இந்தியா உள்பட பல நாடுகளை குறி வைத்த சீன உளவு பலூன்

வாஷிங்டன்: உளவு பலூன்கள் மூலம் இந்தியா உள்பட பல நாடுகளை உளவு பார்க்க சீனா திட்டமிட்டிருந்தது என்ற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க வான் பரப்பில் பறந்த சீன உளவு பலூனை  கடந்த வாரம் அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. அது சீனா அனுப்பிய உளவு பலூன் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியது.

இந்நிலையில், இந்தியா, ஜப்பான் உள்பட பல்வேறு நாடுகளையும் உளவு பார்க்க சீனா உளவு பலூன்களை அனுப்பியதாக  அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க  அதிகாரிகள் கூறுகையில்,‘‘சீனாவின் உளவு  பலூன்கள்  சீனாவின் தெற்கு கடற்கரையில் உள்ள ஹெய்னான் மாகாணத்தில் இருந்து பல  வருடங்களாக இயக்கப்பட்டு வருகிறது.

ஜப்பான், வியட்னாம், தைவான்,பிலிப்பைன்ஸ், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள், அங்கு உள்ள ராணுவ தளவாடங்கள் குறித்த தகவல்களை சீனா திரட்டியுள்ளது. உளவு பலூன்கள் 5 கண்டங்களில் பறந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது’’ என்றனர். இந்த உளவு பலூன் எப்போது இந்தியாவை உளவு பார்த்தது என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.

Related Stories: