வேளச்சேரியில் பரபரப்பு; எஸ்.ஐ.,யை கத்தியால் குத்தியவர் கைது: சகோதரர், சகோதரி, தாய் தலைமறைவு

வேளச்சேரி: வேளச்சேரியில் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார். வேளச்சேரி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் ஷாலினி (36). இவரது அண்ணன் சதீஷ்தாஸ் (38). கடந்த சில மாதங்களுக்கு முன் மாற்று சமூகத்தை சேர்ந்த வீரமணி என்பவரை ஷாலினி காதலித்து திருமணம் செய்தார். வீரமணியை ஷாலினியின் அண்ணன் சதீஷ் அவதூறாக பேசி வந்ததால், அண்ணன்-தங்கைக்கு இடையே குடும்ப தகராறு இருந்தது.

இந்நிலையில், கடந்த 22ம் தேதி தனது வீட்டில் இருந்து 2 கிராம் நகையை காணவில்லை என வேளச்சேரி போலீசில் ஷாலினி புகார் அளித்தார். மறுநாள் தனது புகாரின்மீது மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என ஷாலினி எழுதி கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில்,  ஷாலினியின் வீட்டுக்கு அண்ணன் சதீஷ்தாஸ், அக்கா வேளாங்கண்ணி, தாய் சாந்தி ஆகியோர் நேற்று முன்தினம் நேரில் சென்று சரமாரி தாக்கியுள்ளனர். இதில், படுகாயம் அடைந்த ஷாலினி, சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து சைதை அரசு மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின்பேரில், அன்றிரவே வேளச்சேரி காவல்நிலைய உதவி ஆய்வாளர் அருண், சதீஷ்தாசின் வீட்டுக்கு சென்று விசாரித்துள்ளார். அப்போது, அவரை சதீஷ்தாஸ் கத்தியால் சரமாரி குத்தியுள்ளார். எனினும், தோள்பட்டையில் ரத்தம் வழிந்த நிலையில் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சதீஷ்தாசை உதவி ஆய்வாளர் அருண் மடக்கி பிடித்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இதை தொடர்ந்து, உதவி ஆய்வாளர் அருணை போலீசார் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று அவர் வீடு திரும்பினார். புகாரின்பேரில் வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திய சதீஷ்தாசை கைது செய்து விசாரித்தனர்.

இதில், ஏற்கனவே சதீஷ்தாஸ் மீது அதே காவல் நிலையத்தில் 2 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. மேலும், இவ்வழக்கில் தலைமறைவான சதீஷ்தாசின் மற்றொரு சகோதரர், சகோதரி மற்றும் அவரது தாயை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: