்றோர்  கண்ணகிநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அக்கம்பக்கத்தில் விசாரித்தனர்.

பின்னர், அருகில் உள்ள கிணற்றின் மேல் இருந்த பாதுகாப்பு வளையம் சிறிது உடைந்து இருப்பதை கவனித்த போலீசார், அது உடைந்து, சிறுவன் உள்ளே விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தோடு கிணற்றில் தேடினர். அப்போது, இறந்த நிலையில் சிறுவன் ஏழுமலை கிடப்பது தெரியவந்தது. போலீசார் சிறுவனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், கிணற்றின் உள்ளே யாரும் விழுந்து விடக்கூடாது எனவும், குப்பை போட்டு விடக்கூடாது என்பதற்காகவும் அதன்மேல் பாதுகாப்பு வளையம் போடப்பட்டிருந்தது. இந்த பாதுகாப்பு வளையம் மிகவும் துரு பிடித்து இருந்ததால் மன வளர்ச்சிக் குன்றிய சிறுவன் ஏழுமலை கிணற்றின் மீது ஏறியபோது, உடைந்து உள்ளே விழுந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: