துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 11,000ஐ தாண்டியது: இந்தியாவின் 3வது பேரிடர் குழு துருக்கி சென்றது

காசியான்டெப்:  துருக்கியிலும், சிரியாவிலும் ஏற்பட்ட வரலாறு காணாத நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. மீட்பு பணியில் கட்டிட இடிபாடுகளிடையே தோண்ட தோண்ட சடலங்கள் கண்டெடுக்கப்படுவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள காஜியான்டெப் நகரின் அருகே கடந்த திங்கள் கிழமை அதிகாலை 4 மணிக்கு 7.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், ஹட்டாய், கஹ்ராமன்மராஸ், தியார்பாகிர் உள்ளிட்ட 10 மாகாணங்கள் மற்றும் அண்டை நாடான சிரியாவின் எல்லையில் அமைந்துள்ள அலெப்போ, ஹமா நகரங்களிலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி நிலைகுலைய வைத்துள்ளது. இவ்விரு நாடுகளும் பேரழிவைச் சந்தித்துள்ளன.

அங்கு பல்லாயிரக்கணக்கான கட்டிடங்கள் இருந்த இடம் தெரியாமல் உருக்குலைந்து போய் உள்ளன. நிலநடுக்க மையப்பகுதியான பஜார்சிக்கின் தென்மேற்கில் அமைந்துள்ள ஹட்டாய் மாகாணத்தில் மட்டும் 1,500 கட்டிடங்கள் தரை மட்டமாகி இருக்கின்றன. இடிந்து தரை மட்டமான கட்டிடங்களின் இடிபாடுகளை ராட்சத கிரேன், பொக்லைன் உள்ளிட்ட நவீன இயந்திரங்களின் உதவியுடன் தோண்ட தோண்ட சடலங்கள் குவியலாக கண்டெடுக்கப்பட்டு வருவது நெஞ்சை உலுக்குவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இடிபாடுகளில் படுகாயங்களுடன் குற்றுயிராக கிடந்தவர்களும் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இரு நாடுகளிலும் சேர்த்து, முதல் 2 நாட்களில், 6 ஆயிரத்து 300 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் நேற்று இரவு நிலவரப்படி பலி எண்ணிக்கை 11,000 ஐ தாண்டி இருந்தது. துருக்கியில் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், சிரியாவில் 4,600 பேரும் காயம் அடைந்துள்ளனர்.

துருக்கியில் மட்டும் 60,000 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 3வது நாளான நேற்று கஹ்ராமன்மராஸ் பகுதியில் இருந்து 3 வயது சிறுவன் ஆரிப் கானும், அடியமன் நகரில் இருந்து 10 வயது சிறுவன் பீதுல் எடிசும் மீட்கப்பட்டனர். கட்டிட இடிபாடுகளில் இடுப்பு கீழ் புதைந்திருந்த நிலையில் இவர்களை பாதுகாப்பாக மீட்ட மீட்பு படையினருக்கு மக்கள் பாராட்டு தெரிவித்தனர். நிலநடுக்கத்தினால் பாதிப்புக்குள்ளாகி சீர்குலைந்த நிலையில் இருக்கும் இரு நாடுகளுக்கும் மனிதாபிமான அடிப்படையில் உலக நாடுகள் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் உதவிக்கரம் நீட்டி உள்ளன.

இந்தியாவில் இருந்து துருக்கி, சிரியாவுக்கு மீட்பு பணிகளில் உதவ மருத்துவக் குழு மற்றும் பேரிடர் மீட்பு குழுக்களும் சி-17 குளோபல் போர் விமானங்கள் மூலம் துருக்கிக்கும், மருந்து மற்றும் நிவாரணப் பொருட்களை சி-130ஜெ போர் விமானங்கள் மூலம் சிரியாவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில், இந்தியா நேற்று 51 பேர் கொண்ட 3வது பேரிடர் மீட்பு குழுவை துருக்கிக்கு அனுப்பி வைத்துள்ளது. மேலும், இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை கண்டறியும் சிறப்பு பயிற்சி பெற்ற 4 மோப்ப நாய்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதுவரை துருக்கிக்கு மட்டும் இந்தியா 102 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பி உள்ளது.

இடிபாடுகளில் சிக்கிய 10 இந்தியர்கள்: வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் சஞ்சய் வர்மா கூறுகையில், ``துருக்கியில் வசிக்கும் இந்தியர்களை பொறுத்தவரை அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். காணாமல் போன இந்தியர்களின் குடும்பத்தினருடன் ஒன்றிய அரசு தொடர்பில் இருக்கிறது. துருக்கி புறநகர் பகுதியில் உள்ள கட்டிட இடிபாடுகளில் 10 இந்தியர்கள் சிக்கி உள்ளனர். அவர்களில் ஒருவரை மட்டும் காணவில்லை. மற்ற அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்,’’ என்று தெரிவித்தார்.

Related Stories: