ஒன்றாக தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்து குழந்தைகளுக்கு அனுப்புவதாக தலைமை காவலர் மிரட்டல்: கமிஷனர் அலுவலகத்தில் பெண் புகார்

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மணலி பகுதியை சேர்ந்த ராணி (38), (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் நேற்று புகார் ஒன்று அளித்தார். பின்னர் ராணி நிருபர்களிடம் கூறியதாவது: நான் ஊர்க்காவல் படையில் பணியாற்றிய போது, தலைமை காவலர் செல்லதுரை என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விவாகரத்து செய்துவிட்டு எனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறேன். செல்லதுரையும் அவரது மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக கூறி, என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். இருவரும் விவாகரத்து ஆனவர்கள் என்பதால், மறு திருமணத்திற்கு ஒப்புக்கொண்டேன்.

கடந்த 2020ம் ஆண்டு முதல் 2 ஆண்டுகள் கணவன், மனைவி போல் இருவரும் வசித்து வந்தோம். இதனால் நான் செல்லதுரைக்கு 2 புல்லட் பைக், பல்சர் பைக் என 3 பைக்குகள் வாங்கி கொடுத்தேன். பிறகு என்னை திருமணம் செய்துகொள்ளும்படி கூறியபோது, அவர் மறுத்து வந்தார். பின்னர் விசாரித்த போது அவர், மனைவியை விவாகரத்து செய்யாமல் என்னை ஏமாற்றி இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தேன். விசாரணைக்காக ஆயிரம்விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்ற போது, என்னை வழிமறித்து  புகாரை வாபஸ் வாங்க வில்லை என்றால் குழந்தைகளை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினார். இருவரும் தனிமையில் இருந்த வீடியோ என்னிடம் உள்ளது. அந்த வீடியோவை எனது 2 குழந்தைகளுக்கும் அனுப்பி விடுவதாகவும், சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுவதாகவும் மிரட்டி வருகிறார். எனவே, அவரிடம் உள்ள வீடியோவை கைப்பற்றி அழித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: