உதவி செய்ய சென்ற காவலருக்கு கத்திக்குத்து

ஆலந்தூர்: ஆலந்தூர் கண்ணன் காலனியை சேர்ந்தவர் விஜயன் (32). இவர், புதுப்பேட்டை ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் காவலர் விஜயன், தனது மைத்துனர் வாசுவுடன் பழவந்தாங்கல் மார்க்கெட்டில் காய்கறி வாங்க சென்றார். அப்போது, அஜ்மல் என்பவர் வாசுவுக்கு போன் செய்து, தன்னை அடையாளம் தெரியாத நபர்கள் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். உடனே வாருங்கள் என அழைத்துள்ளார். இதையடுத்து, காவலர் விஜயன், வாசு ஆகியோர் அஜ்மல் போன் செய்த இடத்திற்கு சென்று, அவரை அடித்தவர்களை தட்டிக்கேட்டுள்ளனர்.

இதனால், ஆத்திரமடைந்த 8 பேர் கொண்ட கும்பல், காவலர் விஜயனை கத்தியால் வெட்டி சரமாரி தாக்கிவிட்டு தப்பினர். இதில், பலத்த காயமடைந்த காவலர் விஜயனை மீட்ட அக்கம்பக்கத்தினர், அவரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு நெற்றியில் 5 தையல் போடப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, மருத்துவமனை நிர்வாகம் பரங்கிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: