சென்னையில் ரூ.1 கோடியில் வனத்தீ கட்டுப்பாட்டு மையம்: வனத்துறை தகவல்

சென்னை: சென்னையில் ரூ.1 கோடி மதிப்பில் வனத்தீ கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படுவதாக வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர். தலைமை செயலகத்தில் நேற்று சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் வனத்தீ மேலாண்மை குறித்த கருத்துப் பட்டறை  நடைபெற்றது. இதை தலைமைச் செயலாளர் இறையன்பு தொடங்கி வைத்தார்.

இக்கருத்து பட்டறையில் வருவாய் நிர்வாகம் மற்றும்  பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் பிரபாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 2022ம் ஆண்டு ஏற்பட்ட 1500 தீ நிகழ்வுகளில் வனத்துறையின் களப்பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கைகளால் 91 சதவீத பெரிய அளவிலான தீ நிகழ்வுகள் 24 மணி நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்டது.

 இயற்கை வளங்களை பேணிப் பாதுகாக்க உறுதி பூண்டுள்ள தமிழ்நாடு அரசு வனத்துறை நவீனப்படுத்த ரூ.52.83 கோடி ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் வனத்தீ மேலாண்மை உள்ளிட்ட பணிகளுக்காக  ரூ.21.11 கோடி அரசு விடுவித்துள்ளது. தமிழ்நாடு அரசு சென்னையில் ஒரு கோடி ரூபாய் செலவில் வனத்தீ கட்டுப்பாட்டு மையத்தை நிறுவ உள்ளது.

இதேபோன்று 34 கோட்டங்களில் ரூ.6.80 கோடியில் வனத்தீ கட்டுப்பாட்டு மையங்கள் ஏற்படுத்தப்படவுள்ளது. தீத்தடுப்பு மற்றும் மேலாண்மை திட்டத்தின் கீழ் செயல்திறன் மிக்க தீ மேலாண்மை பணிகளுக்காக ரூ.5.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தீத்தடுப்பு பணிகளில் உயிரிழக்கும் வனத்துறை பணியாளர்கள் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் அரசு உதவித்தொகை வழங்கும் வகையில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார்.

Related Stories: