தனித்துவமான தென் கைலாயம் - வெள்ளியங்கிரி!

தென்னிந்தியாவின் தொழில் நகரமான கோயம்புத்தூரில், தமிழகத்தின் பல முக்கியமான திருத்தலங்களும் அமைந்துள்ளன. பேரூர் பட்டீஸ்வரர் கோயில், அவிநாசியப்பர் திருக்கோயில், மருதமலை முருகன் கோயில், ஈஷா யோகா மையம் போன்ற ஆன்மிகத் தலங்கள் பல கொங்கு நாட்டின் தலைநகரில் உள்ளன. இந்தியாவில் அமைந்துள்ள சைவத் திருத்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது கோயம்புத்தூர் வெள்ளியங்கிரி மலை. ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கடுமையான மலைப்பாதையை கடந்து வெள்ளியங்கிரி ஆண்டவரை வழிபட வருகின்றனர்.  

கைலாய மலையைப் போல வெள்ளியங்கிரி மலையிலும் ஆதிசிவன் சிலகாலம் தவநிலையில் இருந்ததால் இது தென் கைலாயம் என்று போற்றப்படுகிறது. இந்த மலையில்தான் உமையாள் பார்வதி தேவியின் கோரிக்கைக்கு இணங்க, சிவபெருமான் பிரணவ தாண்டவத்தை ஆடியதாக சொல்லப்படுகிறது.  இந்த மலையில் இன்னும் ஏராளமான சித்தர்கள் கண்களுக்கு புலப்படாமல், அரூபமான தியானத்தில் ஈடுபடுவதாக சொல்கிறார்கள்.

ஏழு மலைகளைக்கொண்டது வெள்ளியங்கிரிக்கு யாத்திரை என்பது பரமனைப் படிப்படியாய் நெருங்குவதற்குச் சமம். இறைவனை நேசிப்பவர்களும் இயற்கையை நேசிப்பவர்களும் இதயம் கரைந்து சென்றுவரும் மலை, வெள்ளியங்கிரி. இந்த ஏழு மலைகளும் மனித உடலில் சூட்சுமமாக உள்ள ஏழுசக்கரங்களின் குறியீடு. பங்குனி, சித்திரை மாதங்களில் சிவகோஷம் எழுப்பிய வண்ணம் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக மலையேறி வழிபடுவது வழக்கம். ஆண்டு முழுவதும் மலையேற வருகிற பக்தர்களும் உண்டு. முன்பெல்லாம் கைகால்களால் தவழ்ந்து ஏறி வந்த இந்த மலையில் இப்போது படிக்கட்டுகள் வந்துவிட்டன.

முதல் மலை செங்குத்தான பாதைகொண்டது. சுனையில் நீர் குடித்து இரண்டாவது மலையில் உற்சாகமாக நடையிடும்போது, அதன் எல்லையாக நிமிர்ந்து நிற்கிறது வழுக்குப் பாறை ஒன்று. மூன்றாவது மலையும் ஒரு சுனையோடு துவங்குகிறது. இதற்கு ‘கைதட்டிச்சுனை’ என்று பெயர். இந்தச் சுனை இருக்கும் பகுதிகளில் சித்தர்கள் நடமாட்டம் மிகுதி என்பதால், இங்கே நின்று கை தட்டினால் பாறைகளின் இடுக்கிலிருந்து தண்ணீர் வரும் என்ற ஒரு நம்பிக்கை. இதனாலேயே கை தட்டிச் சுனை என்ற பெயர்.மூன்றாவது மலை முடிவடைவது இன்னொரு சுனையில். இதற்கு ‘பாம்பாட்டிச்சுனை’ என்று பெயர்.

நான்காவது மலை, சமதளத்தில் இருக்கிறது. நடந்து போக எளிதாகவும் பக்தர்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள வாய்ப்பாகவும் இந்த மலை விளங்குகிறது. இது மண் மலையாக இருக்கிறது. ஒருபுறம் அடர்ந்த வனமாகவும், மறுபுறம் பாதாளமாகவும் அமைந்திருக்கிறது. ஐந்தாம் மலைக்கு ‘பீமன் களியுருண்டை மலை’ என்று பெயர் உண்டு. ஐந்தாம், ஆறாம் மலைகள் ஏற்ற இறக்கம் நிரம்பியதாய், ஒன்றோடொன்று நெருக்கமாய் அமைந்திருக்கின்றன. இந்த இரண்டு மலைகளுக்கு நடுவில் சேத்திழைக் குகை உள்ளது. இந்தக் குகையில் ஒரே நேரத்தில் 60 – 70 பேர் வரை தங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆறாவது மலை, கீழ் நோக்கி இறங்கக்கூடியது. இங்கே பாயக்கூடிய சுனை ‘ஆண்டிசுனை’. இது நீலி ஆற்றில் சேர்கிறது. இங்கே குளிப்பது மறக்க முடியாத, சுகமான அனுபவமாக அமையும். ஐந்தாவது மற்றும் ஆறாவது மலைகள், வெள்ளை மணல் கொண்டவை. எனவே, இவற்றுக்கு ‘திருநீற்றுமலை’ என்றும் பெயர் உண்டு. இந்தத் திருநீற்று மலையிலிருந்து வெள்ளை மணலை இறைவனுடைய திருநீறாகவே போற்றி வீடுகளுக்குக் கொண்டு செல்வது பக்தர்களின் வழக்கம்.

‘சுவாமி முடி மலை’ என்று பெயர்கொண்ட ஏழாவது மலை மேல் ஏறுவது, முதல் மலையில் ஏறியபோது இருந்த அதே அளவு சிரமமும் சவாலுமானது. மலையேறி வந்த களைப்பும் நாம்தானா ஏறி வந்தது என்கிற மலைப்பும் பறந்து போகும்விதமாய் அடர்ந்த வனங்களின் மடியில் உயர்ந்த மலைகளின் நடுவில் யுகம்யுகமாய் கோயில்கொண்டு இருக்கிறார் வெள்ளியங்கிரி நாதன். கரிகால சோழனிடம் சமய முதலிகள் ‘வெள்ளியங்கிரிச் சாரலில் பிறந்தாலும், இருந்தாலும், இறந்தாலும் முக்தியே கிடைக்கும்!’ என்று தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது. வெள்ளியங்கிரியின் எந்தவொரு மலையையோ, லிங்கத்தையோ வழிபட்டாலும், அவர்கள் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய பலன்களைப் பெறுவார்கள் என்று தெய்வீக நூல்கள் தெரிவிக்கின்றன.

மலைகள் பொதுவாகவே மகிமை மிக்கவை. மண்ணுலகம் சிறக்கவும் அருள் நெறியில் ஈடுபட்டு மக்கள் தங்களை உணரவும் வேண்டிய வழிகாட்டுதல்களை வழங்குகிற அருட்களஞ்சியமாய், பேரருளின் பிரம்மாண்டமாய், தென் கயிலாயமாய் நிமிர்ந்து நிற்கும் வெள்ளியங்கிரி மலை தெய்வீகத்தின் உறைவிடம், ஞானத்தின் நிறைகுடம்!

மகாசிவராத்திரி சமயத்தில் ஆதியோகி ரத யாத்திரை தமிழகத்தில் பிரசித்தி பெற்ற ஒரு நிகழ்வாகும். எளிமையான மக்களுடைய தீவிரமான பக்தியினை இந்த நிகழ்வின்மூலம் உணரலாம். சென்னை, நாகர்கோயில் உள்ளிட்ட தொலைவான ஊர்களிலிருந்தும்கூட கோவை ஈஷாவில் நடக்கும் மஹாசிவராத்தியில் கலந்துகொள்ள பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்தே வருகின்றனர். அதிலும் அவர்கள் ஆதியோகி, நாயன்மார்கள் ஆகியோர் கொண்ட ரதங்களை 500 கிலோமீட்டர், 700 கிலோமீட்டர் எனும் அசாத்திய தூரங்களை கடந்து ரதத்தை இழுத்து வருகின்றனர். இத்தனை தூரம் ரதங்களை இழுத்து வந்தும், களைப்பில் உட்கார்ந்துவிடாமல் மகேசனைக்காண  வெள்ளியங்கிரி மலை ஏறி வருகிறார்கள் இந்த பக்தர்கள். அவர்களும் நம் அனைவரைப் போல வேலை, தொழில் செய்பவர்கள்தான் எனினும், தங்களின் பக்தியின் தீவிரத்தால் உந்தப்பட்டு 20, 25 நாட்களுக்கும் மேலான இப்படிப்பட்ட கடுமையான யாத்திரையை அன்பாக கசிந்துருகி செய்வது மெய்சிலிர்க்க வைக்கிறது.

Related Stories: