தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் உதகையை மிஞ்சும் அளவிற்கு பனி: பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்கு சென்றவர்கள் அவதி

தஞ்சாவூர்: தமிழ் நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் அதிகாலையில் நிலவிய கடும் பனிமூட்டத்தால் வாகன போக்குவரத்தில் சிரமன் ஏற்பட்டது. டெல்டா மாவட்டங்களில் பனி மூட்டத்தால் நெல்லின் ஈரப்பதம் மேலும் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிகாலை வேளையில் மூடுபனி நிலவி வருகிறது. பருவம் தவறிய மழையால் டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் பனிமூட்டத்தால் நெல்லின் ஈரப்பதம் மேலும் அதிகரித்து வருகிறது.

மழை, பனி, வெயில் என பருவநிலை மாறிவருவதால் நெற்பயிர்களை புகையார் நோய் தாக்க அதிக வாய்ப்புள்ளதாக மயிலாடுதுறை விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர், திருவாரூர் பகுதிகளிலும் கடும் பனிமூட்டம் இருப்பதால் 22 சதவீதம் வரை ஈரப்பதத்துடன் கூடிய நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். இதே போல தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் நிலவிய உறைபனியால் வாகன போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டது.

சென்னையில் கடந்த சில நாட்களாக அதிகாலையில் நிலவும் பனி மூட்டத்தால் விமான சேவைகளில் தாமதம் ஏற்பட்டுவருகிறது. மதுராந்தகம் உள்ளிட்ட கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளிலும் தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம் உள்ளிட்ட சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளிலும் மூடுபனி காரணமாக வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி குறைவான வேகத்தில் சென்றனர். இதே போல கடலூரில் மலை பிரதேசங்களை மிஞ்சும் அளவிற்கு கடும் பனி மூட்டம் காணப்பட்டது.

பனி தொடர்ந்து விலகாமல் இருந்ததால் சூரிய உதயத்தை காண வெகு நேரம் ஆனது. கடலூர் அண்ணா பாலத்திலிருந்து பார்க்கும் போது கெடிலம் ஆறு தெரியாத அளவிற்கு பனி படர்ந்திருந்தது. கரூர் மாவட்டம் குளித்தலையில் வேலைக்கு செல்வோரும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் குளிரில் நடுங்கிய படியே சென்றனர். வழக்கத்தை காட்டிலும் மூடு பனி அதிகரித்து காணப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதே போல ராமநாதபுரத்தில் காலை 8 மணி வரை பனிப்பொழிவு நீடித்தது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் இருந்ததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சுற்றுவட்டார பகுதிகள் வெண்போர்வை போர்த்தியது போல வெகு ரம்யமாக காட்சியளித்தன. செல்லம்பட்டி, கருமாத்தூர், வாலந்தூர், குப்பணம்பட்டி பகுதிகளில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. விருதுநகர் மாவட்டத்திலும் அடர்பனிமூட்டம் காணப்பட்டது. சிவகாசியிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலை உள்பட பல்வேறு சாலைகளிலும் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு இருந்தது. 

Related Stories: