எதிர்க்கட்சிகளின் அவதூறுகள் எங்களை எதுவும் செய்யாது மக்களின் நம்பிக்கையே பாதுகாப்பு கவசம்: மக்களவையில் பிரதமர் மோடி உரை

புதுடெல்லி: மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய பிரதமர் மோடி, ‘‘மக்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கையே என்னை பாதுகாக்கும் கவசம். அதை எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளால் உடைக்க முடியாது’’ என்றார். ஆனால், அதானி விவகாரம் குறித்து அவர் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறுகிறது. இதில் மக்களவையில் நேற்று முன்தினம் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘பிரதமர் மோடிக்கும், தொழிலதிபர் அதானிக்கும் என்ன தொடர்பு? ஒன்றியத்தில் பாஜ ஆட்சி அமைந்த பிறகு அதானியின் சொத்துகள் பல மடங்கு அதிகரித்தது எப்படி? கடந்த 20 ஆண்டுகளில் பாஜவுக்கு அதானி குழுமம் எவ்வளவு பணம் தந்தது?’ என பல கேள்விகளைக் கேட்டிருந்தார்.

இந்நிலையில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து பிரதமர் மோடி நேற்று தனது உரையில் கூறியதாவது:

நூறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கான கொடூரமான தொற்று நோய் மற்றும் மோதல்களால் உலகின் சில பகுதிகள் ஸ்திரமற்று இருக்கும் இந்த சூழலில், இந்தியாவை உலகம் நம்பிக்கையுடன் பார்க்கிறது. ஆனால், விரக்தியில் முழுவதும் மூழ்கிப் போன சிலர் இந்தியாவின் வளர்ச்சியை ஏற்க மறுக்கிறார்கள். அவர்களால் 140 கோடி இந்தியர்களின் சாதனைகளைப் பார்க்க முடியாது.

நெருக்கடியான காலத்தில் மோடி தங்களுக்கு உதவ முன்வந்தார் என்பதை நாட்டு மக்கள் அறிந்துள்ளனர். அப்படியிருக்கையில், உங்கள் அவதூறுகளையும், குற்றச்சாட்டுகளையும் அவர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? என் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை ஏதோ செய்தித்தாள் தலைப்புச் செய்திகள், தொலைக்காட்சி செய்திகள் மூலம் வந்ததில்லை, மக்கள் சேவையில் பல ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் நான் இருந்ததன் காரணத்தால் வந்தது. நான் 140 கோடி இந்தியர்களின் நம்பிக்கையை பாதுகாப்பு கவசமாக அணிந்துள்ளேன். அதை எதிர்க்கட்சிகளின் பொய்களால் உடைக்க முடியாது.

எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை ஈடுபடுவதற்கு பதிலாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதில் கடந்த 9 ஆண்டுகளை வீணடித்து விட்டனர். தேர்தலில் தோல்வி அடையும் போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை குறை கூறுகின்றனர். தேர்தல் ஆணையத்தை விமர்சிக்கின்றனர். சாதகமான தீர்ப்பு தரவில்லை என்றால், உச்சநீதிமன்றத்தை விமர்சிக்கின்றனர். இப்படி 9 ஆண்டுகள் அனைத்தையும் எதிர்க்கும் கட்டாய விமர்சனத்தையே முன்வைத்துள்ளனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் 10 ஆண்டுகள் இந்தியாவின் இழந்த சகாப்தமாகத்தான் நினைவு கூறப்படுகிறது. 2014க்கு பிறகை விட, 2004-14க்கு இடையில், பணவீக்கம் அதிகமாக இருந்தது.

சுதந்திரத்திற்குப் பின், அந்த பத்தாண்டுகள் மிகவும் ஊழல் நிறைந்தவை. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, நாடு முழுவதும் தீவிரவாதத்தின் பிடியில் இருந்தது. ஜம்மு காஷ்மீர் முதல் வடகிழக்கு வரை, ஒட்டுமொத்த பிராந்தியமும் வன்முறையைத் தவிர வேறெதையும் காணவில்லை, அந்த 10 ஆண்டுகளில், உலக அரங்கில் இந்தியா மிகவும் பலவீனமாக இருந்தது, இந்தியாவின் பேச்சைக் கேட்க யாரும் தயாராக இல்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒவ்வொரு வாய்ப்பையும் நெருக்கடியாக மாற்றியது.

2008ல் நடந்த தாக்குதல்களை யாரும் மறக்க முடியாது. தீவிரவாதத்திற்கு எதிராக செயல்படும் தைரியம்இல்லாததால் ரத்தக்களரி மற்றும் அப்பாவி மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டது. இது ஐமு கூட்டணி அரசின் தவறான ஆட்சிக்கு சான்று. ஆனால், 2030ம் ஆண்டு வரை இந்தியாவின் தசாப்தமாகும். இந்தியா ஒரு உற்பத்தி மையமாக வளர்ந்து வருகிறது. நாட்டின் வளர்ச்சியில் உலகமே தனது செழிப்பை காண்கிறது. ஜனாதிபதி திரவுபதி முர்மு நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை அனைவருக்கும் உத்வேகம் அளிப்பதாக இருந்தது. இவ்வாறு பிரதமர் மோடி பதிலளித்தார்.

எதிர்க்கட்சிகள் கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர் மோடி, ராகுலின் எந்த கேள்விக்கும் பதில் தரவில்லை. அதானி பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. எனவே, பிரதமர் மோடி பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ், பிஆர்எஸ், இடதுசாரி கட்சி எம்பிக்கள் சிலர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

அதானியை பாதுகாப்பது தெளிவாகி விட்டது

பிரதமர் மோடியின் பதிலுரை குறித்து நாடாளுமன்றத்திற்கு வெளியே பேட்டி அளித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘‘பிரதமரின் உரை குறித்து எனக்கு திருப்தி இல்லை. ஆனால் ஒரு உண்மை மட்டும் தெரிந்து விட்டது. அதானியை மோடி பாதுகாப்பது தெளிவாகி விட்டது. அதோடு ஏன் அவரை பாதுகாக்கிறார் என்ற விஷயத்தையும் புரிந்து கொண்டேன். பாதுகாப்பு துறையில் போலி நிறுவனங்கள் அதன் மூலம் பணம் கைமாறுவது என்பது தேச பாதுகாப்பு பிரச்னை. நாட்டின் உள்கட்டமைப்பு தொடர்பான பிரச்னை என்பதால் தான் அதானியை மோடி பாதுகாக்கிறார். அதானி நண்பராக இல்லாவிட்டால் இப்படி எல்லாம் மோடி செய்வாரா? குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றல்லவா கூறியிருப்பார். இது மிகப் பெரிய மோசடி என்று கூட பிரதமர் சொல்லவில்லை. அதோடு எனது எந்த கேள்விக்கும் பிரதமரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை’’ என்றார்.

அமலாக்கத்துறை ஒன்றுசேர்த்தது    

பிரதமர் மோடி பேசுகையில், ‘‘முந்தைய ஆட்சியில் 10 ஆண்டுகள் செய்த ஊழல்கள் இன்று எதிர்க்கட்சிகளை புலனாய்வு அமைப்புகளின் கீழ் கொண்டு வந்து விட்டன. தேர்தல் முடிவுகள்தான் எதிர்க்கட்சிகளை ஒன்றுசேர்க்கும் என நினைத்தேன். ஆனால் வாக்காளர்களால் முடியாததை அமலாக்கத்துறை செய்து விட்டது. பல்வேறு கொள்கை வேறுபாடுகளை கொண்ட எதிர்க்கட்சிகளை ஒன்று சேர்த்ததற்காக அவர்கள் அமலாக்கத்துறைக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்’’ என கிண்டலடித்தார்.

Related Stories: