புதுக்கோட்டையில் பருவம் தவறி பெய்த மழையால் சேதமான நெற்பயிர்களை காப்பாற்றும் பணியில் விவசாயிகள்

திருமயம் : புதுக்கோட்டை மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையால் சேதமான நெற்பயிர்களை காப்பாற்றும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி பணியை விவசாயிகள் மேற்கொண்டிருந்தனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு போதிய மழை பெய்யாததால் ஏற்கனவே நெற்பயிர்கள் போதிய நீரின்றி பல இடங்களில் கருகி வந்தது.

இந்நிலையில் எஞ்சிய பயிர்களை காக்க விவசாயிகள் தொடர்ந்து பாடுபட்டு நெற்றி வேர்வை நிலத்தில் சிந்தி உழைத்து வந்தனர். இந்நிலையில் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் அறுவடை பணிகள் நடைபெற்று வந்தாலும் பெரும்பாலான இடங்களில் அறுவடை பணிகள் 5 தினங்களில் தொடங்க இருந்தது.இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பருவம் தவறி மூன்று நாட்கள் பெய்த கனமழையால் ஆயிரக்கணக்கான இயக்கத்தில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியது.

குறிப்பாக புதுக்கோட்டை அடுத்த பெருங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பெருங்குடி, பாப்பம்பட்டி, வடக்குப்பட்டி, சேப்பலாம்பட்டி, கூத்தம்பட்டி, கொல்லக்குடி, பூவம்பட்டி, விளாங்குட்டான்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பெருங்குடி பெரிய கண்மாய் மற்றும் கிணற்று பாசனம் மூலம் 1500 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி பணிகளை கடந்த 6மாத காலமாக இந்த பகுதி விவசாயிகள் மேற்கொண்டனர். இன்னும் 5 தினங்களில் அறுவடை செய்ய அறுவடை செய்யும் இயந்திரங்களுடன் தயாராக இருந்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த மூன்று தினங்களாக பருவம் தவறி பெய்த கன மழையால் அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த 1500 ஏக்கர் பரப்பளவில், 1250 ஏக்கர் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்கதிர்கள் நீரில் மூழ்கியது. மூழ்கிய நெற்கதிர்கள் நீரில் சாய்ந்து அழுகி உள்ளது. இதனால் என்ன செய்வது என்றே தெரியாமல் விவசாயிகள் பரிதவித்தனர். பருவம் தவறி பெய்த 3 நாள் மழை 6 மாத விவசாயிகளின் உழைப்பையும், ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் பறித்து சென்று விட்டது.

ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து நெற்கதிர்களாக உருவாக்கிய நிலையில் தற்போது பெய்த மழை ஒட்டுமொத்த நெற்கதிர்களையும் சேதமடைய செய்துள்ளது. கடன் பெற்று விவசாய பணியில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு வாங்கிய கடனை கூட கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பருவம் தவறி பெய்த மழையால் சேதம் அடைந்த நெற்கதிர்களை கணக்கீடு செய்ய தமிழ்நாடு அரசு அமைத்துள்ள குழுவினர் தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வுப்பணி மேற்கொண்டது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் சேதமடைந்த நெற்கதிர்களை முறையாக ஆய்வு செய்ய வேண்டும். இதற்கான உரிய இழப்பீட்டை வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: