வரிவசூலில் விழுப்புரம் நகராட்சிக்கு 135வது இடம் 241 குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் துண்டிப்பு

*அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சியில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். சொத்துவரி, குடிநீர், பாதாளசாக்கடை இணைப்பு கட்டணம், கட்டிடங்களுக்கான வாடகை, தொழில்வரி உள்ளிட்ட வரிகளின் மூலம் நகரில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக வரிவசூல் தேக்கமடைந்த நிலையில் அனைத்து வரிகள், வாடகைகளின் பாக்கி ரூ.17 கோடியை கடந்துள்ளது. தமிழகத்தின் ஒட்டுமொத்த நகராட்சிகளான 138 நகராட்சிகளில் வரிவசூலில் விழுப்புரம் நகராட்சி 135வது இடத்தை பிடித்துள்ளது. மண்டல அளவில், 22 நகராட்சிகளில் 21வது இடத்தை பிடித்துள்ளது. வரிவசூலில் கடைசி இடத்தில் பின்தங்கியுள்ளதால் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ள முடியாத நிலைஉள்ளது.

எனவே நகராட்சியில் வரிபாக்கியை முழுமையாக வசூலிக்க நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது. இல்லையென்றால் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும் என்றும் எச்சரித்துள்ளது. இதனால், விழுப்புரம் நகராட்சியில் வரிவசூல் பணிகளை நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா தலைமையிலான அதிகாரிகள் முடுக்கிவிட்டு அவர்களாகவே களமிறங்கியுள்ளனர். குடிநீர் இணைப்பு மட்டும் 11,391 உள்ளது. இதில் ரூ.2.18 கோடி பாக்கி வைத்துள்ளதால், இணைப்புகள் துண்டிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த சில நாட்களில் மட்டும் 110 குடிநீர் இணைப்புகளை அதிகாரிகள் துண்டித்துள்ளனர். அதேபோல், பாதாளசாக்கடை இணைப்புகள் மொத்தம் 6,024 உள்ளது. இதில் ரூ.1.67 கோடி வரிபாக்கி உள்ள நிலையில் 131 இணைப்புகளை அதிகாரிகள் துண்டித்துள்ளனர்.

தினமும் இந்த அதிரடி நடவடிக்கையில் நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா தலைமையிலான அதிகாரிகள் களமிறங்கி மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா கூறுகையில், தமிழ்நாடு அரசு நகராட்சிகளில் வரிபாக்கியை வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக விழுப்புரம் நகராட்சியில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் வரிபாக்கியை கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இணையதளத்திலும் சென்று செலுத்தலாம். எனவே பொதுமக்கள் தாமாக முன்வந்து வரிபாக்கியை செலுத்தி, இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை, சீல்வைப்பு நடவடிக்கையிலிருந்து தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வணிகர்களுக்கு சிறப்பு முகாம்: விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட வணிக நிறுவன உரிமையாளர்கள் தொழில்வரி செலுத்துவதற்காக சிறப்பு முகாமை நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி வரும் 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை நகராட்சி அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

மேலும் புதிய தொழில்வரி விதித்திட அவர்களுக்கு தேவையான ஆவணங்களை சமர்பித்து புதிய தொழில்வரி விதித்துக்கொள்ளவும், நிலுவை வரியினை வரும் 25ம் தேதிக்குள் செலுத்தி அபராதத்தை தவிர்க்கவும் நகராட்சி ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அரசியல் தலையீட்டால் பணியில் சுணக்கம்

இதனிடையே நகராட்சியில் வரிவசூலின் போது அதிகாரிகள் நடவடிக்கையில் அரசியில் தலையீடு இருப்பதால் பணிகள் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழ்நாடு அரசு உத்தரவின்பேரில், வளர்ச்சிப்பணிகளுக்காக இந்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதால் வரிவசூல் பணியில் எந்த அரசியல் தலையீடு இருக்க வேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Stories: