ஒடுகத்தூர் அடுத்த கீழ்கொத்தூர் ஊராட்சியில் இளைஞர்கள் மத்தியில் சீறிப்பாய்ந்த 200 காளைகள்-10 பேர் காயம்

ஒடுகத்தூர் :  ஒடுகத்தூர் அடுத்த கீழ்கொத்தூர் ஊராட்சியில் நேற்று நடந்த மாடு விடும் திருவிழாவில் இளைஞர்கள் மத்தியில் 200 காளைகள் சீறிப்பாய்ந்து ஓடியது. இதில் 10 பேருக்கு காயம் ஏற்பட்டது.வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த கீழ்கொத்தூர் ஊராட்சியில் நேற்று மாடு விடும் திருவிழா நடைபெற்றது. இதற்காக ஏற்கனவே இரு புறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. விழாவில், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க டிஎஸ்பி திருநாவுக்கரசு, வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் உலகநாதன், ஆகியோர் தலைமையில் 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

அதேபோல், அவசர கால ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மேலும், முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவ குழுவினரும் அங்கு முகாமிட்டிருந்தனர். விழாவிற்கு, ஊராட்சி மன்ற தலைவர் உதயகுமார், ஒன்றிய கவுன்சிலர் கணபதி ஆகியோர் தலைமை தாங்கினர். மேட்டுக்குடி குணசேகரன், விழா குழுவினர்கள் விஜயகுமார், ஸ்ரீதர், விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு கலந்து விழாவை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, காலை 10 மணிக்கு தாசில்தார் ரமேஷ், ஆர்ஐ நந்தகுமார் மற்றும் ஊர் முக்கியஸ்தாரர்கள், விழா குழுவினர் முன்னிலையில் உறுதி மொழி எடுத்தனர். பின்னர், மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் ஒவ்வொரு காளைகளும் ஒன்றன் பின் ஒன்றாக கட்டவிழ்த்து விடப்பட்டது.

பந்தய தூரத்தின் ஆரம்ப புள்ளியில் இருந்து காளைகளை அவிழ்த்து விட்டதும் காளையர்கள் மத்தியில் சுமார் 200 காளைகள் சீறிப்பாய்ந்து ஓடியது. விழாவிற்கு, திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி, ஆந்திரா, போன்ற பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான காளைகள் கொண்டுவரப்பட்டது.வீதியில் சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளை இருபுறமும் நின்றிருந்த இளைஞர்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர். இதனால், விழா களைகட்டியது.

இந்த விழாவை காண ஒடுகத்தூர் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர். விழாவில், குறைந்த நேரத்தில் இலக்கை அடைந்த காளைக்கு முதல் பரிசு ₹55 ஆயிரம், 2ம் பரிசு ₹44 ஆயிரம், 3ம் பரிசு ₹35 ஆயிரம் என மொத்தம் 52 பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும், நேற்று நடந்த மாடு விடும் திருவிழாவில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

Related Stories: