வீட்டின் முன் வாகனம் நிறுத்தியதால் ஆத்திரம்; கார் கண்ணாடியை உடைத்த நபர் கைது: போலீசாரை தாக்க முயற்சி

சென்னை: சென்னை மேற்கு மாம்பலம் சக்கரபாணி தெருவை சேர்ந்தவர் சிந்து (37). இவரது குழந்தை கே.கே.நகரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். வழக்கம்போல் நேற்று முன்தினம் குழந்தையை அழைத்து வர காரில் சென்றார். காரை கே.கே.நகர் 4வது செக்டார் 20வது தெருவில் உள்ள ஒரு வீட்டின் அருகே நிறுத்திவிட்டு சென்றார்.

பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதை பார்த்த சிந்து, கண்ணாடியை உடைந்த நபரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் எனது வீட்டின் முன்பு கார் நிறுத்தியதால் உடைத்தேன் என்று கூறி ஆபாசமாக பேசியுள்ளார்.

இதுகுறித்து சிந்து கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்ணாடியை உடைத்த நபரிடம் விசாரித்த போது, காவலர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளார். பின்னர் உடன் வந்த காவலர்களுடன் அந்த நபரை பிடித்து விசாரித்த போது, அதே பகுதியை சேர்ந்த அரவிந்த் (40) என்றும், சில மாதங்களுக்கு முன்பு காவல்துறையை தனது டிவிட்டர் பக்கத்தில் அவதூறாக பதிவு செய்த வழக்கில் சைபர் க்ரைம் போலீசார் கைது ெசய்ததும் தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் அரவிந்தை கைது ெசய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: