திருப்பூர் அருகே க்ளினிக் நடத்தி வந்த போலி மருத்துவர் பிடிபட்டார்: மாவட்ட நலப்பணிகள் இயக்குநர் போலீசில் புகார்

திருப்பூர்: திருப்பூர் அருகே ஊத்துக்குளி சாலையில் உள்ள எஸ்.பெரியபாளையத்தில் போலி க்ளீனிக் ஒன்று நடத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து நேற்று மாலை நலப்பணிகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் அருண்பாபு மற்றும் மகேஷ்குமார் தலைமையில் அப்பகுதியில் செயல்பட்ட நல்லாண்டவர் கிளினிக்கில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அந்த க்ளினிக்கை ராஜா (44) என்பவர் நடத்தி வருவதும் மருந்தாளுநர் (B Pharm) படிப்பு மட்டும் படித்த நிலையில் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததும், முறையாக மருத்துவம் படித்து பதிவு செய்த மருத்துவர்கள் பயன்படுத்தும் மருந்து மாத்திரைகளை நோயாளிகளுக்கு கொடுத்து சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

இது குறித்து விசாரணை மேற்கொண்டபோது ஆல்டர் நேட்டிவ் மெடிசின் முடித்து சிகிச்சை அளிப்பதாக கூறியுள்ளார்.மேலும் ஊசி மருந்துகள் கழிவுகளை தொற்று பரவும் வகையிலும், தமிழ்நாடு பயோ வேஸ்ட் மேனேஜ்மென்ட் சட்டப்படி கழிவுகளை அகற்றாமல் கையாண்டது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து அந்த கிளினிக் சீல் வைத்து மூடப்பட்டு ,இது குறித்து விசாரணைக்கு ராஜா இன்று திருப்பூர் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் முன்னிலையில் இன்று நடைபெற்ற விசாரணையில் அவர் மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்ததும் தெரிய வந்தது. எனவே அவர் போலி மருத்துவர் என்பது உறுதியானதால் ஊத்துக்குளி காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட இணை இயக்குநர் கனகராணி புகார் அளித்துள்ளார்.

Related Stories: