மெரினாவில் சூரிய உதயத்தை பார்க்க பைக்கில் அதிவேகமாக சென்றவர் மின் கம்பத்தில் மோதி பரிதாப பலி: நண்பர் உயிர் ஊசல்

அண்ணா நகர்: அமைந்தகரையில் நேற்று அதிகாலையில் பைக்கில் அதிவேகத்தில் சென்றபோது மின்கம்பத்தில் மோதியதில் வாலிபர் பலியானார். அவரது நண்பர் தனியார் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மெரினா கடற்கரைக்கு சூரிய உதயத்தை பார்க்க சென்றபோது விபத்து நடந்துள்ளது.

சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் ரோடு அருகே நேற்று அதிகாலை பைக் மின் கம்பத்தில் மோதியதில் இரு வாலிபர்கள் ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தனர். அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அண்ணா நகர் போக்குவரத்து உதவி ஆணையர் சேகர் மற்றும் போலீசார் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக அமைந்தகரை பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து, போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ் மண்டோ (33), சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் வசித்து வந்ததும், மயிலாப்பூரில் உள் ஒரு செல்போன் கடையில் வேலை செய்ததும் தெரிய வந்தது. இவரது நண்பர் ஓம் விஷ்வூர் (34). இவர், அமைந்தகரை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

ராஜேஷ் மண்டோ மற்றும் ஓம் விஷ்வூர் இருவரும் ஒரு பைக்கில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் மெரினா கடற்கரையில் சூரியன் உதயத்தை பார்க்க வந்துள்ளனர். மற்றொரு பைக்கில் ஓம் விஷ்வூர் மனைவியும், உறவினரும் சென்றுள்ளனர். இதில் ராஜேஷ் மண்டோ பைக்கை அதிவேகத்தில் ஓட்டிச்சென்றபோது அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் ரோடு அருகே கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி மின் கம்பத்தில் மோதி உள்ளனர்.

இதில், தூக்கி வீசப்பட்ட ராஜேஷ் மண்டோ, நண்பர் ஓம் விஷ்வூருக்கு தலை, முகம், கை கால் ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. இதில் ராஜேஷ் மண்டோ தீவிர சிகிச்சை பலனியின்றி உயிரிழந்தார். ஓம் விஷ்வூர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories: